
வன்னியில் இயங்கிவந்த வன்னி ரெக் நிறுவனம் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகப் பதிவுற்று இயங்கிவந்தது. இந் நிலையில் இதன் தலைவர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள தயாபரராஜா, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் ஆவார். சிறிலங்காவில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற இவர், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கின்றார். சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 13 ஆம் நாள், சட்டவிரோதமான முறையில் சுடப்பட்டதாகத் தெரிகின்றது. கடுமையான காயங்களுடன் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நாள் மரணமடைந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக