News Update :
Home » » நாம் எத்தகைய ஆயுதத்தை எடுக்க வேண்டும்

நாம் எத்தகைய ஆயுதத்தை எடுக்க வேண்டும்

Penulis : Antony on வெள்ளி, 26 நவம்பர், 2010 | முற்பகல் 8:07


எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களே! தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், தமிழீழ தேசத்தின் சுதந்திரத்திற்காகவும் தம் இன்னுயிரை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் வாரமாகும். எம் இதயக் கோவில்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தியாகங்களை புரிந்த அந்த உன்னத வீரர்களை உணர்வோடு நினைவுகூருவதற்கு ஒன்று திரளும் நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான கட்டமைப்பில் செயற்பட்டவன் என்ற வகையில் சில விடயங்களை உங்களோடு பகிரவிரும்புகிறேன். எமது விடுதலை இயக்கத்தின் பாசத்திற்குரிய உறவுகளே! ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில், ஆயுதங்களின் அமைதி என்பது அப்போராட்டத்தின் முடிவல்ல. காலத்தின் கட்டளையும், உலகத்தின் நியதியும் மீண்டும் மீண்டும் மாறும். அது, அடுத்த கட்டப் போராட்டத்திற்காக நாம் எத்தகைய ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற செய்தியை எமக்குத் தரும். அந்த செய்தி வரும் வரை அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
எமது கடின உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் மட்டுமே, எமக்கான வாசற்கதவுகளை நாம் திறக்க முடியும். இது, முற்றுமுழுதான மக்கள் மயப்பட்ட போராட்டமாக இருக்க வேண்டும். மக்களுக்காய் உருவான போராட்டம், மக்களின் புரட்சியினாலேயே அதன் இலக்கை அடையத்தக்க வகையில் பயணிக்க வேண்டும். எமது மாவீரர்கள் துயில்கின்ற இல்லங்களையே சிங்களப் பேரினவாதம் சிதைத்தழித்துவிட்டது. இருப்பினும், எந்த மண்ணின் விடுதலைக்காக அவர்கள் வீழ்ந்தார்களோ அந்த மண்ணோடே அவர்கள் மீண்டும் மீண்டும் சங்கமிப்பதை சிங்கள அரச பயங்கரவாதத்தால் தடுக்க முடியவில்லை. உயரிய அர்ப்பணிப்பினை புரிந்த மாவீரர்கள் எமது போராட்டத்தில் கல்லறைகள் அல்ல, மாறாக எமது சுதந்திரப் போராட்டத்திற்கான கருவறைகள்.
சர்வதேச போர்மரபு சட்ட நியமங்களை மீறி, எமது இதயக் கோவில்களில் வாழும் எம் மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களை அழித்து, தமிழர் தாயகத்தை சிதைத்து வரும் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு நாம் தகுந்த பதிலடியை உரிய நேரத்தில் கொடுப்போம். இதற்கு, உலகெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழரினதும் பங்களிப்பு அவசியம். களநிலை மாறியிருக்கலாம், ஆனால் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது உறுதியான மனநிலை என்றுமே மாறக்கூடாது. எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களே! தன்மானமும், பொறுப்புமுள்ள மனிதர்கள் என்ற வகையில், எத்தகைய கட்டத்திலும் எமது சுதந்திரப் போராட்டத்தை நாம் கைவிடக்கூடாது. எமது தேசியத் தலைவர் தொடர்ச்சியாக கூறுவதுபோல் எமது இறுதி மூச்சுவரை எமது மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர வேண்டும்.
எத்தகைய காலகட்டத்திலும் எமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் கொள்கையையோ, எமது தேசியத் தலைமையின் இலட்சியத்தையோ மானமுள்ள தமிழர்களாகிய நாம் கைவிட முடியாது. தேசிய நலன்களுக்காக முட்டி மோதிக்கொள்ளும் இன்றைய புதிய உலக ஒழுங்கிலே, விடுதலைப் புலிகளின் அடையாளத்தை பூண்டோடு அழித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற பேராபத்து நிறைந்த சூழலை உருவாக்கும் பாரிய சதித்திட்ட முயற்சியில் சிங்களப் பேரினவாதமும் அதன் நேச சக்திகளும் முனைப்புக் காட்டி வருகின்றன.
தமிழர்கள் என்ற இனத்தையும், அவர்களின் பாரம்பரிய அடையாளங்களையும் அழிக்க வேண்டுமாயின், அதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற இரகசிய நிகழ்ச்சி நிரலிலே பல சக்திகள் இயங்கி வருவதை எமது புலனாய்வுக் கட்டமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக ஆசைவார்த்தைகளைக் காட்டி, மாயமான்களை உருவாக்கி உரிமைக்கான எமது விடுதலைப் போராட்டத்தை சலுகைகள் ஊடாக கருவறுக்கும் முயற்சியிலே குறித்த சக்திகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
இதற்காக, விடுதலைக்கு உதவுவது போல் போக்கு காட்டி விடுதலை உணர்வாளர்களின் மனவுறுதியை சிதைக்கும் பயங்கர நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அன்பிற்குரிய எமது மக்களே, விடுதலை உணர்வாளர்களே! சிங்களப் பேரினவாதம் விரித்து வைத்துள்ள கபட வலைக்குள் வீழ்ந்து விடாமல், விழிப்புணர்வோடு இருந்து எமது சுதந்திரப் போராட்டத்தை நகர்த்துவதற்கு உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டியது இந்நேரத்தில் வரலாற்றுக் கடமை என்பதை மனதிற்கொள்ளுங்கள். போராடப் புறப்பட்ட இனம் ஒன்று அவலங்களையும், இழப்புகளையும் கண்டு பின்வாங்கியதாக இதுவரை விடுதலைப் போராட்ட வரலாறு இருந்ததும் இல்லை, இனிமேலும் இருக்கவும் கூடாது. எமக்கான இன்னல்கள் என்பது, எமது தேசத்தின் விடுதலைக்கான பிரசவ வலி.
பல தலைமுறை இழப்புக்குப் பின் சுதந்திரத்தை வென்றெடுத்து இன்று நிமிர்ந்து நிற்கும் அயர்லாந்தைப் பாருங்கள்.
1990ஆம் ஆண்டோடு அழிந்தது சோவியத் ஒன்றியம் எனச் சொன்னோர்கள் அச்சமுறும் வகையில், இருபது வருடங்களுக்குள் தனியொரு தேசமாய் தலைநிமிர்ந்து நிற்கும் ரஷ்யாவைப் பாருங்கள். அடுத்து! பால்கன்ஸைப் எடுத்துப் பாருங்கள். எத்தனை இனப்படுகொலைகளைச் சந்தித்தது? புதைகுழிகளின் நகரங்களாக மாற்றம் பெற்றது. மயான தேசத்தில் நிர்க்கதியற்ற மக்களாக அந்த மக்கள் அந்தரித்து விடப்பட்டார்கள்.
ஆனால், அந்த மக்களோ, சுதந்திர தேசத்தை அடைய வேண்டும் என்ற கனவைக் கைவிடவில்லை. இழந்து போன உறவுகளை நினைக்கும் போதெல்லாம் உங்கள் கனவுகளை நனவாக்குவோம் என்று உறுதியெடுத்துக் கொண்டார்கள். அதற்கேற்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். அ தன் பலன், பால்கன்ஸ் குறுகிய காலப்பகுதிக்குள் ஆறு சுதந்திர தேசங்களை பிரசவித்தது. (இறுதியாக விடுதலையடைந்த ஏழு சுதந்திர தேசங்களில் ஆறு தேசங்கள் பால்கன்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவை.) இதற்கு தனித்து பூகோள அரசியல் மட்டுமல்ல, மக்களின் விடுதலை உணர்வும் பாரிய பங்களிப்பை வழங்கியது. இரண்டாம் உலகப் போரோடு யூதர்கள் என்ற இனம் அழிந்தது என்று ஒரு வரலாறு சொன்னது. ஆனால், இன்று இஸ்ரேலியர்கள் வரலாற்றையே மாற்றிவிட்டார்கள். குந்த ஒரு குடிநிலமாகக் கொடுத்த நிலத்தை ஒரு சக்திமிக்க தேசமாக மாற்றிவிட்டார்கள்.
அயல்நாடுகள் அரபுநாடுகளாக இருக்கின்ற போதும், நடுநாயகமாகத் தனித்திருந்து சூழவுள்ள நாடுகள் அனைத்திற்கும் சவால்விடும் தேசமாக இன்று இஸ்ரேல் வளர்ந்த கதைக்குப் பின்னால் இருப்பது, தோல்விகளைக் கண்டு பின்வாங்காத உறுதிமிக்க மனோபாவம், அர்ப்பணிப்புடன் ஒன்றுபட்ட கடும் உழைப்பு, தளராத தன்னம்பிக்கை மற்றும் எத்தகைய இழப்புகள் வரினும், இலக்கினை அடையும் வரை போராடும் மனஉறுதி. இவை கடந்த கால அல்லது அண்மைக் கால எடுத்துக்காட்டுக்களும் எமக்கான சில எடுத்துக்காட்டுக்களுமே ஆகும். எமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாமே போராட வேண்டும். காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும், எமக்கான சாத்தியப்பாடுகள் கைநழுவிப் போய்விடும். ஆகவே, எமக்கு ஏற்பட்ட பேரழிவென்பது, எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்வுக்குத் தடையாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு ஏற்படப்போகும் சவால்களைத் தகர்ப்பதற்கு நாமே போராட வேண்டும்.
அழிவுகளைக் கண்டு நாம் பின்வாங்காமல், எமது இலட்சியத்தைக் கைவிடாமல், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இலட்சக்கணக்கான எமது மக்களை பூண்டோடு அழிக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டத்தை அறிந்த எமது போராட்ட அமைப்புக்கு, எமது மக்களைப் பாதுகாக்கும் நோக்கோடு ஆயுதங்களை மௌனமாக்கும் நிர்ப்பந்தம் உருவானது.
எமது மண் சிங்கள இனவெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது! எமது பண்பாட்டுச் சின்னங்கள், மத வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகிறது! இந்த நிலை நீடிக்குமிடத்து, தமிழர் என்ற இனமே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும். எமது தாயக நிலப்பரப்பு முற்றுமுழுதாக சிங்கள இனவெறியர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்படும். ஆகமொத்தத்தில், எமது கடந்த கால அடையாளங்கள் மட்டுமல்ல, எதிர்கால இருப்பே இல்லாமல் போகும் பேராபத்து விரைவாகச் சூழ்ந்து வருகிறது. இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களையும் இழந்த பின்னும் நாம் அமைதி காக்கப் போகிறோமா?
பல்குழல் எறிகணைகளின் வீச்சு ஒருபக்கம், கடற்படையின் தாக்குதல் இன்னொருபக்கம், இரசாயனக்குண்டுத் தாக்குதல் மறுபக்கம், இவற்றையெல்லாம் தாண்டி, மிகையொலி விமானங்களின் கொடும் தாக்குதல். உண்ண உணவில்லை, உயிரைப் பாதுகாக்க இடமில்லை, பட்ட காயத்திற்கு கட்டுப்போட மருந்தில்லை, இப்படியான இக்கட்டான நிலைமைகளுக்குள்ளும் இலட்சியப் பற்றுறுதியோடு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று எமது தாயக மண்ணோடு சங்கமித்த எம்மக்களை ஒரு தரம் நினைத்து பாருங்கள்.
சுதந்திரமே மூச்சென்று வாழ்ந்து கல்லறைகளுக்குள் விழிமூடிய பின்னும், எம் கனவுகளுக்குத் துணைநிற்கும் மாவீரர்களை மனத்திற் கொள்ளுங்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட மண்ணில் இறுதிக்கணம் வரை நிலைகொண்டு, சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் வெளிக்கொணர்வதற்காக தாயக மண்ணில், சிறீலங்காப் படைகளின் கொடூர பிடிக்குள் இருந்து கொண்டு துணிச்சலோடு செயற்படும் போராளிகள் - மாவீரர் குடும்ப உறுப்பினர்களின் மனவுறுதியைப் பாருங்கள்.
இராணுவ மயமாக்கப்பட்ட மயான பிரதேசங்களுக்குள் வாழ்கின்ற போதும், சிறீலங்காப் படைகள் நடாத்திய இனஅழிப்புப் போரின் சாட்சிகளாக முன்வந்துகொண்டிருக்கும் எங்கள் தாய்க்குலங்களைப் பாருங்கள். இத்தனை நடந்த பின்னும், இவர்களின் போராட்ட உணர்வு மட்டும் மங்கவில்லையே.
ஆனால், களத்தோடு ஒப்பிடுமிடத்து, புலத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு விடுதலைக்கான ஆதரவுத்தளங்களை விஸ்தரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆயினும், அந்தப் பணி ஆக்கபூர்வமாக இன்னும் தொடங்கப்படாமையால் எமது மக்களின் விடுதலைக்கான போராட்டச் சக்கரம் மந்த நிலையை அடைந்துள்ளது. இது எதிரியானவனுக்கு வாய்ப்பானதாக மாறிவிட்டுள்ளது. ஆகவே, தாயக விடுதலையென்ற உன்னத இலட்சியத்தை அடைவதற்காகவும், எமது மக்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் உணர்வுடனும், உத்வேகத்துடனும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.
மிக நெருக்கடியான காலகட்டமொன்றிலே தேசியத் தலைவர் உறுதியாக எடுத்த முடிவொன்றைக் கூறி இந்தக் கருத்து பகிர்வை நிறைவுசெய்கிறேன். அமைதி காக்கும் படையென்ற பெயரில் வந்திறங்கிய இந்தியப் படையினர் எமது மண்ணை ஆக்கிரமித்து, எமது மக்களைப் படுகொலை செய்தபோது, அவர்களுக்கு எதிராக போரிடுவதைத் தவிர வேறுவழியில்லையென்ற முடிவில் போரிடத் தயாரான போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் அதற்கு இணங்கவில்லை. ஏனெனில், இந்திய இராணுவத்தின் உச்சபலம் அவர்களை அவ்வாறான ஒரு நிலைக்கு இட்டுச்சென்றது. ஆனால், தேசியத் தலைவரோ தான் எடுத்த முடிவை மிக நேர்த்தியாக நிறைவேற்றினார்.
எத்தகைய சவால்கள் வரினும் எமது சுதந்திரப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று தன் அருகிலிருந்தவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.
இது, எமது இன்றைய நிலைக்கும் பொருந்தும்.
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger