News Update :
Home » , » விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல்களை அடக்க முடியவில்லை

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல்களை அடக்க முடியவில்லை

Penulis : ۞உழவன்۞ on சனி, 31 மார்ச், 2012 | AM 11:33


சிறிலங்காவுக்கு எதிராக மேற்குலக ஊடகங்களால் மேற்கொள்ளப்படும் தவறான பரப்புரைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளூர் ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடக அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஊடகம் என்பது கிளைமோர் குண்டு போல சக்திவாய்ந்தது.

நாடுகளைக் கடந்து செயற்படுவது. எனினும் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம்.

கட்சி பேதங்களுடன் செயற்படுபவர்கள் ஊடகங்களின் ஊடாக நாட்டுக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்க முடியாது.

நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கும், தகவல் திணைக்களத்திற்கும் உள்ளது.

தேசிய அளவில் மட்டுமன்றி, உலகளவில் உண்மையை எடுத்துக் கூறுவதில் ஊடகங்கள் முன்னிற்க வேண்டும்.

மேற்குலக ஊடகங்களினால் பாதிக்கப்பட்ட நாடாக சிறிலங்கா உள்ளது.

இந்த ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதற்கும், உண்மைக்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது.

ஏனைய நாடுகளின் மீது மேற்குலக ஊடகங்கள் அழுத்தங்களை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன.

சிறிலங்காவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும் இதை தெளிவாக அவதானிக்க முடிந்தது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளான பின்னரும் மேற்குலக ஊடகங்களும், சில உள்ளூர் ஊடகங்களும் கவலையளிக்கும் போக்கில் இருந்து மாறிவிடவில்லை.

நல்லிணக்கத்தையும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்த செய்திகளை ஊடகங்களில் காணவில்லை.

விடுதலைப் புலிகளின் அனுதாபிகளின் குரல்களையே நாம் இன்னும் கேட்க முடிகிறது. இதை நிறுத்தக் கூடிய நிலையில் நாம் இல்லை.

புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் உறுப்பினர்களில் பெருமளவிலானோரை நாம் விடுதலை செய்துள்ளோம்.

அவர்கள் புனர்வாழ்வு பெற்று விட்டதாகவும் நம்புகிறோம்.

நான் சந்தித்த பல வெளிநாட்டுத் தூதுவர்கள், இதுபற்றி தமக்குத் தெரியாது எனக் கூறினர்.

சிறிலங்கா ஊடகங்கள் ஏன் இதனை உலகுக்கு வெளிப்படுத்தவில்லை.

பெண்கள் மீதான வன்முறைகள், எங்காவது, எப்போதாவது நடக்கும் படுகொலைகள் பற்றி பெரும் பரப்புரைகளை மேற்கொள்ளும் ஊடகங்கள் ஏன் இவற்றை வெளிப்படுத்த தவறுகின்றன?

தவறுகள் பற்றி எடுத்துக் கூறுவது போல, நல்லவை பற்றியும், யதார்த்தம் பற்றியும் கூற வேண்டும்.

இனவாதத்தைக் கிளப்பும் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.

மக்கள் பட்ட துயரங்கள் போதும், இனியும் அதற்கு வழி வகுக்காது சரியானதை சரியாக வெளிப்படுத்துவது முக்கியம்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger