தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தை கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாணந்துறைப் பிரதேசத்தில் இந்துக் கோவில் ஒன்றை கட்டி இருக்கின்றார். அக்கோவில் இன்றும் உள்ளது.அதைச் சிங்களவர்கள் இடித்து விடவில்லை. இந்நாட்டில் ஆரும், எந்த இடத்திலும் வழிபாட்டுத் தலங்கள், வாழிடங்கள் போன்றவற்றை அமைக்க முடியும்.

" தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று கொழும்பில் சாட்சியம் வழங்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டு. மாவட்ட முன்னாள் இராணுவ தளபதியும், மஹிந்த அரசின் இந்நாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் இவர் சாட்சியத்தில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
"பெரும்பான்மை சமூகத்தினரின் மனங்களை புண்படுத்தாத வகையில் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

புலிகள் இயக்கம் பலவீனமாக இருந்தபோது அன்று ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸ பணம், ஆயுதங்கள் ஆகியவற்றைக் கொடுத்து உதவினார். இதை அடுத்து புலிகள் இயக்கம் பலம் பெற்றது. இது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ செய்த மாபெரும் தவறு ஆகும்.
நான் மாணவனாக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு இயக்கத்தில் சேர்ந்தேன். ஆடிக் கலவரத்தில் ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். இதுவே நான் இயக்கத்தில் சேரக் காரணம். இந்தியா விடுதலை புலிகள் இயக்கம் மீது மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தது. நான் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றேன். அங்கிருந்து 1985 ஆம் ஆண்டு படகு மூலம் இலங்கையை வந்தடைந்தேன்.
விடுதலை புலிகளை அடக்க இந்திய படைகள் இலங்கைக்கு அழைக்கப்பட்டன. இந்திய படைகள் இலங்கை வந்ததற்கு எதிராக திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அப்போது இந்திய பிரதமராக இருந்தவர். ராஜீவ் காந்தி. இவரை விடுதலை புலிகள் கொன்றனர். இது இவர்கள் செய்த பாரிய தவறு ஆகும்.
ராஜீவ் காந்தியை கொலை செய்யும் தீர்மானத்தை பிரபாகரனும் பொட்டு அம்மானும் இணைந்து எடுத்து இருந்தார்கள். ராஜீவ் காந்தி கொலையை அடுத்து இந்தியாவில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. பின் 26 நாடுகள் விடுதலை புலிகள் இயக்கத்தை தடைசெய்தன. ஜனநாயக வழியில் சமாதானத்தை ஏற்படுத்த நான் பல முறை முயற்சித்தேன். ஜனநாயக வழியில் சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கமும் ஏற்றுக்கொண்டார்.
எனினும் பிரபாகரன் ஒரு போதும் இதனை ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஜனநாயக வழியில் சமாதானத்தை ஏற்படுத்துகின்றமைக்காகவே நான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்தேன். விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து நான் பிரிந்த பின் விடுதலை புலிகள் இயக்க போரளிகள் 6000 பேரை வீட்டுக்கு அனுப்பினேன்.
முன்னர் இருந்த அனைத்து அரசுகளும் விடுதலை புலிகள் இயக்கத்தை சமாளிக்கவே முயன்றன. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மாத்திரமே ஒழித்தே தீர வேண்டும் என கங்கணம் கட்டினார். இன்று உலக நாடுகள் போர் குற்றங்கள் தொடர்பாக பேசுகின்றன. எனினும் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலை புலிகள் 3 இலட்சம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி இருந்தனர்.
இது குறித்து உலக நாடுகள் மௌனம் காக்கின்றன. இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றமையை நிறுத்தி விட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். வெளிநாடுகளை விடுதலை புலிகளுடன் அரசுகள் பேச வைத்தது தவறு. இதனால் புலிகள் ஒவ்வொரு நாட்டிலும் அமைப்பாளர்களை நியமித்தார்கள்.
விடுதலை புலிகளை தடை செய்ய முடிந்த நாடுகளால் இந்த அமைப்பாளர்களின் செயற்பாடுகளை நிறுத்த முடியாமல் உள்ளது. வெளிநாட்டு பணத்தைக் கொண்டே விடுதலை புலிகள் ஆயுதங்களையே கொள்வனவு செய்தனர். ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதில்களும் பின்வருமாறு:
கேள்வி : - விடுதலை புலிகள் இயக்கத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்று பிரபாகரன் நேரடியாக அழைப்பு விடுத்திருந்தாரா?
பதில் : - இல்லை. அப்போது விடுதலை புலிகள் துண்டுப் பிரசுரங்கள்,சுவரொட்டிகள் முலமாகவே அழைப்பு விடுத்து வந்தார்கள். ஒவ்வொரு பிரதேசங்களிலும் புலிகளின் ஆட்சேர்ப்பாளர்கள் செயற்பட்டார்கள்.
கேள்வி :- 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் 600 பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பாக உங்களின் கருத்து?
பதில் : - அப்போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். பொட்டு அம்மானின் உத்தரவுக்கு இணங்க 600 பொலிஸார் விடுதலை புலிகளால் கைது செய்யப்பட்டனர் என கேள்விப்பட்டேன். பின்னர் நடந்தவை எனக்கு தெரியாது.
கேள்வி :- இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில் : - நிச்சயமாக இல்லை. ஏற்கனவே இடம்பெற்ற யுத்தத்தால் தமிழ் மக்கள் துக்ககரமான, கசப்பான அனுபவங்களை எதிர் கொண்டனர். இதனால் மீண்டும் ஒரு யுத்தத்துக்கு தமிழர்கள் தயார் இல்லை. அதிலும் குறிப்பாக வன்னி மக்கள் தயார் இல்லை.
கேள்வி :- தமிழ் மக்களுக்கு எவ்வாறான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நீங்கள் முன்மொழிகின்றீர்கள்?
பதில் : - பெரும்பான்மை சமூகத்தை புண்படுத்தாத வகையில் அரசிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் நல்லிணக்கம் ஏற்படும். மாகாண சபைகளுக்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.அங்கு உள்ள மக்களை ஆளக் கூடிய வகையில் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாகாண சபைகளின் அதிகாரங்களில் வேறு யாரும் தலையிடக்கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகியன பொலிஸ் அதிகாரங்கள் போன்ற தேவையற்ற அதிகாரங்களை கேட்கின்றன. இலங்கை சிறிய நாடு. எனவே மாகாணங்களுக்கு இவ்வாறான அதிகாரங்கள் கேட்கின்றமை நல்லது அல்ல. இக்கோரிக்கைகள் பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும். முறையான கல்வி, சிறந்த பொருளாதாரம் ,சம நிலையான பதவி வழங்கல் ஆகியன மூலமும் மக்களை திருப்திப்படுத்தலாம்.
கேள்வி :- வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை மூலம் குடியேற்றங்கள் இடம்பெறுமா?
பதில் : - இல்லை. யுத்த காலத்திலும் இவ்வாறான முகாம்கள் இருந்தன. கிழக்கில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஒருபோதும் ஈடுபட்டு இருக்கவில்லை. தற்போது வடக்கில் சிவில் நடவடிக்கைகளை இராணுவத்தினர் பொலிஸாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். தற்போது இராணுவத்தினர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள் ஆகியவற்றின் நிர்மாணங்கள் தொடர்பாக பிரச்சினைகள் இருப்பின் ஜனாதிபதியுடன் பேசலாம்.
home



Home
கருத்துரையிடுக