
புதிதாக நீதி அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கட்கு விசேட ஏற்பாட்டின் கீழ தங்களை பிணையிலாவது விடுதலை செய்வதற்கு உதவுமாறு கோரி அனைத்திலங்கை அரசியல் கைதிகள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதத்தின் முழு வடிவம் வருமாறு:
அரசியல் கைதிகள்
புதிய மகசின் சிறைச்சாலை
கொழும்பு
24.11.2010.
கௌரவ நீதி அமைச்சர்,
ரவூப் ஹக்கீம் அவர்கட்கு,
அனைத்திலங்கை அரசியல் கைதிகள் மிகப்பணிவாக வேண்டிக்கொள்வது.
உங்கள் விசேட ஏற்பாட்டின் கீழ் பிணையில் செல்ல உதவுங்கள்.
நீங்கள் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம் அத்துடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
எமது விடயத்தில் இனியாவது நியாயமான தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம்.
உங்களால் முடிந்தளவு எமது விடயத்தில் கூர்ந்து கவனம் செலுத்தி தற்போதைய சூழ்நிலையில் பிணையில் செல்வதற்காவது விசேட ஏற்பாடொன்றை உங்கள் தலமையின் கீழ் ஏற்படுத்தி தாருங்கள்.
நாட்டில் தற்போது நல்ல சூழல் உருவாகி உள்ளது நாட்டில் சகல மாகாணங்களிலும் தடையின்றி நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. எமது நாட்டில் தற்போது அரச கட்டுப்பாடற்ற பகுதியென ஒன்றில்லை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதியின் தலமையின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன இவை அனைத்தும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதனைக் காட்டுகின்றது.
எனவே கௌரவ அமைச்சர் அவர்களே! எமது பெற்றோர்கள் சகலவற்றையும் இழந்து ஒரு சட்டத்தரணியைக்கூட அமர்த்த முடியாமல் அவர்களிடத்தில் இருந்த எல்லாவற்றையும் இழந்துபோய் கண்ணீரே வாழ்க்கையாக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு மேலாய் நாம் சிறையில் அனுபவிக்கின்ற வேதனைகள் உளவியல் ரீதியாக நாம் அடைகின்ற மன உழசை;சல்கள் எண்ணிலடங்க முடியாதவை.
சிறைகளில் கர்ப்பிணித் தாய்மார்கள்; கைக்குழந்தைகள் அங்கவீனர்கள் வயோதிபர்கள் உள்ளடங்கலாக 765 கைதிகளும் பலவிதமான வியாதிகளுடன் மருத்துவ வசதிகூட இல்லாமல் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வருகின்றோம்.
கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் நேரடியாக எம்மைப் பார்க்க வந்து வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்களே தவிர இவைகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
நாம் சில தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டோம் இலவச சட்டத்தரணிகள் ஒழுங்கை எமக்குச் செய்துதாருங்கள் என்றும் எமக்கு தேவையான அன்றாடத் தேவைகள் பல இருக்கின்றது அவைகளை எமக்கு பூர்த்திசெய்து தாருங்கள் என்றும் கூறி இருந்தோம்.
அத்துடன் நாம் சிறையில் இருப்பதால் எமது குடும்பங்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள் என்றும் பலமுறை அவர்களிடத்தில் முறையிட்டிருந்தோம். ஆனால் இதில் எதையும் நிறைவேற்றியதாக இல்லை. ஆனால் எமது கைது தொடர்பான விபரங்களைக் கூட எம்மிடம்தான் கேட்கிறார்கள்.
இதுதான் இன்றைய எமது நிலை இவை இவ்வாறு இருக்க 01.08.2010 அன்று நீங்கள் உங்களின் தலமைக் காரியாலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாள்ர் மகாநாட்டை நடாத்தி இருந்தீர்கள் அதில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறும்போது,
1. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நான் நேரடியாக தலையிடுவேன் என்றும்,
2. சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று அரசியல் கைதிகளின் விபரங்களைத் திரட்டி அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக உறுதிமொழி அளித்திருந்தீர்கள். அவை அனைத்தும் எமது பதிவுகளில் இருக்கின்றது.
எனவே கௌரவ அமைச்சர் அவர்களே! நீங்கள் ஒரு சட்டவாளர் என்ற அடிப்படையிலும் எமது பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளக் கூடியவர் என்ற காரணத்தினாலும் எம் அனைவருக்கும் பிணையில் செல்வதற்கு விசேட ஏற்பாடொன்றை செய்துதரும்படி அனைத்திலங்கை அரசியல் கைதிகளாகிய நாம் உங்களிடத்தில் வேண்டி நிற்கின்றோம்.
அத்துடன் பிணையில் செல்வதற்கான அனுமதியை நீங்கள் வழங்கினால் இதற்கு வேண்டிய பிணை ஏற்பாடுகளைச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் அவர்கள் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.
இவ்வண்ணம்
அனைத்திலங்கை அரசியல் கைதிகள்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வந்தது யாவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது அக்கட்சி அரசுடன் இணைந்துள்ளதுடன் நீதி அமைச்சுப் பொறுப்பும் அதன் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பாக எவ்வாறான போக்கை அக்கட்சி கடைப்பிடிக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துரையிடுக