
கடந்த 2007ம் ஆண்டு மே 18ம் திகதி கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட ஓ பிளேக் இந்தத் தகவலை அனுப்பியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த ஆவணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை ஈபிடிபி, கருணாகுழு போன்ற ஆயுதக்குழுக்கள் கடத்தியுள்ளன.
தமக்கு ஆயுதக்குழுக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறினாலும் கொழும்புக்கு வெளியே மனிதஉரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சிறுவர்கள் கடத்தப்படுவது, கப்பல் பெறுவது, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது என்று ஆயுதக்குழுக்களின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்கின்றன.
ஈபிடிபி, கருணா குழு போன்றவை படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சிறிலங்கா அரசாங்கம் கண்டு கொள்வதில்லை.
அத்துடன் அரசாங்கத்துக்கும் இந்த ஆயுதக் குழுக்களுக்கும் நேடியான தொடர்புகள் உள்ளன.
அதேவேளை ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளில் தலையிடக் கூடாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்மிடம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள படைத் தளபதிகள் கூறியுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளின் மீதும் எந்தத் தலையீடும் செய்யக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் இந்த ஆயுதக்குழுக்களுக்கு பணக் கொடுப்பனவுகள வழங்கி வந்தது.
இதை இராஜதந்தரிகள் பலரும் தனிப்பட்ட ரீதியாக உறுதிசெய்துள்ளனர்.
ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தப் பணக்கொடுப்பனவை நிறுத்தியுள்ளது.
அதேவேளை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஈபிடிபி மற்றும் கருணா குழுக்களுக்கு தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து கப்பம் பெறுவதற்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.
இதன்காரணமாக அவர்கள் பணத்துக்காக ஆட்கடத்தல்களிலும் கப்பம் பெறும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
2004ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணாவை பாதுகாப்பாகத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது சந்திரிகா குமாரதுங்க அரசாங்கமே.
கருணா குழு என்ற ஆயுதக்குழு .சட்டத்துக்கு முரணான படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களில் மிகவும் உயிர்த் துடிப்புடன் இயங்குகிறது.
தாம் கருணா குழுவைப் பயன்படுத்திப் படுகொலை செய்யப்படலாம் என்று அரசியல்வாதிகள் மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அச்சமடைந்துள்ளனர்.
குறிப்பிட்டளவான தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் கருணா குழுவினால் படுகொலை செய்யப்படலாம் என்று எம்மிடம் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
2005ம் ஆண்டு நத்தார் தினத்தன்று கருணா குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலை ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
2006 நவம்பர் 10ம் திகதி கொழும்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதும் கருணா குழுவின் வேலையாக இருப்பதற்குச் சாத்தியம் உள்ளது.
கிழக்கில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் கருணா தனது நடவடிக்கைகளை விரிவாக்கியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல ஆட்கடத்தல் சம்பவங்களில் அவர்களே தொடர்புபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
கிழக்கில் சிறிலங்கா படை முகம்களுக்கு அருகில் செயற்படுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வயது குறைந்த போராளிகள் அந்த அமைப்பின் முகாம்களில் தன்னியக்கத் துப்பாக்கிளுடன் காணப்படுகின்றனர்.
கிழக்கில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சிறார்களை கட்டாயமாக ஆட்சேர்ப்பதற்கு கருணா குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
கருணா குழுவினால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட சிறார்களின் சராசரி வயது 14 மட்டுமே.
இராணுவத்தின் அனுமதியுடன் தான் இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டுள்ளது.
கருணா குழு சிறார்ளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும், சிறார் போராளிகளை வைத்திருப்பது தொடர்பாகவும் நாம் நம்பத்தகுந்த, இரகசியமான அறிக்கை ஒன்றை ஒரு அமெரிக்க உதவி நிறுவனத்தின் மூலம் பெற்றுள்ளோம்.
கருணாவுக்குப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரிக்கும் வாய்ப்பு இல்லாததால், பரந்தளவிலான குற்றச்செயல்களில் அவரது குழு ஈடுபட்டுள்ளது.
இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படும் போது கருணா குழுவினரும் செல்கின்றனர்.
அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்து கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இடம்பெயர்ந்தோருக்கு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களை அவர்கள் பாதி வழியிலேயே எடுத்து விற்று விடுகின்றனர்.
கருணா குழுவினர் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து பெண்களை அழைத்துச் சென்று சிறிலங்காப் படையினர் மத்தியில் பாலியல் தொழிலில் ஈடுபட நிரப்பந்திக்கின்றனர்.
கருணா குழுவினரின் நெருக்கடிகளைத் தவிர்க்க முடியாத நிலையில் பெண்கள் இதைச் செய்ய வேண்டியுள்ளது.
தமது பெண் பிள்ளைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடுவரோ என்ற அச்சத்தில் பலரரும் தமது 12, 13 வயதான பெண் பிள்ளைகளுக்குக் கூட திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கின்றனர்.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி ஆயுதக்குழுவொன்றை பேணி வருகிறது.
சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபியினர் கப்பம் பெறுதல், ஆட்கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், மற்றும் எந்த அச்சமும் இன்றி ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக எண்ணற்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒருவரைப் படுகொலை செய்வதற்கு ஈபிடிபி திட்டமிடும் போது அதுபற்றி முதலில் இராணுவத்துக்குத் தகவல் அனுப்புகிறது.
யாழ்ப்பாணத்தில் 40ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ளனர். அவர்கள் எல்லா வீதிகளிலும் எந்த நேரமும் ரோந்து செல்கின்றனர். ஒவ்வொரு தெருமுனைககளிலும் காவல் நிற்கின்றனர்.
இராணுவம் இணங்கிய நேரத்தில் படுகொலை நடக்கவுள்ள பகுதியில் இருந்து இராணுவப் பாதுகாப்பு சிறிது நேரத்துக்கு விலக்கிக் கொள்ளப்படும்.
அப்போது அடையாளம் தெரியாத வகையில் முகமூடி அணிந்து கொண்டு உந்துருளியில் வரும் ஆயுதபாணிகள் குறிப்பிட்ட நபரை வீதியில் வைத்துப் படுகொலை செய்து விட்டுச் செல்வர்.
படுகொலை நடந்து முடிந்ததும் படையினர் வந்து தமது வழக்கமான பணிகளைத் தொடர்வர்.
பொதுவான காவல்துறை விசாரணைகள் நடந்தாலும் யாரும் கைதுசெய்யப்படும் அளவுக்கு அது செல்வதில்லை.
ஈபிடிபி சிறார் கடத்தல் வளையம் ஒன்றையும் வைத்துள்ளது. சிறார்கள் கடத்தப்பட்டு நெடுந்தீவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
பொருளாதார பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் அங்கு கொண்டு செல்லப்படும் சிறார்களில் ஆண்களை அவர்கள் தமது முகாம்களில் வேலைக்கு அமர்த்துகின்றனர்.
பெண்கள் இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள தமது வளையத்தின் ஊடாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
லஞ்சம் பெறும் சுங்க மற்றும் குடிவரவு அதிகாரிகளின் உதவியுடன் சிறார்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையம் ஊடாக ஈபிடிபியினரால் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றனர்.
அத்துடன் சிறிலங்காப் படையினரின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளிலும் ஈபிடிபியினர் ஈடுபட்டுள்ளனர்.
ஈபிடிபியினரால் பலாத்காரமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் ஒரே இரவில் ஐந்து, பத்து சிறிலங்காப் படையினருடன் உறவு கொள்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக