
இந்தோனேசியாவில் இன்று 7.3 ரிக்டர் அளவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்தோனேசியா மேற்கு கடற்பகுதியில் உள்ள ஏக் மாகாணத்தில் இன்று அதிகாலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அந்த மாகாண தலைநகர் பாண்டா ஏக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்வுக்குள்ளாகின.
அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்த படி எழுந்து வீதிக்கு ஓடிவந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏக் மாகாண பகுதியில் கடலுக்கு அடியில் 30 கி.மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் உருவானதாக அம்மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வழக்கத்துக்கு மாறாக அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்த போதிலும் எந்தவித பேரிடரும் எற்படவில்லை.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததாகவும், அதனால் உயிர் சேதம், பொருட்சேதம் மற்றும் காயம் அடைந்ததாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை என இந்தோனேஷியா ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக