News Update :
Home » » சர்வதேசம் கைவிட்டது ஏன்..?

சர்வதேசம் கைவிட்டது ஏன்..?

Penulis : Antony on வியாழன், 24 செப்டம்பர், 2009 | PM 2:13


வன்னியில் கடைசிவரை மக்களுக்கு மருத்துவப் பணி செய்து பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள தமிழ் மருத்துவர் தமிழ்வாணி, வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நிகழ்ந்த கொடூரத்தை உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளார். அங்கு மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களையும், இழப்புக்களையும் விவரித்து இலண்டனில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி இது.
கடைசிவரை வன்னி மக்களை சர்வதேசம் கைவிட்டது ஏன்…? வன்னி மக்கள் செய்த தவறு என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றபோது, அங்கு பாதுகாப்பு வலயத்தில் மக்கள் பட்ட பேரவலங்களை சர்வதேசம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என்று மருத்துவரான தமிழ்வாணி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி இதுவரை காலமும் வவுனியா அகதி முகாமில் தங்கியிருந்து தற்போது பிரித்தானியாவிற்கு வந்திருக்கும் அவர் ‘த கார்டியன்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இறுதிக்கட்ட வன்னி யுத்தத்தின்போது தாம் கண்ட, அனுபவித்த அவலங்களை விவரித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்தவை இங்கே…வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்கள் செய்த தவறு என்ன? அவர்கள் ஏன் இந்த அவலங்களைச் சந்திக்கின்றனர்? சர்வதேச சமூகம் அவர்களைக் கைவிட்டது ஏன்? பாதுகாப்பு வலயம் என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் ஜனவரிக்குப் பின்னர், எறிகணை மழை பொழிந்தது. வீதிகளில் எங்கு திரும்பினாலும் குருதி வழிந்தோடிக் கொண்டிருந்தது. இறந்தவர் யார்? உயிருடன் இருப்பவர் யார் என அடையாளம் காண்பதற்கு எவரும் இல்லாமையால் உடல்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன.
மோதல்கள் தீவிரமடைந்த பின்னர் நாளொன்றுக்கு 500 பேருக்கு இரு அறைகளில் வைத்து சிகிச்சையளித்தோம்.மருந்துகளுக்கு பற்றாக்குறை இருந்தன. எனினும், மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். இறுதி இரு வாரங்களில் அனைத்து மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவியது. இரத்தத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மயக்க மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் கையையும் காலையும் அகற்ற வேண்டியிருந்தது. ஆனால் அதற்கான உரிய சாதனங்கள் இல்லை.
இறைச்சி வெட்டும் கத்தி மாத்திரம் இருந்தது. அந்தச் சிறுவனின் காலையும் கையையும் கதறக் கதற அகற்றினோம். எறிகணை மற்றும் குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனாலும், ஒரு கட்டத்திற்கு அப்பால் அவர்கள் அனைவரும் இனிமேலும் ஓட முடியாது, தாங்கள் அனைவரும் மரணிக்கப்போகிறோம் என்ற நிலைக்கு வந்தனர். நாங்கள் இனி மேலும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தோம்.
எறிகணை மற்றும் குண்டு வீச்சிலிருந்து தப்ப முடியாது, நாங்கள் உயிர்தப்புவோம் என்று நினைக்கவேயில்லை. நான் இறந்து விடுவேன் என நினைத்தேன். ஒருநாள் நான் சத்திரசிகிச்சை நிலையத்திற்குள் இருந்தவேளை, அதற்கு அடுத்த அறை குண்டு வீச்சிற்கு இலக்கானது. சிகிச்சை அளிக்கப்பட்ட பலர் அந்த அறையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் எறிகணை வீச்சில் மரணித்தனர். சிறீலங்காப் படையினர் மீண்டும் அந்த வைத்தியசாலை மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
அதன் போது வைத்தியர் ஒருவர் மரணித்தார்.ஒரு நாள் தாயயாருவர் குழந்தை ஒன்றைக் காயமடைந்த நிலையில் கொண்டு வந்தார். தாய்க்கும் பலத்த காயம். அவரது குழந்தை இறந்துவிட்டது. தனது குழந்தை இறந்தது அவருக்குத் தெரியாது. குழந்தை இறந்தது குறித்து வைத்தியர்கள் தாயிடம் எதுவும் சொல்லவில்லை. அதனைச் சொன்னால் அவர் கதறத் தொடங்கி விடுவார். அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடும். அவரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக நாங்கள் அவரிடமிருந்து குழந்தையை வாங்கினோம்.
தாய்க்கு சிகிச்சை அளித்த பின்னரே உண்மையைச் சொன்னோம்.தற்போது இதனை சுலபமாகச் சொல்லலாம். ஆனால், அந்த நிமிடம் அது மிகவும் வேதனையளிப்பதாக அமைந்தது. தாய் தனது பிள்ளை உறங்குவதாகவே நினைத்துக் கொண்டிருந்தார். இதுபோல் பல சம்பவங்கள் உள்ளன. தாய் இறந்தது தெரியாமல் குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்த சம்பவங்களும் உள்ளன. மோதல் நெருங்கி வந்துகொண்டிருந்தது. கிடைத்ததை சாப்பிட்டோம். எப்போதும் ஓடுவதற்குத் தயாராக இருக்கவேண்டியிருந்தது. நித்திரை கொள்ளமுடியாது.
மே 13ம் திகதி புதுமாத்தளன் வைத்தியசாலை மீண்டும் தாக்குதலுக்குள்ளானது. 50ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எனக்கு அருகில் இருந்த பதுங்குகுழியின் மீது எறிகணை விழுந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். திடீரென மக்கள் கதறியழுவதைக் கேட்டோம். மிக அருகில் ஏதோ நடந்திருக்க வேண்டும் என நினைத்தோம். வெளியில் வந்து பார்த்தபோது எங்கும் இரத்தமயமாகக் காணப்பட்டது. என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
எங்கும் இரத்தமும் உடல்களின் சிதறல்களும் காணப்பட்டன.இறுதி ஐந்து நாள்களில் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம். இராணுவப் பகுதியை நோக்கிச் சென்ற வேளை எங்கும் மனித உடற் பாகங்களைக் கண்டோம். இறுதிக் குண்டுவீச்சைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து இராணுவப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஒரு மணித்தியாலத்துக்குப் பின்னர் இராணுவத்தைக் கண்டோம். அங்கு, எங்கு பார்த்தாலும் உடல்களும் உடற் பாகங்களும் காணப்பட்டன. அதனைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. தாய் ஒருவர் தனது இறந்த குழந்தையுடன் திண்டாடிக்கொண்டிருந்தார்.
சிலர் உடல்களைப் பதுங்கு குழிகளுக்குள் போட்டு மண்ணால் மூடினர். அவ்வேளையில் அது மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. இவ்வளவு இன்னல்பட்டு அகதிகளாக வந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டோம். முகாமின் நிலைமை அதிர்ச்சியளிப்பதாகக் காணப்பட்டது. எங்கு சென்றாலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். எதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. மலசலகூடங்கள் மோசமாக இருந்தன. அதனை என்னால் வர்ணிக்க முடியாது.
எங்கும் நுளம்புகள், கொசுக்கள் என்ற சுகாதாரமற்ற நிலைமை காணப்பட்டது. மக்கள் தமது குடும்பத்தவர்களை இழந்திருந்தனர், குடும்பங்களைப் பிரிந்திருந்தனர். அவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தனர். மக்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியை ஒருவர் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார்.முகாமில் இராணுவ புலனாய்வாளர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர். அது திறந்த வெளி சிறைச்சாலை போன்று காணப்பட்டது. நீங்கள் நடமாடலாம்.
ஆனால் சிறைக்குள்ளேயே நடமாடவேண்டும். உங்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. போக முடியாது. எங்கும் இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகளும் தென்பட்டன. பிரித்தானிய தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகத் தொடர்புகொண்ட பின்னர் ‘த கார்டியன்’ பத்திரிகை ஊடாக எனது பெற்றோரும் அழைப்பு விடுத்தனர். இதன் பின்னர் மக்களால் நிரம்பி வழிந்த வலயம் 1இல் இருந்து வலயம் 2க்கு மாற்றப்பட்டேன். வெளிநாட்டவர்களுக்குக் காண்பிப்பதற்காக இது நடந்திருக்கலாம்.
ஐ.நா.செயலாளர் நாயகம் விஜயம் மேற் கொண்டவேளை நான் அங்கேயே இருந்தேன். அவர் வெறுமனே 10 நிமிடங்கள் மாத்திரம் அங்கே நின்றார். அவர் ஏன் முகாமிற்குள் சென்று மக்களுடன் பேசவில்லை? சிறிது நேரத்தைக் கூடச் செலவிடவில்லை. அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்கவில்லை. அவருக்கு அதற்கான பொறுப்பு இருந்தது. அவரிடமிருந்து மக்கள் அதனை எதிர்பார்த்தனர். வெறுமனே 10 நிமிடங்கள் தங்கியிருப்பதற்கு அப்பால் மக்கள் அவரிடமிருந்து அதிகளவு எதிர்பார்த்தனர்.
நான் மூன்று மாதங்களுக்கு மேலாக முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். என்னை ஐந்து தடவை விசாரணை செய்தனர். என்ன செய்தாய்? வைத்தியசாலையில் என்ன செய்தாய்? எனக் கேட்டனர். கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டேன். ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவைச் சந்தித்தேன். அவர் நீங்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டீர்கள். நிறையச் சந்தித்துவிட்டீர்கள்.
இனி பிரித்தானியா சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார். நான் உயிருடன் தப்புவேன் என்றோ, முகாமிலிருந்து கூட வெளியே வருவேன் என்றோ எதிர்பார்த்திருக்கவில்லை என்றார் மருத்துவர் தமிழ்வாணி. இதேவேளை, இறுதிக்கட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.
அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக தமிழ்வாணி ஞானகுமார் ‘பிபிசி’க்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger