
இலங்கையின் போர் குற்றங்களில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் பங்கு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச சர்ச்சைகளுக்கான குழுவின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளருமான லூயிஸ் ஆர்பர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் பல்வேறு தருணங்களில் ஐக்கிய நாடுகள் சபை யுத்த குற்றத்துக்கு இடமளிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறிப்பாக கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டு பணியாளர்களை முழுவதுமாக விலக்கிக் கொண்டமையை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் யுத்த காலத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் உள்நாட்டு பணியாளர்கள் பலர் பலியானதுடன், பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை முறையாக செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதமளவில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு மந்தமாக காணப்படுதாக அவர் அறிக்கை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான கடந்த கால நடவடிக்கைகள் கூர்ந்து அவதானிக்க வேண்டும் என, சபையின் முன்னாள் யுத்த குற்றவியல் ஆராய்வாளரும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருமான ஆர்பர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுத்தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பான் கீ மூனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் போது மிகவும் ஆவேசமாக இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பான் கீ மூன் மறுப்பு தெரிவித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக