
என்ன காரணங்களுக்காக தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடினார்களோ அந்தக்காரணிகள் வலிமை பெற்று வருவதாகத் தெரிவித்த த.தே.கூ. பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கில் இடம்பெறும் சிங்களத் திணிப்புகள், கலாசார அழிப்புகளினால் தமிழ் மக்களின் இருப்புக்கு அபாயவிளக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், தமிழினத்தை அழிக்கும் நோக்கம் கொண்டதே இந்த வரவு செலவுத் திட்டம் என்றும் குற்றம் சாட்டினார்.
கே.பி.யை வைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழ்மக்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஆனால் கே.பி.யையோ அல்லது கொழும்பையோ நம்பி முதலீடுகளைச் செய்ய புலம்பெயர் தமிழ் மக்கள் முட்டாள்களில்லை. வடக்கு, கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரையில் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்க முடியாது. இலங்கை ஆசியாவின் சீரழிவாகவே இருக்குமென்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியதாவது;
வடக்கில் தற்போது சிங்களம் பலாத்காரமாகத் திணிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் விழாக்களில் சிங்களவர்களின் கலை, கலாசாரம் புகுத்தப்படுகின்றது. கண்டிய நடனங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்படுகின்றன.
கிளிநொச்சியில் ஒரு பாடசாலையில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட போது அதனை இடைநிறுத்திய இராணுவத்தினர் சிங்களத்தில் பாடவேண்டுமென வற்புறுத்தியதுடன் தேசிய கீதத்தை சிங்களத்தில் போடுமாறு ஒரு "கசற்'ரையும் கொடுத்துள்ளனர்.
தமிழ்மக்களின் வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வடக்கில் இடம்பெறும் சிங்களத் திணிப்புகளால் தமிழ் மக்களின் கலாசார இருப்புக்கு அபாய விளக்குக் காட்டப்பட்டுள்ளது.
இந்துக்களின் புனித நாளான கார்த்திகை தீபத்திருநாள் அன்று தமிழ் மக்கள் மாலைவேளைகளில் தமது வீடுகளுக்கு முன்பாக தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள். அவ்வாறு வழிபட்ட வட்டக்கச்சி, சோரன்பற்று மற்றும் அளவெட்டிப் பகுதிகளில் உள்ள மக்கள் மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் நினைவாக தீபம் ஏற்றி வழிபட்டதாகக் கூறியே மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சட்டத்தரணி கூட காயமடைந்துள்ளார்.
பல முனைகளிலும் தமிழ் மக்களை அழிக்கும் நோக்கத்தைக் கொண்ட வரவு செலவுத்திட்டம் ஒன்றையே அரசு தற்போது முன்வைத்துள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுமென வெளிநாடுகள் எதிர்பார்த்தன. தமது அழிக்கப்பட்ட வீடுகள் கட்டித் தரப்படுமென 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். சம்பள உயர்வு வழங்கப்படுமென அரச துறையினர் எதிர்பார்த்தனர். தமக்கு நன்மைகள் இருக்குமென வர்த்தகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அரசு யுத்த மாயையிலிருந்து இன்னும் விடுபடவில்லை. பொருளாதார அபிவிருத்தியை விட பாதுகாப்புக்கு இரண்டு மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபாடக் கொள்வனவுக்கான நிதிகள் செலுத்தப்பட வேண்டியிருப்பதாலேயே அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக அரசு கூறுகின்றது. வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய பொறுப்பு நிதி அமைச்சுக்கே உண்டு.
அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்கும் போதெல்லாம் யுத்தத்தைக் காரணம் காட்டி தியாகம் செய்யுங்கள் எனக் கேட்கப்பட்டது. கடந்த 30 வருடங்களாக தியாகம் செய்த அரசு ஊழியர்கள் இன்று ஆசியாவிலேயே குறைந்த சம்பளம் பெறும் அரச ஊழியர்களாகவுள்ளனர்.
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வாழ்க்கையையே இழந்து போன லட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெறாத தென்பகுதியை சேர்ந்த அரச செயலகங்களுக்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கியுள்ள அரசு யுத்தத்தினால் தரைமட்டமான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச செயலகங்களுக்கு குறைந்த தொகையையே ஒதுக்கியுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்திலும் யுத்தத்தினால் 30 வருடங்களாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு துரித மீள் கட்டுமானத்திற்கென விசேட அமைச்சு எதுவும் உருவாக்கப்படவில்லை. விவசாயம், மீன்பிடி, கால்நடை போன்ற துறைகள் வடக்கு, கிழக்கில் மிக முக்கியமான துறைகளாகும். யுத்தம் முடிவடைந்து நீண்டகாலம் சென்று விட்டபோதும் வடக்கு, கிழக்கில் இம்மூன்று துறைகளும் வழமை நிலைக்குத் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வடக்கு, கிழக்கில் இம் மூன்று துறைகளும் செழிப்படையாதவரை கடலுணவு, பால்மா போன்றவற்றின் இறக்குமதிகளைக் குறைக்க முடியாது.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருவதற்காக கசினோக்களை சட்ட ரீதியாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு சூதாட்ட களமாக மாறப் போகின்றது. தற்போது பாண் உண்பது பயங்கரவாதம், தோட்டங்களுக்கு உரம் உபயோகிப்பது பயங்கரவாதம் என்று கூறப்படுகின்றது. ஜீன்ஸ், சேட், மாசிக்கருவாடு, கார், சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள் கூட வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏன் இவற்றைப் பயங்கரவாதம் என்று சொல்லத் தயங்குகின்றீர்கள்? நீங்கள் பயங்கரவாத மாயையிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகின்றது.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ ஆட்சி நீக்கப்படுவது எப்போது? வட மாகாண ஆளுநர் ஓர் இராணுவ அதிகாரி, கிழக்கு மாகாண ஆளுநர் ஓர் கடற்படை அதிகாரி, திருகோணமலை அரச அதிபர் ஓர் இராணுவ அதிகாரி. இவை மட்டுமல்ல, அண்மையில் நடைபெற்ற சிற்றூழியர் நியமனங்களின்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட 21 பேரில் 17 பேர் சிங்களவர்கள். இந்த சிங்களவர்கள் கூட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராதவர்களாகவே உள்ளனர்.
மன்னாரில் சிற்றூழியர் நியமனங்களுக்காக தமிழ் மக்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டபோதும் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அமைச்சர் கொடுத்த பட்டியலின் பிரகாரமே நியமனங்கள் வழங்கப்படுவதாக அறிகின்றோம். இதேபோன்று யாழ்.நீதிமன்றத்துக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் சிற்றூழியராக நியமிக்கப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் சிற்றூழியர் நியமனங்களில் கூட தமது சொந்த மாவட்டங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதுடன், அண்மையில் இலங்கை நிர்வாகசேவை தெரிவில் கூடத் தெரிவு செய்யப்பட்ட 257 பேரும் சிங்களவர்களாகவே உள்ளனர்.
இவ்வாறு தமிழ் மக்களை தொடர்ச்சியாகப் புறக்கணித்து உள்ளூர் நிர்வாகத்தில் கூட சிங்களவர்களை நியமிப்பதென்பது அரசின் சிங்கள மயமாக்கலின் நிகழ்ச்சி நிரலையே வெளிக்காட்டி நிற்கின்றது. நாட்டிற்குள் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் அதேவேளை, வடக்கு,கிழக்கில் இராணுவத்தைப் பயன்படுத்தி இன ஒழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் ஆட்சியாளர்கள் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கவும் பொருளாதார வளர்ச்சியை சீனாவுக்கு ஈடாக உயர்த்தும் வரவுசெலவுத்திட்டமாக இந்த பட்ஜெட்டை விபரிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கூட மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடர்கின்றன. இராணுவப் புலனாய்வுத்துறை என்பது இப்பொழுது தனக்கு விரும்பாத அல்லது அரசுக்கு விருப்பமற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளை அழித்தொழிப்பதிலேயே அக்கறையாகப் பணிபுரிகின்றது. குடும்ப அரசாட்சியை எப்படி நிலைநிறுத்துவது. இதற்கெதிரான சக்திகளை எப்படி துவம்சம் செய்வது என்பதுதான் அரசாங்கத்தின் கவலையாகவுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையும் சர்வதேசத்தைக் கவர்வதாக இல்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளை இலங்கை அரசு எதிரிகளாகவோ அல்லது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் சக்திகளாகவே பார்க்கின்றது. கே.பி.மூலம் புலம்பெயர் தமிழ் மக்களின் மூலதனத்தைக் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது. ஆனால், அது கூட உங்களால் முடியாது. கே.பி.யை நம்பி தமது பணத்தை முதலிட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல.
வட,கிழக்கு தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, கலாசார பாதுகாப்பு நிர்வாக வேலைகளைக் கவனிக்கக்கூடிய சகல அதிகாரங்களையும் கொண்ட ஓர் நிறுவனம் என்று தோற்றுவிக்கப்படுகின்றதோ அப்போதுதான் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளைச் செய்ய முன்வருவார்களே தவிர, கே.பி.யையோ கொழும்பையோ நம்பி அவர்கள் எதனையும் செய்யமாட்டார்கள். எனவே, உங்கள் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள்.
ஒருபக்கம் ஜனநாயக மறுப்பு, இன்னொரு பக்கம் குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரம், மறுபக்கம் இன ஒழிப்பு நடவடிக்கைகள். தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறைகள் இன்னும் பல படி அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. என்ன காரணங்களுக்காகத் தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடினார்களோ அந்தக் காரணிகள் மேலும் வலிமை பெற்று வருகின்றனவே தவிர, குறையவில்லை. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார சுபீட்சம் ஏற்படவும் மாட்டாது. அதிசயமும் நிகழவும் முடியாது.
எனவே, முதலில் உள்நாட்டுக் கொள்கையில் மாற்றம் வேண்டும். தமிழர்கள் தமது பாதுகாப்புப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் முழுமையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தமிழர்கள் தமது பிரதேசங்களை தாமே ஆள்கின்ற கூட்டாட்சி அரசியல்முறை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாகும் வரையில் இலங்கையில் பொருளாதார அதிசயங்கள் நிகழ்வது அபூர்வமானதாகவே இருக்கும்.
எனவே, தமிழின அழிப்பிற்கென்றே தயாரிக்கப்பட்ட இவ்வரவு செலவுத்திட்டம் பாரிய மாற்றத்திற்குள்ளாக வேண்டும். வடக்கு,கிழக்கில் இராணுவ முகாம்கள் 1983 ஆம் ஆண்டு நிலைக்குச் செல்ல வேண்டும். போரினால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்புக்கு அதிகளவான நிதியொதுக்கப்பட வேண்டும். அழிக்கப்பட்ட மக்களின் சொத்துகளுக்கு நிவாரணமும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது விட்டால் இது வெறும் தமிழின ஒழிப்பு வரவுசெலவுத் திட்டமாகவே இருக்கும் என்பதுடன் இத்தகைய அப்பட்டமான இனவாத வரவுசெலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுதாக எதிர்க்கும்.
கருத்துரையிடுக