News Update :
Home » » ஐயோ என்னை விட்டுவிடுங்கள் புலம்பிய இலங்கை அதிபர் மகிந்த

ஐயோ என்னை விட்டுவிடுங்கள் புலம்பிய இலங்கை அதிபர் மகிந்த

Penulis : Antony on ஞாயிறு, 12 டிசம்பர், 2010 | முற்பகல் 4:48


இரண்டாவது தடவையாக ஒக்ஸ்போட் சங்கத்தில் பேசி தன்மீதுள்ள போர்க்குற்றப்பழியை போக்கிவிட வேண்டுமென பல மாதங்களாக தவமிருந்த சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிட்கு கிடைத்த அவமானம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
வந்தேன் பிழைத்தேன் போதும் என்ற நிலையில் நாடு திரும்பினார் மகிந்தா. பல்லாயிரம் மக்களை கொன்ற கொலைகாரனை எப்படி நாட்டுக்குள் அனுமதிக்க விடலாம் என்று பல்லாயிரம் தமிழ் மக்கள் இங்கிலாந்தில் மேற்கொண்ட போராட்டங்களினால் துரத்தியடிக்கப்பட்டார் சிறிலங்காவின் மேன்மைமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

இங்கிலாந்தில் ஏற்பட்ட அவமானத்தினால் மனம் நொந்துபோன ராஜபக்சாவிற்கு டிசம்பர் 3-இல் அவரின் அரசியல் சகாக்கள், அபிமானிகள் மற்றும் மத குருமார் அமோக உற்சாகத்துடன் வரவேற்று ஏதோ நாட்டுக்கே நல்ல பெயர் வாங்கிக்கொண்டுவரும் தலைவருக்கு அளிக்கும் மரியாதையை அளித்து மகிந்தாவின் கவலையை போக்க வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வேடிக்கையென்னவெனில், கடந்த வருடம் மே மாதம் மத்திய கிழக்கு நாடு சென்று பண்டாரநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததும் தரையில் விழுந்து வணக்கம் செய்து ஒரு அறிவிப்பைச் செய்தார். தனது அரசு புலிகளை அழித்து பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தார்.

புலிகளைக் காட்டி சிங்கள மக்களிடம் அமோக ஆதரவைப்பெற்று பல அடுக்கடுக்கான அரசியல் வெற்றிகளை பெற்ற மகிந்தாஇ தோல்வியுற்ற நாட்டையே ஆழும் தலைவர் என்பதை டிசம்பர் மூன்றாம் நாள் காண்பித்துவிட்டார். தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்து உலகே சிறு கிராமமாக உருப்பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் மகிந்தா சிங்கள மக்களை எத்தனைகாலம் தான் ஏமாற்றப்போகிறார் என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும். சர்வாதிகார ஆட்சியையே நடாத்திக்கொண்டு சிங்கள மக்களை இருட்டறைக்குள் வைத்து நாட்டை குட்டிச்சுவராக்கும் மகிந்தாவின் கனவு எவ்வளவு காலம்தான் இருக்கும் என்பதையும் காலம் தான் சொல்ல வேண்டும்.

சிங்கள மக்களும் மகிந்தா சொல்வதெல்லாம் உண்மையென்று நினைத்துக்கொண்டு இருப்பது துரதிஸ்டவசமே. தான் அவமானப்பட்டது போதாதென்று முழுச் சிங்களத் தேசத்திற்கே அவமானத்தை பெற்றுக்கொடுத்த மகிந்தாவை துதிபாடுவது வெட்கக்கேடானது. சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து பெறப்படும் பணத்திலிருந்து அதிகளவிலான தொகையை தனக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள், சில முக்கிய மதத் தலைவர்கள் மற்றும் அரச படை அதிகாரிகளுக்கு மகிந்தா வாரி வழங்குகின்றார். வாங்கும் பணத்திற்காகவும், பதவி ஆசைகளுக்காகவும் மோசம் போகின்றார்கள் பல முன்னணி தலைவர்கள் என்பதுதான் சிறிலங்காவில் நடைபெறும் நிகழ்வுகள். கடனைக் கொடுக்கும் நாடுகள் நாளை நாட்டையே தாரைவார்த்துக் கொடுக்கும்படி கேட்டாலும் கொடுக்கத்தயாராக இருக்கும் கூட்டமே இக்கூட்டம். தமிழ் மறவர்கள் கொட்டும் பனியிலும் புலிக்கொடியை ஏந்தி தமிழீழமே தமது தாயகம் என்று கூறி மகிந்தாவை சூரசம்சாரம் செய்யுமளவு இங்கிலாந்தில் களம்கண்டது வரலாற்றில் மறக்க முடியாதொரு நிகழ்வே.

நடந்தது என்ன?

இந்த வருட ஆரம்பத்தில் ஒக்ஸ்போட் சங்கத்தினால் மகிந்தாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழீழப் பகுதியில் வலிந்த இராணுவ தாக்குதலை மேற்கொண்டு இருந்தவேளையில் ஒக்ஸ்போட் சங்கத்தினால் அழைக்கபட்டு 2008-ஆம் ஆண்டில் கலந்துகொண்டு முதலாவது தடவையாக மகிந்தா சிறப்புரையாற்றினார்.

புலிகளை அழிக்கும் தனது கோட்பாட்டில் வெற்றிகளை தனது இராணுவம் பெற்றுவருவதாக கூறிய மகிந்தா, புலிகள் கூறுவதுபோல் அப்பாவிப் பொதுமக்கள் எவரும் சாகவில்லை என்று கூறி அமோக கைதட்டலை பெற்றார். 2008-ஆம் ஆண்டு ஆதரவு எப்படியிருந்ததோ அதைவிட அமோக ஆதரவு இந்தவருடமும் இருக்கும் என்ற மமதையில் அழைப்பை ஏற்றுக்கொண்டார் மகிந்தா.
உலக நாடுகளின் பல அழுத்தங்களின் மத்தியில் நவம்பர் 29-ஆம் நாள் தனி விமானத்தில் புறப்பட்டு ஹீத்துறு விமானநிலையத்தை வந்தடைந்தார். இதையறிந்து நூற்றுக்கணக்கில் திரண்ட தமிழ் மக்கள் விமான நிலையத்தில் வைத்தே மகிந்தாவுக்கு எதிராக கோசங்களை முழங்கி நாட்டுக்குள் வராதே என்று புலிக்கொடியுடன் நிற்கையில் வேறொரு பாதைவழியாக மகிந்தாவை அழைத்துச் சென்றுவிட்டார்கள். டோர்ச்செஸ்டர் என்கிற ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கவைக்கபட்டார் மகிந்தா. ஒக்ஸ்போட் சங்கத்தில் பேசுவதற்காக தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார் மகிந்தா.

அதிர்ச்சித் தகவல் ஓன்று டிசம்பர் முதலாம் திகதியன்று ஒக்ஸ்போட் சங்கத்தின் தலைவர் வழியாக மகிந்தாவிற்கு கிடைத்ததும் என்னசெய்வறியாது திகைத்துப் போனார். அறிவிக்கப்பட்ட மகிந்தாவின் பேச்சு ஒக்ஸ்போட் சங்கத்தில் இடம்பெறாது என்றும் அதற்கான காரணத்தையும் விளங்கப்படுத்தினார் ஒக்ஸ்போட் சங்கத்தின் தலைவர். உடனே உணர்ச்சிவசப்பட்ட மகிந்தா தனது உதவியாளரிடம் கூறி பத்திரிக்கை அறிக்கையை தயாரித்து அனைத்து பத்திரிக்கைகளுக்கும் கொடுக்கும்படி கட்டளையிட்டார். அதனடிப்படையில் செய்தியாளர்களுக்கு செய்தி பரவியது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒக்ஸ்போட் சங்கம் குறித்த நிகழ்வை ரத்துச் செய்துள்ளதெனவும் ஜனாதிபதி மீண்டும் பிரிட்டனிலோ அல்லது வேறொரு நாட்டிலோ உலக மக்களிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் கூறியது அந்த அறிக்கை.

குறுகிய இரு நாட்களில் பல்லாயிரம் மக்களை ஒக்ஸ்போட் சங்கத்தின் முன்பாக வரவழைத்து ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தி ஜனாதிபதியின் முகத்திரையை கிழிக்கவே தமிழர் தரப்பினர் திட்டம் தீட்டியிருந்தனர். அதற்குமுன்னராகவே ஒக்ஸ்போட் சங்கத்தினரும் குறித்த நிகழ்வை ரத்துச் செய்துவிட்டார்கள். தமிழர் தரப்பினர் தாம் நினைத்தது போலவே தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி மகிந்தா தங்கியிருந்த நட்சத்திர விடுதியை முற்றுகையிட திட்டமிட்டார்கள். அறிவித்தபடியே பல்லாயிரம் மக்கள் குறித்த விடுதியைச் சுற்றி போராட்டங்களை ஆரம்பிக்கும் வேளையில் மகிந்தா எப்படியோ தப்பி சிறிலங்காவின் உயர் ஸ்தானிகராலயம் சென்றடைந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்டு தமிழ் மக்கள் அங்கேயும் போராட்டங்களை ஆரம்பிக்க தயாராகினார்கள். குறித்த நேரத்தில் மகிந்தா ஒரு நிகழ்ச்சியை அங்கே நடாத்திக்கொண்டிருந்தார். மக்கள் பெருந்திரளாக வருவதையறிந்த அதிகாரிகள் எப்படியேனும் மகிந்தாவை நாட்டை விட்டு அனுப்பிவிடுவதே புத்திசாலித்தனம் எனக் கருதி அவரை திருப்பி அனுப்பும் வேலையில் தாயாராகிக் கொண்டிருதார்கள்.

குறித்த காலப்பகுதியில் தமிழர் தரப்பினர் போர்க்குற்ற வழக்கறிஞர்கள் மூலமாக மகிந்தாவை கைது செய்யும் வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்கள். தீர்ப்பு வருவதற்கு முன்னரே தப்பி சென்றுவிட்டார் மகிந்தா. தமிழருக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியே இது என்று கூறுகின்றனர் அரசியல் அவதானிகள். பிரிட்டிஷ் அரசே மகிந்தாவை கைது செய் அல்லது நாமே அவரை கைது செய்து தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்ற முனைப்புடன் களமிறங்கிய பிரிட்டிஷ் தமிழ் மக்களை பார்த்து உலகத்தமிழினமே தலை சாய்ந்து நன்றி கூறியது.

நடந்ததை மறக்க நிகழ்த்தப்பட்ட நாடகம்

லண்டனில் இடம்பெற்ற அவமதிப்பை மறப்பிக்க சிங்களவர்கள் மகிந்தாவை ஒரு ராஜதந்திர தலைவன் போன்று காண்பித்து அவரை சாந்தப்படுத்த தாயாராகியது ஒரு கூட்டம். குறிப்பிட்ட இந்த கூட்டம் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மகிந்தாவை அவமதித்து அனுப்பியதற்காக கோஷமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இந்தக் கூட்டம் பிரித்தானியாவை வெள்ளைத் தோல் போர்த்திய புலி என்று கோஷமிட்டது. அடிபட்ட பாம்பு தன் கோபத்தை எப்படியெல்லாம் காட்ட முற்படுமோ அதைப்போலவேதான் மகிந்தாவின் அருவருடிகளும் தமது விசுவாசத்தை காட்டி பணத்தையும் பதவிகளையும் பெறவும் அதனை தக்கவைத்து கொள்ளவும் முனைந்தது என்பதுதான் உண்மை.

நாளை ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தால் அந்த கட்சியுடன் தோழமை கொண்டு மகிந்தாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் கூட்டமே இந்த கூட்டம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு கட்சியில் இருப்பதும் பின்னர் ஆழும் கட்சியுடன் சேர்வதுமே சிங்கள தேசத்தின் அரசியல் பண்பாடாகிவிட்டது. மகிந்தாவின் இந்தக் கூட்டத்தை வைத்து எப்படியேனும் தானும்இ தனது குடும்பமும் சிறிலங்காவையே தமதுடமையாக்கிவிடலாமென்ற நினைப்பில் களமிறங்கி செயற்படுகிறது.

மகிந்தாவின் செயல்கள் தொடர்கதையாகிவிட்ட நிலையில்தான் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் வைத்தார்கள் ஆப்பு. ஆயிரம் நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப மகிந்தாவும் அகப்பட்டுவிட்டார். உலக நாடுகள், உலக மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் உலகத் தமிழர்களிடத்திலிருந்தும் தமிழர்களை கொடுமைப்படுத்தி அழித்த அரக்கர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். இதன் முதற்படியே மகிந்தா மீது கொடுக்கப்பட்ட மரண அடி. இதிலிருந்து மீள மகிந்தாவுக்கு சில மாதங்களாவது தேவைப்படும்.

கொடுக்கப்பட்ட மன உளைச்சலிலிருந்து மீழும் முன்னரே மீண்டும் பல அதிர்ச்சிச் செய்திகள் மகிந்தாவிடமும் அவரின் சகோதரர்களிடமும் வந்து சேரும். தொடர் வெற்றியையே பெற்றுவந்த இந்தக் கூட்டம் தொடர் இன்னல்களையும் சந்திக்கும் காலம் வெகுதொலைவிலில்லை. உலகத்தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிவிட்டார்கள் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் வைத்து. பிரித்தானியாவின் சாம்ராஜ்ஜியம் கிழக்கில் சூரியன் உதிர்க்கும் போதும்இ அச்சூரியன் மேற்கில் மாலையில் மறைவதையும் ஒரேநேரத்தில் காண்பார்கள் என்று கூறுவார்கள். ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு காரணமானவேர்களே இந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியம்தான். ஆகவே, பிரச்சினைக்குக் காரணமானவர்களின் நாட்டிலையே ஈழத்தமிழரின் அடுத்தகட்ட போராட்டத்திற்கு களம் அமைக்கப்பட்டுள்ளது. காலத்தின் கட்டாயத்தின் வேண்டுதலில் தமிழீழத் தாயத்திற்கான விடுதலைப் போராட்டம் விடுதலையை நோக்கிய திசையில் செல்கிறது என்பதையே இந்த சம்பவங்கள் எடுத்தக் காட்டுகிறது.

ஐயோ என்னை விடுங்கள் என்னுடைய நாட்டுக்கே தப்பி ஓடிவிடுகிறேன் என்று புலம்பிய மகிந்தா, தமிழீழ மக்களின் விடுதலையை தனது வாழும் நாட்களிலேயே பார்ப்பாரா அல்லது சிறைக்கு வெளியிலிருந்தோ அல்லது சிறைக்கு உள்ளிருந்தோ பார்ப்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அரக்கர்களின் அடாவடித்தனம் ஒருபோதும் நிலைத்து நிற்பது இல்லை. இவர்களின் செயல்களுக்கு என்றோ ஒருநாள் தண்டனை உண்டு என்பதை கருத்தில் கொண்டு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மகிந்தாவினாலையோ அல்லது எந்தவொரு ஆதிக்க சக்திகளினாலையோ தமிழீழம் மலர்வதை தடுக்க முடியாது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger