
அரசதரப்பில் அதிருப்தி அடைந்திருக்கும் சில சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட சுமார் 20 ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இரகசியமாக சந்தித்து உரையாடியுள்ளதாக பதுளை மாவட்ட ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொ்னாண்டோ தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதியன்று நாட்டின் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் உதயமாகுமென்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஹரீன் பொ்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்,
இன்று அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. அதை மூடி மறைப்பதற்காக அரசாங்கம் ஐ.தே.கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாக நாட்டுக்கு காட்ட முற்படுகிறது. இப்போது எமது பிரச்சினையை நாம் முழுமையாக தீர்த்துக் கொண்டு விட்டோம்.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அதிகாரம் ஒரு சிலரது கைகளுக்குள்ளே வைக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி அடைந்துள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட்ட 20 பா.உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் தனியாகவும் இணைந்தும் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் பல சந்திப்புகள் இடம்பெறவிருக்கின்றன. இவர்களின் அதிருப்தியை போக்குவதற்காக 70 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுகளை கண்காணிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்க ஜனாதிபதி முயற்சியெடுத்தபோதிலும் அவற்றை ஏற்க அவர்கள் மறுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகாரம் ஒரு சிலரது கைகளுக்குள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சுப் பதவிகள் பெயரளவில் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சர்கள் ஆத்திரமடைந்து காணப்படுகின்றனர்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாணசபை அமைச்சர்கள், கட்சியின் அமைப்பாளர்கள் ஆகியோர் கட்சயின் செயலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பும் செய்திருந்தனர்.
எதிர்காலத்தில் கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள அவர்களின் நடவடிக்கைகளினாலேயே ஆளும்கட்சி அதிகாரத்திலிருக்கும் நகர சபைகள்,பிரதேச சபைகளின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துரையிடுக