News Update :

இறுதிப் போரில் கோர அழிவுகள்

Penulis : Antony on புதன், 26 மே, 2010 | 9:19 AM

புதன், 26 மே, 2010


வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றிருக்கின்றன. அந்தப் பகுதிகள் நம்பமுடியாத அளவுக்கு பயங்கரமான அழிவுகளைக் கொண்டிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே காணநேர்ந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
விசுவமடு முதல் புதுக்குடியிருப்பு வரையான பகுதிகளை நேரில் சென்று பார்த்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அங்கம் வகித்த அவர் அங்கிருந்து திரும்பியதும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகள் படுபயங்கரமானவையாகவும் நம்ப முடியாத அழிவுகளைக் கொண்டவையாகவும் பார்ப்பதற்கே அதிர்ச்சியை அளிக்கின்றன.

போரின் அகோரத்தை நேரில் பார்வையிடுவது தாங்கமுடியாத வேதனையாக இருந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் அழிவுகள், அழிவுகள், அழிவுகள் மட்டுமே. விசுவமடு முதல் புதுக்குடியிருப்பு வரையான வீதியின் இருமருங்கும் அடிக்கொரு வாகனங்கள் எரிந்து கிடக்கின்றன. சகல வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன.

அங்கு மட்டும் என்றில்லை, கடந்த நான்கு நாள்களில் நாங்கள் பார்வையிட்ட வன்னிப் பகுதிகள் அனைத்திலும் அழிவுகளை மட்டுமே காணமுடிந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் எவ்வளவோ செல்வச் செழிப்புடனும் நிம்மதியுடனும் வாழ்ந்தவர்கள்.

இன்று அவற்றைத் தொலைத்த நிலையில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மீள்குடியேற்றம் தொடர்பாக அரசு விடும் அறிக்கைகளுக்கும் நேரில் நாங்கள் பார்த்த காட்சிகளும் இடையில் பெரியளவில் வித்தியாசங்கள், முரண்பாடுகள் உள்ளன.

மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு இப்போது அதிகளவில் உதவிகளும், ஆதரவும் உடனடியாகத் தேவையாக உள்ளன. விரைவில் அவர்களுக்கு அவை ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.
அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கிளிநொச்சி, தர்மபுரம், கண்டாவளை ஆகிய பகுதிகளில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், அரியநேத்திரன், செல்வராஜா, சிறிதரன், ஈ.சரவணபவன், ஆகியோர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சி நகரை நேற்றுக் காலை சென்றடைந்தனர்.

நகரில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

அதன்பின்னர் கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சென்றடைந்தனர், அங்குள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முறிகண்டி, சாந்தபுரம் பகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இக்கலந்துரையாடலில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறத் தாமதம் காட்டி வருவதற்கான காரணங்கள் குறித்து அம்மக்கள் விவரித்தனர். தமது உடமைகள் அபகரிக்கப்படுவது பற்றியும் முறைப்பாடு தெரிவித்தனர். தாம் தமது சொந்த இடங்களில் குடியமரவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து திருவையாறு வழியாகத் தர்மபுரம் மகாவித்தியாலயத்தை வந்தடைந்த குழுவினர் அப்பகுதியில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர். அங்கு இயங்கிவரும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் குழுவினர் உரையாடினர்.

கண்டாவளை மகாவித்தியாலயத்தைச் சென்றடைந்த இக் குழுவினர் இம்மாத முற்பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள், பிரச்சினைகளை அறிந்துகொண்டனர்.

இறுதியாகப் பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியூடாக புதுக்குடியிருப்பு வரையும் சென்று பார்வையிட்டனர். அப்பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் சென்று வர வும் அனுமதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
கருத்துகள் | | Read More...

போர்க்குற்றங்களில் ஐ.நா பங்கு

Penulis : Antony on செவ்வாய், 25 மே, 2010 | 1:05 PM

செவ்வாய், 25 மே, 2010


இலங்கையின் போர் குற்றங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் பங்கு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச சர்ச்சைகளுக்கான குழுவின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் பல்வேறு தருணங்களில் ஐக்கிய நாடுகள் சபை யுத்த குற்றத்துக்கு இடமளிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டு பணியாளர்களை முழுவதுமாக விலக்கிக் கொண்டமையை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் யுத்த காலத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் உள்நாட்டு பணியாளர்கள் பலர் பலியானதுடன், பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை முறையாக செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதமளவில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு மந்தமாக காணப்படுதாக அவர் அறிக்கை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான கடந்த கால நடவடிக்கைகள் கூர்ந்து அவதானிக்க வேண்டும் என, சபையின் முன்னாள் யுத்த குற்றவியல் ஆராய்வாளரும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருமான ஆர்பர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுத்தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பான் கீ மூனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் போது மிகவும் ஆவேசமாக இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பான் கீ மூன் மறுப்பு தெரிவித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...

இளவரசன் பிரபாகரன்

Penulis : Antony on திங்கள், 24 மே, 2010 | 10:10 AM

திங்கள், 24 மே, 2010


புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்து என்ற இத்தொடரில் பல்வேறு கோணங்களில் புதுமாத்தளனின் சோகங்களில் இருந்து விடுதலை பெற வழிகாட்டப்பட்டுள்ளது.

பாரதப்போரில் 13ம் நாள் அபிமன்யு வதம் வரை வேகமாக நகர்ந்து, அபிமன்யுவிற்குப் பிறகு சூல்கொண்ட மேகமாக திரும்பிய பாரதப்போர் போல இப்போது பதினெட்டாம் நாள் நிறைவுப்பகுதிக்குள் வந்துள்ளது.

பாரதப்போரில் அபிமன்யு வதம் வந்தது போல புதுமாத்தளன் போரில் ஆனந்தபுரத்து சுற்றிவளைப்பில் சிக்குண்டு மடிந்த கேணல் தீபனினதும் ஆயிரக்கணக்கான போராளிகளதும் மரணம் நிகழ்ந்தது.

ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது பாரதப்போரில் உரிமையை இழந்தவர்கள் உரிமையைப் பெற்றார்கள், இங்கோ உரிமையை இழந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உலகத்தில் வேதனைகளில் எல்லாம் பெரிய வேதனை.. தர்மம் தோல்வியடையும்போதுதான் ஏற்படும். அத்தகைய வேதனையை ஆற்றும் வல்லமை காலத்திற்கே உண்டு.

இதற்கு ஓர் உதாரணம் இராமாயணத்தில் இருக்கிறது. நாளை மகுடம் தரிக்கிறான் இராமன் என்று செய்தி காலையில் பரவியிருந்தது. அன்று மாலை கைகேயி ஆட்சி உனக்கில்லை என் மகன் பரதனுக்கே என்று கூறுகிறாள்.

தன் மகன் பரதனுக்கே ஆட்சி என்று அவள் தசரதனிடம் கேட்ட வரத்தால் தர்மம் தோல்வியடைந்திருந்தது.. எனவேதான் 14 வருடங்கள் இராமன் வனவாசம் போக வேண்டும் என்று அடுத்த நிபந்தனையைப் போட்டாள்.

தர்மத்தின் தோல்வியால் வரும் வலியை மறக்க கடவுளின் அவதாரமான இராமனுக்கே 14 வருடங்கள் வேண்டும் என்பது நாமறியும் காலத்தின் கணக்காகும். இல்லாவிட்டால் இராமன் அறுபது வருடங்கள் காடு போகவேண்டும் என்று கைகேயி கேட்டிருப்பாள்.

கவலையை ஆற்ற கடவுளுக்கே 14 வருடங்கள் தேவைப்படும்போது மனிதர்களாகிய நாம் எப்படி ஒரு வருடத்தில் மீண்டு வருவது .. சிந்திக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

உடனே சிறந்த பாடல் ஒன்றை எழுதினார். நேற்று இராட்சியம் உனக்கென்று சொன்னபோது இராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைபோல இருந்தது, அதேபோல இன்று இராட்சியம் உனக்கில்லை காடு போ என்று கைகேயி சொன்னபோதும் அதே தாமரை போலவே அவன் முகம் இருந்தது என்று எழுதி வைத்தார்.

ஒரு தாமரைப்பூவை சித்திரத்தில் வரைந்தால் அது வாடப்போவதில்லை. அதுபோல முகத்தை வைத்திருந்து இன்பம், துன்பம் இரண்டையுமே வெற்றிபெற்றான் இராமன் என்று கூறுவார் – இது கம்பர் வாசகருக்குக் கூறும் புத்திமதி.

ஆனால் அதற்குள்ளும் இன்னொரு கதையை உருள வைக்கிறது காலம். கானகத்தில் வாழும் 14 வருடங்களில் நடந்ததை நாம் படிப்படியாகப் பார்க்க வேண்டும். தர்மம் மறுபடியும் வெற்றி பெறுவதற்கான அத்தியாயங்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றன.

தர்மத்தின் தோல்வியால் கைகேயி பெற்ற அரசு அதற்குப் பின் பெருமைகள் எதுவுமே இல்லாமல் குலைந்து போய்விடுகிறது. 14 வருட முடிவில் பரதன் தீ வளர்த்து தற்கொலை செய்யப்போக இராமன் வந்து அவனைக் காப்பாற்றும்போதுதான் மறுபடியும் அயோத்தியில் ஓர் அரசு இருக்கிறது என்ற நினைவு நமக்கே வருகிறது.

அப்போது இராமன் கானத்தில் மடிந்துவிட்டதாக பலர் கூறினார்கள்.. அவன் இறந்தது போல மாயமான் வேடமிட்டு ஒருவன் அலற சீதையே ஏமார்ந்தாள்.. இராவணன் அவளைக் கடத்திச் சென்றான்..

அதுபோல பிரபாகரன் இறந்துவிட்டதாக பல மாயமான்களின் அலறல் கேட்கிறது..

இருந்தாலும் பிரபாகரன் என்ற வீரன் களத்தில் இல்லாத இலங்கைக்கு இராமன் இல்லாத அயோத்தி போல இனி எந்தப் பெருமையும் ஏற்படப்போவதில்லை.

அந்த வீரனும் அவன் தம்பியரும் நடாத்திய போராலும், சாதனைகளாலும் உலகம் இலங்கை என்ற தீவையே கடந்த 30 வருடங்களாகப் பேசிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு இராணுவ முகாம்களாக உடைத்துத் தகர்த்து அவன் புலிக்கொடியை ஏற்றியபோது உலகம் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தது. உலகின் மிகச்சிறந்த கெரில்லாப்படைத் தலைவன் பிரபாகரனே என்று பீ.பீ.சியே தேர்வு செய்தது..

மில்லர் நெல்லியடி மகாவித்தியாலயத்தை தகர்த்தபோது இந்திய இராணுவமே இலங்கையில் இறங்கியது..

திலீபன் நீரே அருந்தாது மடிந்தபோது இந்திய இராணுவம் வெளியேறும் நாள் எழுதப்பட்டது.

இந்திய இராணுவத்தையே சுண்டு விரலால் வர வைக்கவும், அதுபோல போக வைக்கவும் முடியுமென உலகிற்குக் காட்டிய உன்னதத் தலைவனாக அவர் இருந்தார்.. மற்றவர்கள் இந்தியாவின் சுண்டு விரலுக்கு ஓடிப்போகிறார்கள் வருகிறார்கள்..

ஒரேயொரு வீரத் தமிழனைத் தேடி உலகில் பெரிய இராணுவத்தைக் கொண்ட சீனா, உலகின் பெரிய சக்தியான அமெரிக்கா, அணுகுண்டைத் தூக்கிய அத்தனை வல்லரசுகளும் வன்னிக்கு வந்து இறங்கினவே ஏன்..

ஒரு தமிழனுக்கு இந்த உலகம் இணை என்று கூறி, வன்னி மண்ணுக்கு உலகத்தையே வரவழைத்தான் தம்பி பிரபாகரன்.

தமிழீழத்தை அமைத்தாலும் செய்ய முடியாத பெரும் சாதனையல்லவா இது…

விமானப் படையை அமைத்து வானில் எழும்பி மாவீரர் சமாதிக்கு மலர்மாரி வீசச் செய்தானே.. ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழனுக்கு வாய்க்காத பெருமையல்லவா அது..

இப்படி அவன் புகழை எழுதிக்கொண்டே போகலாம்…

பிரபாகரன் களத்தில் இருக்கும்வரைதான் இலங்கைக்கு பெருமை..

இராமன் இல்லாத அயோத்திக்கு ஏது பெருமை…

பிரபாகரன் இல்லாத இலங்கைக்கு ஏது பெருமை..

சரி..

இனி நிறைவுக் கேள்விக்கு வருவோம்…

எங்கே பிரபாகரன்..

உலகத்தில் பிறந்த மனிதர் எல்லோரும் என்றோ ஒருநாள் இறக்கிறார்கள்.. ஆனால் இறப்பிற்கு முன்னரே அவ்விடத்தை விட்டு சென்று வாழ்ந்து கொண்டே இருக்கும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட ஒரு சிலரில் பிரபாகரனும் அடக்கம்..

போர்க்களத்தில் இருக்கும்வரை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பிரபாகரன் தான் இறுதியாக எடுத்த முடிவை தனது உடன் பிறப்புக்களுக்குக் கூட சொல்லவில்லை..

இருக்கிறார் என்று யாராவது கூறினால் அவரைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்..

இல்லை என்று சொன்னால் அதையும் உறுதிப்பட நிறுவ வேண்டும்..

இரண்டுக்குமே போதிய ஆதாரங்களில்லை..

இப்படியான உறுதியற்ற நேரத்தை உலக அறிஞர்கள் கொன்ஸ்பிரேசன் தியரி என்ற கோட்பாட்டின் மூலம் விளக்குவார்கள். மனித குலத்தால் நம்ப முடியாத உண்மையாக அது நிலவும்..

இதோ புதுமாத்தளன் ஒராண்டு நினைவலைகளின் போது டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியான மூன்று கொன்பிரேசன் தியரிகளை முதலில் இங்கே தருகிறேன்..

01. ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி 1962ம் ஆண்டு பிரபல நடிகை மார்லின் மன்றோ மரணமடைந்தார். அவர் மரணம் தற்கொலை என்று கூறப்பட்டது. அவர் கையில் நச்சு மாத்திரையை போட்டபோது நீர் பருகிய ஒரு கிளாஸ் கிடந்தது.. ஆனால் அவருடைய வயிற்றில் ஒரு மாத்திரையைக் கூட காண முடியவில்லை.. அவரின் முடிவு மரணமா இல்லையா என்பதை நிறுவ இன்றுவரை ஆதாரமில்லாமலிருக்கிறது.. அதற்கு முன்னரே ஒரு மர்மமான பொழுது நகர்ந்துள்ளது.. அதற்குள் அவர் நடந்துவிட்டார்..மார்லின் மன்றோ இறக்கவில்லை..

02. மைக்கல் ஜாக்சன் இறந்துவிட்டதாக உடலத்தைக் காட்டிய போதும் யூரியூப் வெளியிட்ட வீடியோ அவர் நடமாடுவதைக் காட்டியது. தற்போது புதிய விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.. அவர் உயிர் வாழ்கிறார் என்பதைக் காட்ட..
உண்மையில் ஜாக்சன் இறக்கவில்லை..

03. இதுபோல பொப்பிசைப் பாடகர் எல்விஸ் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய கல்லறையில் உள்ள பெயரில் தற்செயலாக ஓர் எழுத்து பிழையாகவே பதியப்பட்டுள்ளது.. ( ஆதாரங்கள் மெற்றோ எஸ்க்பிரஸ் 19.05.2010 பக்கம் 34 )

உடலங்களைக் காட்டினாலும் சிலர் இறப்பதில்லை என்று கூறப்படும் உதாரணங்களில் இந்த மூன்று உலகப் பிரபலங்களும் அடக்கம்..

இதுபோல எத்தனை உடலங்கள் காட்டப்பட்டாலும், எத்தனை கதைகள் கூறப்பட்டாலும் இறப்பில்லாத ஒரு தேவமகன் பிரபாகரன் என்பதே பிரபாகரனுக்கான கொன்ஸ்பிரேசன் தியரி ஆகும்.

பிரபாகரன் இருக்கிறாரா..? இல்லையா..? என்பதைவிட பெரிய கேள்வி இன்று உலகில் எதுவுமே கிடையாது.. அதுதான் அவருடைய வலிமை.

இனி நடக்கப் போகும் ஒவ்வொரு நாடகத்தையும் அந்த வலிமையே தோன்றாத் துணையாக நின்று நடாத்தி, ஈழத் தமிழினத்திற்கு விடிவைத் தரப்போகிறது..

இதுதான் நமது நம்பிக்கைக்கான ஆதாரம்…

கடந்த 17.04.2010 அன்று முதல் முதலாக மேடையேறிப் பேசிய பிரபாகரனின் சகோதரன் வேலுப்பிள்ளை மனோகரன் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று பேசுவதற்காக வரவில்லை. மேடையில் அவரை அறியாமலே அந்த வாசகத்தை உச்சரித்துவிட்டார்..

எல்லோரும் ஆச்சரியப்பட்டோம்..

சத்தியமாகச் சொல்கிறேன்… ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை என்றார்..

அன்றிரவு..

என்றுமே அவருடைய கனவில் வராத பிரபாகரன் அன்று அவருடைய கனவில் வந்தார்.. , அண்ணா நீ பேசியது தவறல்ல அதுவே சரி.. , என்று கூறிவிட்டுப்போனார்..

பிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர் இறப்பில்லா இளவரசன் என்பதே அவருக்காக நாம் எழுதக்கூடிய புதிய கொன்ஸ்பிரேசன் தியரியாகும்..

எல்லோரும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையான புலி வீரர்கள் அதைவிட முக்கியமான ஒரு வாசகத்தை அடிக்கடி கூறுவார்கள்..

முக்கியம் எங்கள் கண்களை உற்றுப் பார்க்காதீர்கள்.. அதைவிட முக்கியம் நாங்கள் எங்கேயென்று தேடாதீர்கள்.. இதுதான் அந்த வாசகம்..

அன்று என்போன்ற சாதாரண பொது மக்களால் அதைப் புரிய முடியவில்லை.. ஆனால் இன்றுதான் அது எனக்குப் புரிகிறது..

உற்றுப் பார்க்காதீர்கள்…

எங்கேயென்று தேடாதீர்கள்…

பிரபாகரனின் தகவல்கள் காற்றிலும், தேவைப்படின் கனவிலும் உங்களுக்கு வரும்…

பிரபாகரன் தமிழர் மட்டுமல்ல சிங்களவரும், இந்தியரும் அதுபோல உலகின் அனைவருமே நலமாக சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றே நினைக்கிறார்…

கவலை வேண்டாம் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்…
கருத்துகள் | | Read More...

தவிக்கும் இலங்கை தமிழ்ச் சிறுவர்கள்

Penulis : Antony on ஞாயிறு, 23 மே, 2010 | 3:44 PM

ஞாயிறு, 23 மே, 2010


பள்ளிக்குச் செல்ல முடியாமல் இலங்கையில் 60 ஆயிரம் தமிழ் மாணவ,​​ மாணவிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்,​​ இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான டி.எம்.​ சுவாமிநாதன் நிருபர்களிடம் கொழும்பில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றி பெற்று ஓராண்டு கடந்துவிட்டது.​ ஆனால் வன்னி உள்ளிட்ட வடக்கு இலங்கைப் பகுதியில் பள்ளிகள் சரிவர நடைபெறுவதில்லை.
இந்தப் பகுதிகள் போருக்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.​ இந்த நிலையில் போரில் வெற்றி பெற்றதையடுத்து இப்பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் வசம் வந்துவிட்டது.
வடக்கு இலங்கைப் பகுதியில் மொத்தம் 300 பள்ளிகள் உள்ளன.​ இவற்றில் 194 பள்ளிகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.​ இங்கு 86 ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.​ ஆனால் தற்போது வெறும் 26 ஆயிரம் சிறுவர்கள் மட்டுமே பள்ளி செல்ல முடிகிறது.
எஞ்சியுள்ள 60 ஆயிரம் சிறுவர்கள்,​​ பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை.​ காரணம் அங்குள்ள பள்ளிகள் திறக்கப்படவில்லை.​ இலங்கை அரசு இப்போதாவது நடவடிக்கை எடுத்து பள்ளிகளைத் திறக்கவேண்டும்.
சமுதாயத்துக்கு அடிப்படைத் தேவையான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.​ பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவ,​​ மாணவியர்களுக்கு உதவவேண்டும்.
மேலும் போரின்போது வன்னிப்பகுதியில் 60,900 வீடுகள் நாசமாக்கப்பட்டன.​ இதனால் அப்பகுதி மக்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர்.​ வீடிழந்துள்ள தமிழர்களுக்கு,​​ தமிழ் வம்சாவளியினர் வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.​ இந்த வாய்ப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தர ஏற்பாடு செய்யவேண்டும்.
போரின்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ரூ.1,590 கோடியை இலங்கைக்கு வழங்கியது.​ ஆனால் இதில் வெறும் ரூ.38 கோடி நிதியை மட்டுமே இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது.
இதன்மூலம் வடக்குப் பகுதியில் மறுசீரமைப்புப் பணிகளை செய்வதில் இலங்கை அரசு எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியது.​ இதன்மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் 8 சிமென்ட் மூட்டைகள் கிடைக்கும்.​ ஆனால் இது போதுமானதாக இல்லை.​ மற்ற நாடுகள் தரும் உதவியுடன் இலங்கை அரசும் இணைந்து மறுசீரமைப்புப் பணிகளைச் செய்யவேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் | | Read More...

போராளி கொடூரக் கொலை


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவரை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக கொலை செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இவர் யார், எந்தப் பகுதியில் இந்த கொடுமை நடந்தது, எப்போது நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போராளி இளைஞரை உயிருடன் பிடித்து மிகக் கடுமையாக சித்திரவதை செய்துள்ளதுபோலத் தெரிகிறது. தென்னை மரத்தில் வைத்து அந்த இளைஞரை கட்டி வைத்து கொடூரமாக சித்திரவதை செய்தது போல தெரிகிறது.

ஒரு புகைப்படத்தில் கையில் கத்தியுடன் ஒருவன் நிற்கிறான். அந்த போராளியின் உடலில் ரத்தம் ஓடியுள்ளது. குத்துயிரும் குலையுருமாக காணப்படும் அந்த இளைஞர் பின்னர் பிணமானதாக தெரிகிறது. அந்த இளைஞரின் ரத்தம் தோய்ந்த உடலில், விடுதலைப் புலிகள் இயக்க கொடி போர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துரைத்திருக்கும் தடவியல் நிபுணர் ஒருவர், குறிப்பிட்ட அரசியல் போராளியின் மூளையின் சில பகுதிகள் அவரது கழுத்தில் வீழ்ந்துகிடப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஈழத்தில் சிங்கள படையினரின் வெறியாட்டம் தொடங்கியது. அன்று ஓடத் தொடங்கிய தமிழர்களின் ரத்த ஆறு, மே மாதம் 18ம் தேதி வரை நிற்காமல் தொடர்ந்தது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கணக்கே இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாபாதக படுகொலைகள் குறித்த உண்மை இதுவரை தெரியாமலேயே மறைக்கப்பட்டு விட்டது.

போரின் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மகா கொடூரமாக கொத்து குண்டுகளை வீசி கூண்டோடு கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும், சிங்களத்தவரின் கொடூரங்கள் குறித்தும் சமீப காலமாக வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து கொன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger