News Update :
Home » » தமிழ் மக்களை கவர்ந்துள்ள சர்வதேச நீதி

தமிழ் மக்களை கவர்ந்துள்ள சர்வதேச நீதி

Penulis : Antony on திங்கள், 29 நவம்பர், 2010 | AM 11:52


உலகில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், நிறுவனங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் தவிக்கும் விடயம் என்னவெனில், பல சர்வதேச சட்டங்கள், நவீன மயப்படுத்தப்பட்ட நீதித் துறைகள் போன்றவை செயற்பாட்டிலிருந்தும் சர்வதேச குற்றங்களான சித்திரவதை, ஓர் இனத்தை பூண்டோடு அழித்தல், மனிதாபிமான போர் குற்றங்கள் என்பன தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையேயாகும்.


இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து (1945) அமைக்கப்பட்ட ‘‘நியூரம் பேர்க் விசாரணைகள்’’ 1948 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமை பிரகடனம், இனத்தை பூண்டோடு அழிப்பதற்கு எதிரான பிரகடனம் ஆகிய வழிமுறையில் பல புதிய சர்வதேச ஆவணங்கள், பிரகடனங்கள் உருவாகின.

சர்வதேச நீதியின் வரைவிலக்கணம் மிகவும் சிக்கலானது. கல்விமான்களின் ஆய்வுகளும் விவாதங்களும் ‘‘சர்வதேச நீதி’’ என்பது 1948 ஆம் ஆண்டு பிரகடனங்கள், சட்டங்களில் கூறப்பட்ட சாரங்களில் அறிவுறுத்தப்படுவதாகவும் ஆகையால் ‘‘சர்வதேச நீதி’’ என்பது ஏறக்குறைய ஆறு சகாப்தங்களாக நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எதிராக கல்விமான்கள், ‘‘சர்வதேச நீதி’’ என்ற சொற்பதம் முன்பு பாவனையில் இருக்கவில்லையென்றும் எனவே இது ஒரு புதிய நடைமுறை என்பது மட்டுமல்லாது, இது ஒரு நாட்டினுடைய இறைமையைப் பாதிப்பதாகவும் உள்ளதாக கூறுகிறார்கள்.

2002ம் ஆண்டு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் வருகையை தொடர்ந்தும், இச் ‘‘சர்வதேச நீதி’’ பலமாக இருப்பதற்குரிய முக்கிய காரணம் சர்வதேசக் கிரிமினல் நீதிமன்றத்தினால் உலகில் 2002 ம் ஆண்டுக்குமுன் நடைபெற்ற எந்த சர்வதேச குற்றங்களையும் விசாரிப்பதற்கு தகைமை பெறவில்லை.

அணுகுமுறைகள்

இச் ‘‘சர்வதேச நீதி’’ என்பது எவ்வழியில் முக்கியம் பெற்றுள்ளது என்பதை நாம் ஆராய்வோமானால், உலகில் நடைபெற்ற இன, தேசிய, வர்க்க முரண்பாடுகளின் பொழுது இடம்பெற்ற பல சர்வதேச குற்றங்களை, நாடுகள் உள்நாட்டு நீதிமன்றங்களில் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு அரச மன்னிப்புடன் பதவிகள், பட்டங்கள் வழங்கியவையே காரணிகளாகின்றன.

‘‘சர்வதேச நீதி’’க்கு ஒரு தனிப்பட்ட சட்டமோ, உடன்படிக்கையோ, பிரகடனமோ உலகில் கிடையாது. ஆனால் ஒரு நாடு, சித்திரவதை, இன அழிப்பு போன்ற சர்வதேச ஆவணங்களை ஏற்பதுடன் ஜெனிவா சட்டங்களை மிக மோசமாக மீறுவதும் “சர்வதேச நீதி' நடைமுறைக்கு வருகிறது.'

‘‘சர்வதேச நீதி’’ நடைமுறைப்படுத்துவதற்கு குற்றவாளியோ அல்லது பிரதிவாதியோ அந்த நீதிமன்றம் உள்ள நாட்டிலோ அல்லது குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து வேறு நாட்டில் இருக்க முடியும்.

பொதுவாக ஒரு நாட்டுடைய நீதிமன்றங்கள், தேசிய சட்டத்திற்கு அமையவே குற்றவாளிகளை விசாரிக்கவும் தண்டிக்கவும் உரிமை உடையன. ஆனால் அந்த நாடு சில சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச சட்டங்கள், பிரகடனங்களில் கையெழுத்திட்டிருக்கும் நிலையில் சர்வதேச சட்டம், சர்வதேச குற்றத்திற்கான சான்றுகள் குற்றவாளிகள் மீது முன் வைக்கப்படும் நிலையில் அவ்வழக்கை விசாரிப்பதற்கு தகைமை பெறுகிறது.

உலகில் தற்பொழுது நூற்றுக்கு மேலான நாடுகள் ‘‘சர்வதேச நீதி’’யை நடைமுறைப்படுத்த தகைமை பெற்றிருந்தாலும், சில நாடுகளே சர்வதேச குற்றங்களை விசாரித்து, நீதி வழங்கியுள்ளன. பெரும்பாலான நாடுகளில் அரசியல் தலைமைகளின் காழ்ப்புணர்வு காரணமாக ‘‘சர்வதேச நீதி’’ நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1945 ஆம் ஆண்டு ‘‘நியூரம் பேர்க் விசாரணைகள்’’ பின்னர் ஏறக்குறைய இருபத்து எட்டு நாடுகள் சர்வதேச நீதியில் கரிசனை கொண்டுள்ளன. அவையாவன: ஆர்ஜென்னரின, அவுஸ்திரேலியா, ஓஸ்திரியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், டென்மார்க், கிழக்கு தீமோர், பின்லாந்து, ஜேர்மனி, குவாட்டமலா, ஐஸ்லாந்து, இஸ்ரேல், மெக்ஸிக்கோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நோர்வே, பேரு, ருவாண்டா, சிலி, செனகல், தென்னாபிரிக்கா, ஸ்பானியா, சுவீடன், சுவிற்சர் லாந்து, துருக்கி, பிரித்தானியா, அமெக்கா போன்ற நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன், ஆபிரிக்கயூனியன் போன்றவையும் இணைத்துள்ளன.

பிரித்தானியா

தற்போதைய பிரித்தானிய சட்டவரையறையினுள், சர்வதேச குற்றத்திற்கான நீதி மன்றம் ஏற்கக் கூடிய ஆதாரங்களை கொண்ட தனி நபரோ அல்லது அமைப்போ குற்றம் இழைத்தவரென சந்தேகிக்கப்படுபவர் மீது வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை உண்டு. இவ் வழக்கை பிரித்தானிய நீதிமன்றம் ஏற்கும் நிலையில் குற்றவாளியென கூறப்படுபவர் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யும் வேளையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்.

பிரித்தானிய சட்டத்தில் ஒரு நாட்டுடைய தலைவர் உத்தியோக பூர்வமாக வருகை தரும் வேளையில் அரச பாதுகாப்புக்கு (immunity) தகைமை உடையவரா என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் உத்தியோகப்பற்றற்ற விஜயத்தின் பொழுது யாருக்கும் அரச பாதுகாப்பு கிடையாது. இதற்கு நல்ல உதாரணமாக 1998 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட சிலி நாட்டின் இராணுவ சர்வாதிகாரியான பினசேவ் அமைகிறார். இவரது உடல் நிலை காரணமாக பிரித்தானியா பினசேவ்வை விடுதலை செய்தது.

ஆனால் அன்றைய பிரித்தானிய அரசும், இன்றைய அரசும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில், பிரித்தானியாவில் உள்நாட்டவர்கள், வெளிநாட்டவர் உட்பட சகலரும் ‘‘சட்டத்திற்கு உட்பட்டவர்களே’’. 2005 ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் உத்தியோக பூர்வமாக இஸ்ரேலிய பிரதமர் ஆரியல் சரோனை அழைத்திருந்தார். பிரித்தானியாவில் பெரும் தொகையான இஸ்ரேலிய சட்ட வல்லுனர்கள் இருந்த பொழுதும், ஆரியல் சரோன், ரொனி பிளேயரின் அழைப்பை ஏற்க மறுத்ததுடன், அவர் கூறியதாவது, ‘‘நான் அறிந்தவரையில் பிரித்தானிய சிறைச்சாலைகள் மிகவும் கடுமையானவை. அதனுள் ஒன்றில் அடைபடுவதை நான் விரும்பவில்லை’’ யெனக் கூறியுள்ளார். பல நாடுகளின் அழுத்தம் காரணமாக பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள சட்டம், சிறு குற்றங்களுக்கு வழக்குத் தொடர முடியாத வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

மற்றைய நாடுகள் பொதுவாக கூடுதலான ஐரோப்பிய நாடுகளில் ஏதோ ஒரு முறையில், சர்வதேச குற்றம் புரிந்த ஒருவர் மீது வழக்குத் தொடரவும் அவரை தடுத்து விசாரிப்பதற்குமான நிலைமைகளே காணப்படுகின்றன.

இதற்கு நீதிமன்றங்களினால் ஏற்கக் கூடிய ஆதாரங்களும், சளைக்காமல் முயற்சிக்கக் கூடிய தனி நபரோ அல்லது அமைப்போ முன்வர வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு நல்ல வழக்கறிஞர்களும் இவர்களுக்கு தேவையான ஊழியத்தை வழங்கக் கூடிய நபர்களும் முன்வர வேண்டும்.

இவற்றைத் தாராளமாகக் கொண்டிருந்தால் ஒரு நாட்டின் தலைவரையோ அவருடன் கூடிய மந்திரிமார்கள், இராணுவ தளபதிகளை சர்வதேச குற்ற அடிப்படையில் ‘‘சர்வதேச நீதி’’ கேட்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ஐரோப்பாவில் பெல்ஜியத்தில் இருந்த பல வாய்ப்புக்கள், சட்டங்கள் மாற்றப்பட்டாலும் கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அத்துடன் டென்மார்க் போன்ற பல நாடுகளில் இதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஜேர்மனியில் சர்வதேச குற்றம் புரிந்தவரை விசாரிப்பதா இல்லையா என்பது முழுக்க முழுக்க அரச தொடுனர் கையிலேயே தங்கியுள்ளது.

இதேபோல் பிரான்ஸில், சித்திரவதை மேற்கொள்ளப்பட்டது என்ற அடிப்படையிலேயே சர்வதேச குற்றத்திற்கு வழக்குத் தொடர முடியும். கனடாவில் இன அழிப்புக்கும், சித்திரவதைக்கும் எதிராக வழக்கு தொடரமுடியும்.

சர்வதேச நீதி வேண்டி வழக்கு தொடர சந்தர்ப்பம் கூடிய நாடாக, நெதர்லாந்து காணப்படுகிறது. ஸ்பானியாவில் இதற்கான வாய்ப்பு தற்பொழுது மிகக் குறைவாகக் காணப்பட்டாலும,; ஸ்கன்டினேவியன் நாடுகளிடையே இதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

ஆகையால் விதிமுறைகள், சட்டங்களை சரியான முறையில் அணுகினால் உள்நாடுகளில் சட்டம் மறுக்கப்பட்டவர்களுக்கு சர்வதேசரீதியாக நீதி கிடைக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger