
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த சிலவாரங்களில் இராஜதந்திரமுனையில் கடுமையான சவால்களைச் சந்திக்கப் போவதாக கொழும்பு ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.
இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை சிறிலங்கா அரசாங்கம் கடுமையாகவே எதிர்கொள்கிறது.
இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அதிக அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் சந்தித்துள்ளது.
இந்தநிலையில் கொழும்பு வரும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக், நம்பகமான விசாரணை குறித்து மேலும் அழுத்தங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரும் நியுயோர்க்கில் நாளை தொடங்கவுள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு தொடக்க நாளிலேயே உரையாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இம்முறை எதிர்வரும் 23ம் நாளே உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது உரையில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டை எடுத்து விளக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அனைத்துலக அழுத்தங்கள் தொடர்பாக சிறிலங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் மகிந்த ராஜபக்ச இருப்பதாக இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இந்த விவகாரத்தை ஐ.நாவில் வாய் திறக்கப் போனால் வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா அதிபரிடம் அவரது ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக