News Update :
Home » » தொலைபேசியில் காதல் வலைவீசி பெண்களை ஏமாற்றிய நபர் மட்டக்களப்பு

தொலைபேசியில் காதல் வலைவீசி பெண்களை ஏமாற்றிய நபர் மட்டக்களப்பு

Penulis : ۞உழவன்۞ on புதன், 26 ஜூன், 2013 | முற்பகல் 8:25
கைத்தொலைபேசி மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து நுவரெலியாவைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கைத்தொலைபேசி ஊடாக பெண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, அவர்களுடன் பேசி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவரிடம் ஏமாற்றப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுணதீவு நாவற்காட்டைச் சேர்ந்த தன்னை திருமணம் செய்துக்கொள்வதற்காக 40 ஆயிரம் ரூபா பணத்துடனும் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான நகையுடனும் குறித்த நபர் அழைத்து சென்றார்.
இருவரும் கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்தோம். கையிலிருந்த பணம் முழுவதும் செலவழிந்த நிலையில் கொண்டு சென்றிருந்த நகைகளில் ஒரு தங்க சங்கிலியை கொழும்பில் அடகுவைத்தார்.
அதற்கு பின்னர் நுவரெலியாவிற்கு என்னை அழைத்துச் சென்று சில நாட்கள் வைத்திருந்ததுடன் அங்கும் மற்றொரு தங்க சங்கிலியை அடகுவைத்தார்.
இந்நிலையில், திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போதியளவு பணம் இன்மையினால் கையிலிருந்த இரண்டு காப்புகளை தருமாறு கேட்டார். அதனையும் கழற்றிகொடுத்தேன்.
வாங்கிச் சென்றவர் பல நாட்களாக திரும்பவேயில்லை அவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மட்டக்களப்புக்கு திரும்பினேன் என்று மட்டக்களப்புப் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வாவின் ஆலோசனையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் தமிழ் பெண் பொலிஸார் ஒருவர் அடங்கலாக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸ் ஒருவர் குறித்த இளைஞருடைய தொலைபேசி இலக்கத்திற்கு மிஸ் கோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மிஸ் கோளுக்கு தொடர்பினை ஏற்படுத்திய குறித்த நபர் காதல் மொழிகளை பேசி உன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார்.
அந்த பெண்ணும் பஸ் நிலையத்திற்கு உரியநேரத்திற்கு சென்றுள்ளார். கைத்தொலைபேசியுடன் காதலியை வரவேற்பதற்காக ஓடோடிசென்ற இளைஞனை அங்கு சிவில் உடையில் ஏற்கனவே தயாராகவிருந்த பொலிஸார் கைதுசெய்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் அனுராதபுரத்தில் சிங்களப் பெண்ணொருவரையும் இவ்வாறு ஏமாற்றியமை தெரிய வந்துள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார் மோசடி செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger