
டெல்லி, சென்னை, ஊட்டி என விசாரணை நடத்தி... விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை சமீபத்தில் நியாயப்படுத்தியிருக்கிறார் விசாரணைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியுமான விக்ரம்ஜித் சென். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது பற்றி இன்னும் அறிவிக்காத நிலையில்...
தானே அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் மூத்த வழக்கறிஞரான கருப்பன். புற்றுநோயால் தாக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருப்பன், தற்போது குணமடைந்து வரும் நிலையில், அவரைச் சந்தித்தோம். ‘‘2010 மே, 14&ம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில், ‘எ.டி.டி.ஈ.யினர் படுகொலை செய்யப்பட்டபோதிலும், எஞ்சியுள்ள போராளிகளும் தலைவர்களும் தமிழீழத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நம்பிக்கை துரோகிகள் (இந்திய அரசு) மற்றும் எதிரிகளை (இலங்கை அரசு) பழிவாங்க தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர். தங்களின் தோல்விக்கு இந்திய உயர் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் காரணம் என்று இணையதளம் வாயிலாக கூறி வருகின்றனர்.
இது இந்திய உயர் பெருமக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது’ என்பது போன்ற புளித்துப்போன காரணங்களைச் சொல்லித்தான் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா தடையை நீட்டித்திருக்கிறது.
இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், தன்னை ஈழத்தமிழர்களின் நம்பிக்கை துரோகி என்றும், இலங்கை அரசை ஈழத் தமிழர்களின் எதிரி என்றும் இந்திய அரசே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
மேலும் அந்த அறிவிப்பில் ஓர் இடத்தில் கூட ராஜீவ்காந்தி படுகொலையைக் காரணம் காட்டவில்லை. இதற்கிடையில் ஏற்கனவே, ‘சோனியாவின் தாயார் பவுலா மைனோவுக்கும் குடும்ப நண்பரான ஒட்டோவியோ குவத்ரோச்சிக்கும் புலிகள் இயக்கத்துடன் நெடுநாளைய தொடர்பு உண்டு என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. சோனியாவின் பிரதான ஆலோசகர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வாவின் நெருங்கிய நண்பர் அஸ்வத் நாராயணனின் உதவியாளர் வீட்டில்தான் சிவராசன் ஒளிந்திருந்தார்.
ஆல்வா, அர்ஜூன்சிங், மணிசங்கர ஐயர் ஆகியோர்தான் ராஜீவ்காந்தியை ஸ்ரீபெரும்புதூர் செல்ல வற்புறுத்தியவர்கள். எனவே சோனியா, அவருடைய தாயார், மார்கரெட் ஆல்வா, அர்ஜூன் சிங் ஆகியோரை சி.பி.ஐ. விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்’ என்று சுப்ரமணியன் சுவாமி பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் எந்த-வொரு அசம்பாவிதத்திலும் புலிகள் இயக்கம் ஈடுபடவில்லை. ஈடுபட்டதாக அரசாங்கமும் சொல்லவில்லை. அப்படியிருக்க, புலிகள் இயக்-கத்தின் மீது தடை விதிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.
‘புலிகள் இயக்கப் பிரமுகர்கள் மட்டும்தான் ஆஜராகவேண்டும்’ என்று விக்ரம்ஜித் சென் சொல்லியிருப்பது கண்துடைப்பு மட்டுமல்ல, காமெடியும் கூட. ராஜீவ் கொலையில் புலிகள்தான் குற்றவாளி என்கிறார்கள். அந்த வகையில், புலி என்று யார் வந்தாலும் கைது செய்யப்படுவார்கள். இந்நிலையில், புலி என்று சொல்லிக்கொண்டு யாராவது இந்தியா வருவார்களா? அகதியாக வந்த அப்பாவி மக்களை புலிகள் என்று பிடித்து, செங்கற்பட்டு சிறப்பு முகாம்களில் அடைத்திருக்கிறார்கள்.
அரசின் ஆவணப்படி மேற்கண்டவர்கள் அனைவரும் புலிகள்தானே. அப்படியானால், அந்தப் புலிகளைக் கூப்பிட்டு ஏன் விசாரிக்கவில்லை? புலிகளையும் விசாரிக்க மாட்டார்கள், புலிகளுக்காக 18 மாதம் சிறையில் இருந்த வைகோவையும் விசாரிக்க மாட்டார்கள். புலிகளைக் காட்டித் தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனையும் விசாரிக்க மாட்டார்கள். அப்புறம் எதற்குத் தீர்ப்பாயம், வெங்காயம்?’’ என வெடித்த கருப்பன் சற்றே ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பேசினார்.
‘‘கருத்துக் கேட்புக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே தடையை அமல்படுத்திவிட்டுத்தான் ஊட்டி வந்தார் விக்ரம்ஜித் சென். எனவே, இதுவொரு ஏமாற்றுவேலை. எத்தனை சொல்லியும், எவ்வளவு முறையிட்டும் கருத்து கூற இவர் அனுமதி மறுத்திருக்கிறார் என்றால், சம்பந்தப்பட்டவர்கள் செல்லவேண்டியது உச்ச நீதிமன்றம்தான்.
ராஜீவ் கொலை குறித்த வழக்கின்போது, ‘பிரபா-கரனுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையிலான தனிப்பட்ட பகை காரண-மாகத்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறுவதை ஏற்க இயலாது’ என்று நீதியரசர் கே.டி.தாமஸ் கூறி-யிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உடைக்க முடியும். உச்ச நீதிமன்றம் சென்று அதை நிச்சயம் செய்து முடிப்பேன்’’ என்றார் உறுதியுடன். தீர்ப்பாய தீர்ப்பு குறித்து புலிகளுக்காக வாதாடிய தமிழக மக்கள் உரிமைக் கழக வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.
‘‘விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பை எதிர்த்து கூடிய விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருக்கிறோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
+ கருத்துகள் + 1 கருத்துகள்
100% புலிகள் மீதான தடையை உடைக்க முடியும்.
good post...
கருத்துரையிடுக