
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2004 ம்ஆண்டு சுனாமிப் பேரலை அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை நடைபெற்றது.
மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்த இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல் நடைபெற்றது.
நாவலடி சுனாமி நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரார்த்தனையாக, திதியுடன் கூடிய நினைவு விசேட பிரார்த்தனை சோதிடர் சிவ ஸ்ரீ சி.சா.ராமதாஸ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இவருடன் சிவஸ்ரீ முரசொலி மாறக் குருக்கள், சிவஸ்ரீ விக்கினேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீரங்க சர்மா குருக்கள், சிவஸ்ரீ பரமானந்த குருக்கள், சிவஸ்ரீ பகீரத சர்மா குருக்கள், சிவஸ்ரீ தயாபர குருக்கள், சிவஸ்ரீ அனோஜ சர்மா குருக்கள் ஆகியோரும் கிரியைகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பில் அதிகமான மக்கள் பலியான நாவலடியில் வருடா வருடம் பிதிர் கடமை நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இவ்வருடமும் மட்டக்களப்பில் உயிரிழந்த, இலங்கையில், உலகத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் நடைபெற்றது.
இப் பிரார்த்தனையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது இடங்களில் பிதிர் கடமைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் கலந்து கொள்வது வழக்கமாகும்.
இம்முறை இந்நிகழ்வில், மட்டக்களப்பின் பல இடங்களிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டு தமது உறவனர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், ஏ.கிருஷ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன், ரி.எம்.வி.பி. அமைப்பின் செயலாளர் நாயகம் கைலேஸ்வரராஜா ஆகியோரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாவலடியில் மாத்திரம் 925 பேர் சுனாமியில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் மாத்திரம் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
அந்தவகையில், திருச்செந்தூர், டச்பார், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டு.திருமலை மறைமாவட்ட துணை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை, அருட்திரு. யோசப் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நடத்தினர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவுப் பிரார்த்தனைகள், மத அனுஸ்டானங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.










கருத்துரையிடுக