
மாவீரர்களின் மாதம் என்று நாம் பூஜிக்கும் கார்த்திகை மாதத்தில் நாம் நிற்கின்றோம். கார்த்திகை மாதத்தின் கதவுகள் நமக்காக திறக்கின்றபோதே உள்ளே மாவீர்களின் மௌனமான உறக்கம் நமது கண்களுக்கு தெரிகின்றது. மரியாதைக்குரிய மாதமாக கார்த்திகையை நாம் பூஜிப்பது என்பதும் இந்த மாவீரர்களுக்கே ஆகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. விடுதலைப் புலிகள் அதிகாரம் வன்னி மண்ணில் துலங்கியபோது இந்த தியாகிகளுக்கு தகுந்த இடம் கிடைத்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அந்த சிறிய ராஜ்யத்தில் சிறப்பான விழாக்கள் நடைபெறுவதுண்டு. கார்த்திகை 27ம் நாள் அந்த மண்ணில் சூரியக் கதிர்கள் பட்டுத்தெறிக்கும் முன்னரேயே மக்கள் வீடுகளை விட்டு வந்து தங்கள் இதய தெய்வங்களாம் மாவீரர்கள் துயில் கொள்ளும் மாவீரர் இல்லங்களுக்கு அணியணியாய் செல்வார்கள். எந்தளவிற்கு அவர்களுக்காக அழுது வடிக்க முடியுமோ, எந்தளவிற்கு அவர்களுக்காக மரியாதை செலுத்த முடியுமோ, எந்தளவிற்கு அந்த வீரர்களின் தியாகத்தை புகழ்ந்து பேச முடியுமோ, எந்தளவிற்கு அந்த வீரத்தமிழர்களது வீர வரலாற்றை பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நமது மக்கள் செய்து வந்தார்கள். அதற்கு மேலாக புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர்களின் புகழ்பாடவும் அவர்களுக்காய் கண்ணீர் அஞ்சலி செலுத்தவும் மக்கள் லட்சக் கணக்கில் கூடுவதுண்டு. ஆனால் உலகெங்கும் இன்றுள்ள நெருக்குவாரங்கள் பலவற்றிக்கு மத்தியில் இந்த தியாக தீபங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெறுகின்றன. மாவீரர்களின் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை. நமக்கு தனிப்பட்ட வகையில் சிரமங்கள் வரலாம் என்ற அச்சம் நமக்கு தேவையில்லை. நமக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் எம்மைப் பொறுத்தளவில் தெய்வங்களே. காரணம் அவரகள் தாங்கள் அனுபவிக்க வேண்டிய பல சுகபோகங்களை துறந்து சென்றவர்கள். இன்பங்களுக்கு பதிலாக கஸ்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்றவர்கள். நாளை இறப்பு நிகழப்போகின்றது என்பதை நிச்சயமாக தெரிந்து கொண்டிருந்தாலும் இன்று சிரித்த முகத்துடன் சக போராளிகளுக்கு உற்சாகமூட்டும் கதைகளைக் கூறி தாக்குதல் களத்திற்கு விடைபெறும் போதும் கூட வழியனுப்பி வைத்தவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடினாலும் தங்கள் கண்களை ஈரமாக்காமல் அந்த இடம் விட்டு நீங்கியவர்கள் இந்த அதியப்பிறவிகள். ஆமாம், அர்ப்பணிப்பும் அடக்குமுறைக்கு எதிராக கொதித்து எழுந்த போர்க்குணமும் அறிவாற்றலும் அதற்கு மேலாக மற்றவர்கள் அதிசயிக்கும் உயர்ந்த குணாம்சம் கொண்டவர்களாக விளங்கிய நமது மாவீரர்களின் நினைவுகளை அவர்களை வணங்கும் நாளில் மீட்டு வந்து அவர்களுக்கு மரியாதை செய்வோமாக.
கருத்துரையிடுக