News Update :
Home » » விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் அரசியல் கட்சியாக பதிவு

விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் அரசியல் கட்சியாக பதிவு

Penulis : Antony on புதன், 17 மார்ச், 2010 | AM 1:46

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரித்தானியாவில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி தமிழீழத் தேசியத் தலைவரால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது.
தற்பொழுது ஆயுதங்கள் மௌனித்துள்ள நிலையில் இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது.
தேசியத் தலைவர் காட்டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருப்பதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிவரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து தாம் போராட்டத்தை முன்கொண்டு செல்வோம் என்று பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார்.
புலிச்சின்னமே தமது கட்சியின் சின்னமாக பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதாகவும், புலிக்கொடியேற்றப்பட்ட தமது கட்சி அலுவலகம் Unit G11, Lombard Business Park 2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP என்ற விலாசத்தில் விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது.
புலிகளின் அந்த அரசியல் கட்சியின் தலைவராக மாத்தையாவின் பெயரே பதியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரட்ணம் யோகி அவர்கள் விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் செயலதிபராக நியமிக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து கொண்டது.
இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாசவினால் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.
விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 1ம் திகதி வரை நடைபெற்றது.
1990ம் ஆண்டு ஆனி மாதம் ஆரம்பமான 2ம் கட்ட ஈழ யுத்தத்தைத் தொடர்ந்து இந்தக் கட்சியின் செயற்பாடு முற்றாகவே இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இன்றைக்கும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் கட்சியாக இருந்துவரும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவிலும் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :

+ கருத்துகள் + 1 கருத்துகள்

பெயரில்லா
17 மார்ச், 2010 அன்று PM 3:11

அனுபவம் இனிமையானது

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger