சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 62 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை தம்மால், கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படும் போது அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன.
ஆனால் சிறிலங்கா மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்படும் போது விரைவில் அவர்களை விடுதலை செய்யக் கோரும் போராட்டங்களை நடத்துவதில்லை.
அவ்வாறு சிறிலங்கா மீனவர்களும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தால் அதற்கு இந்தியா பதிலளிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்காவைச் சேர்ந்த பல மீனவர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்திய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால், தாமும் அதற்கு சாதகமான முறையில் பதிலளிக்கத் தயார் என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 தமிழ்நாட்டு மீனவர்களையும் ஜுலை 1ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களை சிறிலங்கா அரசாங்கம் அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளது.
home
Home
கருத்துரையிடுக