
யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில், தாம் வடக்கிற்கு சென்றிருந்த போது தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தம்மை காப்பாற்றியது வடக்கு தமிழ் மக்களே என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற ஏற்றுமதி இறக்குமதி கட்டளை சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்;.
வட மாகாணம் தற்போது இரானுவத்தினரின் அதிகாரத்திலேயே இயங்கி வருகிறது. இந்த நிலையில் தம்மையே 30-40பேர் தாக்கிய சந்தர்ப்பத்தில் உறவுகளை சொந்த பந்தங்களை இழந்தவர்களின் நிலைமை எவ்வாறு அமையும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம் தாக்கப்பட்டதை போன்று யாழ்ப்பாணத்தில் ஒரு இளைஞன் தாக்கப்பட்டிருந்தால் மீண்டும் ஒரு போர் மூண்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர தமது உறவுகளை இழந்திருக்கும் உறவினர்கள் நாளாந்தம் இழந்த உறவினர்களின் புகைப்படங்களுடன் சிறைகளுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனங்களை குளிரச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்த்து ஸ்ரீலங்கா அரசாங்கம் மேலும் அவர்களுக்கு இன்னல்களை கொடுத்து வருவதாக சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
வடதமிழீழ யாழ்ப்பாணத்தில் வைத்து, புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களே தம்மீது தாக்குதல் நடத்தியதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ஒரு நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.
இராணுவம் சூழ்ந்துள்ள அதி பாதுகாப்பு பகுதி ஒன்றில் வைத்து, அரசாங்கத்தின் ஆதரவற்ற எவராலும் தாக்குதல் நடத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் வீட்டில் வைத்து சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட மூன்று பேர் தாக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா அரசாங்க புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதனை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆதரவின்றி மேற்கொண்டிருக்க முடியாது எனவும், எனினும் யாழ்ப்பாண தமிழ் மக்கள் மீது இந்த தாக்குதல் குற்றச்சாட்டை அரசாங்கம் திணிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களத்தில் உரையாடினர் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஜே வி பியினரை கண்காணிக்க தனியான புலனாய்வுக்குழு
ஜே வி பியினர் தொடர்பில் கண்காணிப்புகளை நடத்துவதற்காக விசேட புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஜே வி பியினரின் செல்வாக்கு நிறைந்த கிராம பகுதிகளில் இந்த புலனாய்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடிப்படையில், ஜே வி பியினர் கிளர்ச்சி ஒன்றை முன்னெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த பாதுகாப்பு புலனாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன
ஏற்கனவே எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு அரச தரப்பில் தனியான புலனாய்வுக் குழு ஒன்று செயற்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஹந்துன்னெத்தி தாக்குதல் சூத்திரதாரிகள்: புகைப்படங்களை வெளியிட்டது ஜே.வி.பி.
யாழ்ப்பாணத்தில் வைத்து ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியைத் தாக்கியவர்கள் என்று கூறப்படும் இரண்டு நபர்களின் புகைப்படங்கள் இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜே.வி.பி. கட்சியின் ஊடகப் பிரிவு குறித்த புகைப்படங்களை அனுப்பியுள்ளதுடன், சம்பவம் நடைபெற்ற போது அயலில் நின்றவர்களால் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ஜே.வி.பி. கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக