News Update :
Home » » தமிழர்கள் மீண்டும் ஆயுத போராட்ட மனோநிலையில் இல்லை! அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்

தமிழர்கள் மீண்டும் ஆயுத போராட்ட மனோநிலையில் இல்லை! அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்

Penulis : Antony on வியாழன், 18 நவம்பர், 2010 | AM 10:32


இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் வன்முறை போராட்டம் தொடர்பில் யோசனையில் இல்லை என்பதே தமது கருத்து என கீதபொன்கலன் குறிப்பிட்டுள்ளார்


நாட்டில் உள்ள அனைவரும் வன்முறைகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குழுவின் முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கியதன் மூலம், சேர் பொன் அருணாசலம் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் செயற்பட்டார்.

சேர் பொன் இராமநாதன் 1915 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தடுப்பில் இருந்த சிங்கள தலைவர்களுக்காக போராட்டங்களை மேற்கொண்டார்.

இந்தநிலையில் 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர், தமிழ் தலைவர்கள், தனிநாட்டுக் கொள்கையை முன்வைத்தனர். எனினும் அவர்கள் அதனை தீவிரமாக முன்னெடுக்கவில்லை. எனினும் இளைஞர்கள் அதனை தீவிரமாக முன்னெடுத்தனர்.

வரலாற்றை திரும்பிப் பார்ப்போமானால், அந்த வன்முறை போராட்டம் தமிழ் மக்களுக்கு கடுமையான பாதிப்பையும் ஏனைய சமூகங்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதற்கு தாம் உட்பட்ட இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என இலங்கையின் அனைவருமே பொறுப்புக்கூறவேண்டும் என கீதபொன்கலன் குறிப்பிட்டார்.

போர் முடிவடைந்துள்ளது இந்தநிலையில், சமாதானம் முன்னெடுக்கப்படவேண்டும். இலங்கை அரசாங்கம், திட்டமிட்ட ரீதியில் வடக்குகிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்கிறது என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

வடக்கு கிழக்கில் இன்று இராணுவத்தினரை பயன்படுத்தி அவர்களின் முகாம்களுக்கு அருகில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம், மேற்கொண்டு வருகிறது. இதனை அரசாங்கம் நிறுத்தவேண்டும் இல்லையேல் அது மீண்டும் வடக்கு, கிழக்கில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

இதனை தவிர அரசியல் ரீதியாக தமிழ் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உதாரணமாக உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக தமிழ் பிரதிநிதித்துவங்களை குறைக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.

இதனை விடுத்து இலங்கையில் அமைதி ஏற்படவேண்டுமானால் இலங்கை அரசாங்கம் உடனடியாக தமிழர்களின் அவசர பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும்.

இதனையடுத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை எட்டவேண்டும். போர் முடிவடைந்துள்ளது எனினும் வடக்கு கிழக்கில் கப்பம் கோரல் கடத்தல் என்பன இடம்பெறுகின்றன. அதாவது தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன.

வடக்கு கிழக்கில் உள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களையப்படவேண்டும்.

வடக்குகிழக்கில் உள்ள படையினரின் பிரசன்னத்தில் குறைப்பு மேற்கொள்ளப்படவேண்டும்.

இவையில்லாமல் தமிழ் மக்களை பிரதான நீரோட்டத்தில் கொண்டு வரமுடியாது.

போரின் பின்னர் அரசாங்கம் நடத்தி வந்த நலன்புரி முகாம்கள் தொடர்பில் கருத்துரைத்த அவர், இந்த முகாம்களில் இருந்து பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் பலர் இன்னும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் தற்போதைய நிலையில் வன்முறையின் ஊடாக போராட்டம் ஒன்றை நினைத்தும் பார்க்கக்கூடிய நிலையில் இல்லை. எனவே இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்.

எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் வன்முறை போராட்டம் தொடர்பில் யோசனையில் இல்லை என்பதே தமது கருத்து என கீதபொன்கலன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தச்சட்டம் ஏற்புடையதல்ல. அடிப்படையானதல்ல, இந்த சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மாத்திரமல்ல ஏனைய சிறுபான்மையினரின் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியாது என்றும் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் என்ற விடயம் தமிழர்களை பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே, இதற்கு உரிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.

தமிழர்கள் இன்று போரினால் பிரிந்துபோன தமது உறவுகளை குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். போரின் போது எத்தனை பேர் இறந்தார்கள். காணாமல் போனார்கள் என்ற விடயங்கள் இன்னும் தெரியாமல் உள்ளது என்றும் கீதபொன்கலன் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் தமிழ் தினசரிகளை படித்தால் அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதை அவதானிக்கமுடிகிறது.

அம்பாறை திருகோணமலை போன்ற இடங்களில் சமயங்களுக்கு இடையிலான இணக்கக்குழு செயற்பட்டு வருகிறது. இது மிகவும் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை இந்த குழுவால் தீர்க்கக்கூடியதாக இருக்கிறது.

தமிழ் சமூகம் இன்று அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் ஒருவகையான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது மலையகத் தமிழர்களும் மாற்று வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே உரிய பொறிமுறை மூலம், இது தீர்க்கப்படவேண்டும். இன்று வடக்கு, கிழக்கில் அதிகாரத்தை பரவலாக்கம் செய்தால், தென்னிலங்கையில் உள்ள சிங்களவர்கள் அதனை தனிநாட்டுக்கான அடித்தளம் என நினைக்கிறார்கள்.

எனவே சிங்களவர்கள் நினைத்தால், தமிழர்களுக்கான அதிகாரங்களை பகிர முடியும். தமிழர்களும் எவ்வித உத்தரவாதமற்ற அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

இந்தநிலையில் இலங்கையில் உள்ள ஒற்றையாட்சி முறையே அதிகாரப் பரவலாக்கலுக்கு தடையாக உள்ளது என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஒருபொறிமுறையின் மூலம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என்ற அடிப்படையில் உள்ள சிறுபான்மையினரின் பிரச்சினையை தீர்க்கமுடியாது என்றும் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த மக்கள், வடக்கு, கிழக்கில் வந்து முதலீடு செய்வார்கள் என தாம் நம்பவில்லை என குறிப்பிட்ட கீதபொன்கலன், அரசாங்கம் தமது தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் போது அல்லது இலங்கையின் பிரச்சினை முடிவுறும் போதே புலம்பெயர்ந்த மக்கள் வடக்கு, கிழக்கில் தமது முதலீடுகளை மேற்கொள்வர் என்பது தமது கருத்து என குறிப்பிட்டார்.

எனவே அரசாங்கம் தமது நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger