
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தொரு தீர்வு எட்டப்படுவதன் மூலமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இலங்கையின் நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும். இவ்வாறு யாழ். வந்த பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பிரதிநிதிகள் நேற்று தெரிவித்தனர்.
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்காக இந் தியா, சீனா போன்ற நாடுகள் உதவி வழங்கி வருவதால், மேற்கு நாடுகள் இலங்கைக்கான உதவிகளைக் குறைத்துள்ளன. என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டனின் தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டேவிட் ஆஷ்லி, அபிவிருத்திக்கும் அரசியலுக்குமான இரண்டாந்தரச் செயலாளர் டொமினிக் வில்லியம்ஸ், பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் உத்தியோத்தகர் அஷ்மா எட்றிஸ் மற்றும் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த சஷ்யா முலர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் நேற்று சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினரை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளின் பிரதிநிதிகளும் மேலும் தெரிவித்தவை வருமாறு:
யாழ்ப்பாண மக்களின தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காகவே நாம் இங்கு வருகை தந்தோம்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாடுகள் பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி இருந்தன.
இருப்பினும் தற்போது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்தியா மற்றும் சீனா அதிகளவிலான பொருளாதார உதவிகளை வழங்கி வருவதினால் மேற்குலக நாடுகள் இலங்கைக் கான உதவிகளைக் குறைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் வெகுவிரைவில் பிரிட்டிஷ் தூதரகத்தின் கிளை திறந்துவைக்கப்படும். மற்றும் இங்குள்ள மக்களின் ஆங்கிலக் கல்வி விருத்திக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நடந்து முடிந்துவிட்ட விடயங்களை விடுத்து இனி வரப்போகும் விடயங்கள் பற்றிச் சிந்திப்போம் என்றனர்.
home
Home
கருத்துரையிடுக