News Update :
Home » , » புலி-புலி என்று சொல்லி எமது மக்களது உரிமைகளை மறுக்காதீர்கள் - சிறிதரன் (வீடியோ இணைப்பு)

புலி-புலி என்று சொல்லி எமது மக்களது உரிமைகளை மறுக்காதீர்கள் - சிறிதரன் (வீடியோ இணைப்பு)

Penulis : Antony on புதன், 15 டிசம்பர், 2010 | முற்பகல் 12:09


நான் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில், அவர்களின் குரலை இந்த அவையில் ஒலிக்கச்செய்ய வேண்டியது எனது பொறுப்பும், ஜனநாயக உரிமையுமாகும். மக்களின் பெயரால் எனது குரலுக்குச் செவிசாயுங்கள்!


கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, ஏனைய சகோதர உறுப்பினர்களே, எங்களுடைய பாதுகாப்புக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்திலே தமிழ் மக்கள் கடந்த காலங்களை விட, கூடுதலான சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

மக்களின் நீதியான குரலே சனநாயகத்தின் குரல்! தமிழ் மக்கள் நீதி கோருகின்றார்கள். கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அவர்களுடைய குரல் நீதியின்பால் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. இப்போது, அத்தகைய தமிழ்மக்களின் குரல்களைப் பிரதிபலிப்பவர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினா்கள் உள்ளனர்.

தங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்று கூறிக்கொண்டு, இக்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு மாறிச்சென்று, சனாதிபதி அவர்களின் கரங்களைப் பற்றிப்பிடித்து எலும்புத் துண்டுக்காக ஏங்கித் தவிப்பவர்களும் தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

இலங்கைத் தீவானது, நீதியின் கதையாய் அமையப்போகிறதா? அல்லது, தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த வரலாறாய் அமையப்போகிறதா? காலம் எப்பொழுதும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.

வரலாறு தனது அத்தியாயத்தை எழுதியே செல்கின்றது. அந்தச் சந்தர்ப்பம் தற்பொழுது உங்களிடம் தரப்பட்டுள்ளது. 'கெளரவமான அரசியல் தீர்வு' என்ற வார்த்தைகளை- தனது கொள்கைகளை ‘மஹிந்த சிந்தனை’யாக முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்றவர் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.

ஆனால், அந்த "கெளரவமான தீர்வு" - தமிழ் இனமும் ஏனைய இனங்களும் தத்தம் தனித்துவத்துடன் கெளரவமான உரிமைகளைப் பெறாவிட்டால், 'கெளரவம்' என்ற சொல் ஏனைய இனங்கள் மீதான சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு என்ற பொருளையே கொண்டிருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு மதத்திற்கும் அதனதன் தனித்துவத்தில் இருந்தே கெளரவம் உதயமாகின்றது.

ஏனைய இனங்களின் தனித்துவத்தையும், கெளரவத்தையும் பேணிப் பாதுகாக்கவும், வளர்க்கவும் வல்ல அரசியலை மேற்கொள்ளாதுவிட்டால், அது சிங்கள இன ஆதிக்கத்தின் அரசியலாகவும் அவ்வரசியலுக்குத் தலைமை தாங்கும் சனாதிபதி அவர்கள் சிங்கள இனத்துக்குரிய சனாதிபதியாகவுமே ஏனைய இனங்களால் கருதப்படுவர். மக்களின் விருப்பப்படிதான் தீர்வு காண்பது என்றுசொல்வது, சிங்கள மக்களின் விருப்பப்படியாக மட்டும் அமைந்துவிட முடியாது. சிங்கள மக்களின் விருப்பம் மட்டும் சனநாயகம் ஆகிவிடமாட்டாது.

ஏனைய மக்கள் தங்களின் தனித்துவத்தைப் பேண எவற்றை உரிமை என்று விரும்புகிறார்களோ அதுவே சனநாயகமாகும். இன்னொரு இனத்தின் உரிமையை மறுக்கும் வகையிலான பெரும்பான்மை இனத்தின் விருப்பம் சனநாயகம் ஆகிவிடமுடியாது. சர்வதேச அரசியலில் இல்லாத ஒரு விசித்திரமான பகுதி இலங்கை அரசியலில்தான் உண்டு. அதாவது, பல்லினங்கள் வாழும் ஒரு தேசத்தில் அளவால் சிறிய இனங்களுக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசியல் யாப்பினூடாக வழிவகை செய்யப்படுகின்றன.

ஆனால், இலங்கையில் பெரும்பான்மை இனத்துக்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் அதன் யாப்பில் செய்யப்பட்டுள்ளன. சிறுபான்மை இனங்களுக்கென ஏற்கெனவே இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் அகற்றப்பட்டு வந்துள்ளன. அதாவது, இலங்கையில் பெளத்த மதம் முதன்மையான மதம் என யாப்பில் வரையப்பட்டுள்ளதுடன் அப்பெளத்தத்தை பேணிப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமையும், பொறுப்பும் எனவும் வரையப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறுபான்மை இனங்களுக்கென 'சோல்பரி' அரசியல் யாப்பில் குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடாக உருவாக்கப்பட்டிருந்த 29ஆவது சரத்தானது, 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பில் நீக்கப்பட்டு, 2ஆவது குடியரசு யாப்பிலும் அது தொடர்கிறது. ஒரு யாப்பில் ஏற்கனவே காணப்படும் உரிமைகள் பின்பு தொடர்ந்து வளா்ந்து செல்வதைத்தான் யாப்பின் பரிணாம வளர்ச்சி என்று சொல்வார்கள். அதுவே உலக வழக்கமாகும். அத்தகைய யாப்பின் பரிணாம வளர்ச்சி என்பது, சிங்கள இனம் அல்லாத ஏனைய இனங்களைப் பொறுத்து அது தேய்மானமாகவே இருக்கின்றது.

அதாவது, மேல்நோக்கிப் பரிணாம வளர்ச்சி அடையவேண்டிய யாப்பானது ஏனைய இனங்களைப் பொறுத்து கீழ்நோக்கித் தேய்மானம் அடைந்து செல்கிறது.

மேதகு சனாதிபதி அவர்கள் கூறிவரும் அனைத்து இனத்தவரும் "ஒரே மக்கள்" என்ற கொள்கையானது, ஏனைய இனங்கள் அனைத்தினதும் தனித்துவங்களும், உரிமைகளும் முற்றிலும் இல்லாது அழிக்கப்பட்டுவிடப் போவதன் செய்தியாகவே காணப்படுகிறது.

அரசியல் தீர்வுக்குப் பயங்கரவாதம் தான் தடையாக உள்ளதாகக் கூறிவந்த அரசாங்கமானது, அப்பயங்கரவாதத்தை தாம் அழித்துவிட்டதாகக் கூறும் நிலையில், இப்போது அரசியல் தீர்வுக்கு யார் தடையென நானும் நான் சார்ந்த கட்சியும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களும் சர்வதேச சமூகமும் அறிய விரும்புகின்றோம். உரிமைகோரும் மக்களைக் கொல்வதில் 'கெளரவம்' உருவாக முடியாது. அந்த மக்களின் உரிமைகளை வழங்குவதில்தான் 'கெளரவம்' உருவாக முடியும்.

'கெளரவம்' அழிப்பில் ஏற்பட முடியாது; அது ஆக்கத்திற்தான் ஏற்பட முடியும். பயங்கரவாதத்தை அழிப்பதற்கென பல்வேறு சர்வதேச நாடுகளின் உதவிகளை அரசாங்கம் நாடி பெற்றுக்கொண்டது. ஆனால், அதே நாடுகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது மட்டும் அதனை 'வெளிநாடுகளின் தலையீடு' எனக் கூறி புறக்கணிக்கிறது.

நான் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில், அவர்களின் குரலை இந்த அவையில் ஒலிக்கச்செய்ய வேண்டியது எனது பொறுப்பும், ஜனநாயக உரிமையுமாகும். மக்களின் பெயரால் எனது குரலுக்குச் செவிசாயுங்கள்! தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கு வெளிநாடுகளின் உதவியைப் பெறும் அரசாங்கமானது, தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றி வெளிநாடுகள் கதைத்தால் அதனை, 'உள்நாட்டுப் பிரச்சினை' என்று கூறி நிராகரித்துவிடுவது பெரும் முரண்பாடாகும்.

இன்றைய காலகட்டமானது, பூகோள அரசியல் தோன்றியுள்ள யுகமாகும். இன்று உலகில் எதுவுமே வெறும் உள்நாட்டு அரசியலாக நிகழ்வதில்லை. ஆதலால், சர்வதேச அரங்கில் பின்பற்றப்படும் இன உரிமைகள் எவையும் இலங்கைக்கு விதிவிலக்கானவையல்ல.

இனங்களின் தனித்துவங்களைப் பேணுவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இலங்கைக்கு விதிவிலக்கானதல்ல. இனங்களின் சுயாதிபத்தியத்தை பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்குமான அரசியல் தீர்வு முறைகள் எதுவும் இலங்கைக்கு விதிவிலக்கானதல்ல. உலகின் பொதுவான மரபுகளைப் பின்பற்றி இனங்களின் தனித்துவமும் அவற்றுக்கான அரசியல் தீர்வுகளும் இலங்கையில் காணப்பட வேண்டும். இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தத்தில் பங்கெடுத்த அரசுகளுக்கும், அந்த யுத்தத்தில் இலங்கை அரசுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணவேண்டிய விடயத்தில் பெரும் பொறுப்பு உண்டு. உலகம் தழுவிய ஜனநாயகத்தின் பெயரால் அத்தகைய சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசியலில் பெரும் பொறுப்பும், பணியும் உண்டென்பதை நிராகரிக்க முடியாது.

ஏனைய விடயங்களில் சர்வதேச அரசியலில் இருந்து எப்படி இலங்கை ஒதுங்கி இருக்கவில்லையோ அப்படியே இனப்பிரச்சினைக்கான தீர்வில் இருந்தும் சர்வதேச மாதிரிகளையும், பங்களிப்பையும் இலங்கை அரசு புறந்தள்ள முடியாது. மேற்குலகில் அரசியல் தீர்வு பற்றிய கருத்துக்கள் எழும்போது, 'ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடு' என்று கூறி அரசு அதனை இழிவுபடுத்துகின்றது. நவீன ஏகாதிபத்தியமானது, வர்த்தகாதிக்கத்தின் வடிவில் உள்ளது. தனது நாட்டின் எல்லைக்கு வெளியே வந்து எந்த நாடு வர்த்தக ஆதிக்கத்திலும், வர்த்தகப் போட்டியிலும் ஈடுபடுகிறதோ அதுவே எகாதிபத்தியமாகும். ஆதலால், இன்று வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகள்தான்.

எனவே, மேற்குலகத்தை மட்டும் 'ஏகாதிபத்தியம்' என்று கூறிவிட முடியாது. குறிப்பாக, மேற்குலக நாடான பிரிட்டனுக்கு இலங்கையின் இனப்பிரச்சினையில் பெரும் பங்குண்டு. சோல்பரி யாப்பை உருவாக்கிய, சோல்பரிக் குழுவின் தலைவரான சோல்பரி பிரபு இனப்பிரச்சினை விடயத்தில், தான் தவறிழைத்துவிட்டதாக பின்னாளில் சி. சுந்தரலிங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "Ceylon: A Divided Nation" என்ற தலைப்பில் B.H. பாமர் எழுதிய நூலுக்கு சோல்பரி பிரபு எழுதிய அணிந்துரையில் மேற்படி தவறுக்கான ஒப்புதல் வாக்குமூலம் எதிரொலிக்கிறது.

இது விடயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டிய தவிர்க்க முடியாத பொறுப்பு பிரிட்டனுக்குண்டு. மேலும், ஓர் ஆழமான விடயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். அதாவது, சிங்கள ஆட்சியாளர்களிடமும் சிங்கள மக்களிடமும் காணப்படும் இந்திய எதிர்ப்புவாதமே தமிழ் மக்களுக்கெதிரான யுத்தமாக பிரதிபலிக்கிறதென்று முன்வைக்கப்படும் கருத்து இங்கு கவனத்துக்குரியது. இந்தியாவின் மீது சிங்கள மக்களுக்குள்ள பயத்தின் காரணமாக இந்தியாவிற்கு எதிரான யுத்தத்தை அவர்கள் ஈழத் தமிழ் மக்கள் மீது புரிகிறார்கள்.

இந்திய ஆதிக்கத்துக்கான வாய்ப்பை இலங்கையில் இல்லாது செய்யவேண்டுமென்றால், ஈழத் தழிழரை அழிக்க வேண்டுமென்ற சிந்தனையின் அடிப்டையில் ஈழத் தமிழருக்கு எதிரான அரசியல் நீண்டகாலமாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய விடயத்தில் இந்தியாவிற்கும் பெரும் பொறுப்புண்டு. அயல்நாடு என்ற விடயத்தில் அநீதி இழைக்கப்படும் ஈழத் தமிழருக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவின் பொறுப்பும் பணியும் தலையாயது.

அயலிலுள்ள ஒரு பெரிய நாடு மட்டுமன்றி, உலகிலுள்ள பெரிய ஜனநாயக நாடு என்ற வகையிலும் தமிழ் மக்களுக்கான நீதியான தீர்வைக் காணவேண்டிய விடயத்தில் இந்தியாவிற்கான பங்கும் பணியும் தலையாயது. அத்துடன் இந்தியாவின் பெயரால்தான் ஈழத் தமிழர் இலங்கையில் ஒடுக்கப்படுகின்றனரென்பதை இந்தியா பெரிதும் கருத்திலெடுக்க வேண்டியதும் அவசியம். நீதியான தீர்வு பற்றிச் சிங்களத் தலைவர்கள் பலரும் முன்பு பேசியுள்ளதை நாம் இங்கு நினைவிற்கொள்ள வேண்டியது அவசியம்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக இன்று ஆட்சியிலிருக்கும் கட்சியை ஸ்தாபித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்கள் 1926 ஆம் ஆண்டு சமஷ்டித் தீர்வை முன்வைத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.

சமஷ்டித் தீர்வு முறைக்கு எதிராக ஆயிரத்தொரு எதிர்ப்புக்கள் எழ முடிந்தாலும், இறுதியில் அவ்வெதிர்ப்புக்கள் அகன்று சமஷ்டி முறைதான் ஒரே தீர்வாக அமைய முடியுமென்று அவர் கூறினார். “Federation as the only solution to our political problem”என்ற தலைப்பில் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறியுள்ளார். [இடையீடு] “In Ceylon each province should have complete autonomy. There should be one or two assemblies to deal with the special revenue of the Island. A thousand and one objections could be raised against the system but when objections were dissipated, he was convinced that some form of Federal Government would be the only solution” [இடையீடு] இந்த உரையை 1926 ஆம் ஆண்டு யூலை மாதம் 17 ஆந் திகதி வெளியாகிய Morning Leader பத்திரிகை வெளியிட்டுள்ளதை நாம் காணலாம்.

அதேபோல 1995 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் திகதிய The Sunday Times பத்திரிகைக்கு J.R. Jayawardene அளித்த பேட்டியொன்றில் At this stage what would you feel is the best solution to the N-E conflict? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த விடை The federal system என்பதாகும். அதாவது ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு சமஸ்டி முறைதான் மிகச் சிறந்த தீர்வென அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பண்டாரநாயக்க தன் கருத்தை முன்வைத்த காலத்தை விடவும் இனப் பகைமை அதிகம் முன்னேறிவிட்ட காலமிது. இப்பின்னணியில் அதிகமதிகம் சிறப்பான அரசியல் தீர்வைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும். சுமாராகக் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளின் விளைவால் தமிழ் மக்களின் உயிர்கள் இலட்சக் கணக்கில் காவு கொள்ளப்பட்டுள்ளன.

1956ம் ஆண்டு கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவித் தமிழ் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதில் ஆரம்பமாகி 1958 இனக் கலவரம் உட்படப் பல இனக்கலவரங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை இலட்சக் கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், முதியோர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பல தரத்திலும் மக்கள் கொல்லப்பட்டுள்ளதை வரலாற்று ஏடுகள் பதிவு செய்துள்ளன.

இவை எதுவும் கெளரவமான விடயங்களல்ல. நீதியான தீர்வைக் காண்பதுதான் கெளரவம். இத்தனைக்கும் பின்புகூட அரசியல் தீர்வைக் காண்பதில் இன்றைய அரசாங்கம் அக்கறை செலுத்துவதாய்த் தெரியவில்லை.

ஆட்சிக்கு வரும் இரு பெருங் கட்சிகளையும் சேர்ந்த இரு பெருந் தலைவர்களின் கூற்றுக்களையே நான் மேற்கோள் காட்டியுள்ளேன். ஆனால் அப்படி நீங்கள் கூறிய குறைந்த பட்சத் தீர்விலிருந்து இன்று நீங்கள் விலகிச் செல்வது எப்படி நீதியாக முடியும். தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பதற்கான சாட்சிகளாக மேற்கூறிய இரு முக்கிய தலைவர்களின் கூற்றுகளே அமைந்துள்ளன.


தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தை அழிக்க அரசு திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் தனித்துவ அடையாளங்களையும் அவற்றுக்கான தளங்களையும் அழிப்பதற்குக் குடியேற்றங்களை ஒரு முக்கிய கருவியாக ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் பயன்படுத்த முனைகின்றது.

ஒரு மக்கள் கூட்டத்தின் குடியடர்த்திதான் அவர்களினது அடையாளத்தைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்குமான தளமாகும். குறைந்தபட்சம் அம்பாறையில் முஸ்லிம் மக்கள் அடர்த்தியாக இருப்பதால்தான் இலங்கையின் ஏனைய பகுதிகளில் ஐதாக இருக்கும் முஸ்லிம்கள்கூடத் தலைநிமிர்ந்து வாழ வழியேற்படுகிறது. அவ்வாறான முஸ்லிம் மக்களின் குடியடர்த்தியை அழிக்கவல்ல குடியேற்றங்களை மேற்கொண்டால் இலங்கை முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் தமது அடையாளங்களையும் மற்றும் அதிகாரங்களையும் இழந்துவிடுவர்.

ஓர் இனத்தை அழிப்பதற்குக் குடியேற்றமே முக்கியமானதும் அபாயாகரமானதுமான ஆயுதமாகும். அளவால் பெரிய இனமான சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் தமிழர்களோ முஸ்லிம்களோ எவ்வளவு தொகையில் குடியேறினாலும் சிங்கள இனத் தனித்துவத்தை அவர்களால் மாற்ற முடியாது.

ஆனால், அளவால் சிறிய இனத்தவர்களான தமிழர், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் ஒரு சிறு தொகையில் குடியேறினாலே தமிழ், முஸ்லிம் இனங்களின் தனித்துவம் விழுங்கப்பட்டுவிடும். ஆதலால் குடியேற்றங்கள் முற்றிலும் சிறுபான்மை இனங்களை அழிக்கவல்லவை. இவை எல்லா வகைகளிலும் நிறுத்தப்பட வேண்டியது அவசியமான விடயமாகும். பெரும்பான்மை இனமே தனக்கிருக்கும் எண்ணிக்கைப் பலத்தை வைத்துக்கொண்டு அரசியல் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கிறது. இலங்கை அரசியலில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்குத் தீர்மானங்களை எடுப்பதில் பங்கில்லை.

இலங்கை வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்குத் தமிழ் மக்கள் இப்போது ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அரசியல் பங்கையும் உரிமையையும் மறுத்ததன் விளைவுதான் ஆயுதம் தாங்கிய அரசியல் தோன்றக் காரணமாய் அமைந்தது.

நீங்கள் பயங்கரவாதம் என்று எதனைக் கூறுகிறீர்களோ அதனை நீங்கள்தான் உற்பத்தி செய்தீர்கள். இப்போது இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் அழிவின் பின்பும் நீதியான தீர்வைப் பற்றி நீங்கள் யோசிப்பதாய் இல்லை. அந்நிய தேசங்களிடமிருந்து குண்டுவீச்சு விமானங்களை வாங்கி வந்து அந்நிய உதவிகளுடன் தமிழ் மண்ணில் குண்டுமழை பொழியப்பட்டது.

இன்றும் தமிழ்ச் சிறுவர்கள் விமானங்களைக் கண்டால் அஞ்சுகிறார்கள். அந்த யுத்தத்தில் அழிந்தது உயிர்கள் மட்டுமல்ல. தமிழ் மக்களின் நீண்ட பல தலைமுறைக்காலச் சொத்துக்கள், புனித இடங்கள், தூய்மை குலையாத கிராமங்கள் எனப் பலவும் அழிந்துள்ளன.

இந்த உயிரிழப்புகளைச் சாதாரணமாக வெறும் புள்ளிவிபரங்களாக மட்டும் பார்த்துவிட முடியாது. இறந்து போனவர்களின் தொடர்ச்சியாய் அவர்களை எண்ணி எண்ணி ஏங்கித் தவிக்கும் குடும்பங்களை எப்படிக் கணிப்பது? இது கணிப்பீடுகளுக்கும் புள்ளிவிபரங்களுக்கும் அப்பாலான பெருந்துயரம். குடும்பங்களின் சிதைவுகளை உங்களில் யார் எண்ணிப் பார்த்தீர்கள்? சிங்கள மக்களிடம் நீதிமான்கள் இல்லையா என்று தமிழ் நெஞ்சங்கள் குமுறுகின்றன. வெளிநாட்டு உதவி பெற்று வெறும் கட்டிடங்களைக் கட்டுவதாலும் வீதிகள், பாலங்கள் ஆகியவற்றை அமைப்பதாலும் மக்களின் மனங்களிலுள்ள காயங்களை அகற்றிவிட முடியாது.

தமக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுவதாகவே தமிழ் மக்கள் உணர்கிறார்கள். தமிழ் மக்களுக்கான நீதியைப் பற்றி சிங்களவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமையை ஏற்றுக்கொள்வதில்தான் சிங்கள இனத்துக்கான கெளரவம் இருக்கிறது.

ஓர் இனத்தின் கெளரவம் அது ஏனைய இனங்களின் உரிமையை எவ்வாறு மதிக்கிறது என்பதிலே தங்கியுள்ளது. இலங்கை ஒரு பல்தேசியஇன நாடு என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தான் சிங்கள இனத்தின் கெளரவம் ஆரம்பமாக முடியும்.

நீங்கள் நாம் அனைவரும் "ஒரே மக்கள்" என்று கூறிக்கொண்டு ஏனைய இனங்களுக்குள்ள உரிமைகளை மறுப்பதனால் இந்த நாட்டில் சமாதானத்தையோ, நீதியையோ நிலைநாட்ட முடியாது. இலங்கை அரசு பயங்கரவாதத்தை அழித்து விட்டதாக எண்ணி மகிழ்ச்சியடைவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? தமிழ் மக்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக உலகிலுள்ள பல்வேறு நாடுகளிடமிருந்தும் உதவிகளையும் ஆயுதங்களையும் பெற்று தமிழ் மண்ணில் இரத்த ஆறு ஓட விடுவதன் மூலம் என்ன பெருமையை அடைய முடியும். ஒரு சிறிய இனத்தை ஆயுத முனையில் அடக்கி அவர்களுக்குரிய உரிமையை மறுப்பதனால் எத்தகைய பெருமையும் கெளரவமும் பெற்றுக்கொள்ள முடியும்?

எல்லாவிதமான வெற்றிவிழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் அப்பால் தமிழ் மக்களின் துயரங்களையும், காயங்களையும் புரிந்துகொள்வதில் இருந்து அரசியலை ஆரம்பியுங்கள். தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து வந்ததன் விளைவாக அவர்களின் நெஞ்சங்களில் வடுக்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வடுக்களை அழிப்பதிலிருந்து அரசியலை ஆரம்பியுங்கள். நாம் அனைவரும் "ஒரே மக்கள்" என்று சொல்வதனால் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதி அழிந்துவிடப்போவதில்லை.

நாம் "ஒரே மக்கள்" என்று சொல்வதனால் மட்டும் அவர்களின் நெஞ்சங்களில் உள்ள வடுக்கள் ஆறிவிடப்போவதில்லை. மாறாக "ஒரே மக்கள்" என்ற சொல்லுவதன் மூலம் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் ஒரேயடியாக மறுக்கிறீர்கள். ஆதலால் தமிழ் மக்கள் "ஒரே மக்கள்" என்னும் பதத்தை அநீதியின் உச்சக்கட்டமாகவே பார்க்கின்றனர். ஆதலால் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் மறுக்க முடியாத அவர்களின் பிறப்புரிமையாகிய தமிழ் தேசிய உரிமையையும் புரிந்து கொள்வதிலும், ஏற்றுக் கொள்வதிலும் இருந்தே அரசியல் ஆரம்பிக்கப்பட வேண்டும். மேடையில் கைகொடுப்பதன் மூலமும், இசைக்கச்சேரிகளை நடத்துவதன் முலமும் தூதரகங்களில் தீபாவளிக் கொண்டாட்டங்களை நடத்துவதன் மூலமும் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கிவிட்டதாகவோ, இன ஒற்றுமையை உருவாக்கிவிட்டதாகவோ கருதமுடியாது. இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தவல்ல ஒரு தீர்வை முன்வைக்க வேண்டியதே இப்போது மேற்கொள்ளப்படவேண்டிய அவசர பணியாகும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான பாராளுமன்றத்தில் இருக்கவேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு உண்டு. அவர் தீர்வு காண்பதற்கு எத்தகைய தடையும் இல்லை. நாடு நாடாகச் சென்று வெடிகுண்டுகள் கேட்டதற்குப் பதிலாக சிங்கள மக்களின் வீடு வீடாகச் சென்று தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேச சிங்களத் தலைவர்கள் தயாராக உள்ளனரா என்பதற்குப் பதில் கூறவேண்டிய காலம் இது. முஸ்லிம்மக்களின் உரிமையை வற்புறுத்தி இந்துக்களை நோக்கி மஹாத்மாகாந்தி உண்ணாவிரதம் இருந்தார். தீர்வுக்குப் புலிகள் தடையாக இருப்பதாகக் கூறி அத்தடையை அகற்ற யுத்தத்தை முதன்மைப்படுத்திய சிங்களத் தலைவர்கள் இப்போது சிங்களப் பக்கத்தில் தீர்வுக்குத் தடையாக இருக்கும் சிங்களச் சக்திகளுக்கெதிராக காந்தி காட்டிய உண்ணாவிரதப் போராட்டத்தையாவது செய்வார்களா? இப்போது கேள்விக்கிடமின்றி இந்நாட்டில் உள்ள சிங்களத் தலைவர்களும், சிங்கள ஊடகங்களும், சிங்கள புத்திஜீவிகளும் இணைந்து நீதியை நிலை நாட்டவேண்டிய முழுப்பொறுப்பும் உடையவர்களாவர்.

தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதையே அண்மைய நாட்களில் நாம் அவதானிக்கிறோம். மக்கள் தாங்களாக முன்வந்து நடத்துகின்ற போராட்டங்களைத் தவிர்த்து செயற்கையாகப் போராட்டம் நடாத்தத் தூண்டப்படுகின்றார்கள். அண்மையில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் வற்புறுத்தி நடத்தப்பட்ட கட்டாய ஊர்வலங்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும். கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபராக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திருமதி சுபோஜினி குகன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

அரசாங்க அதிபருடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக யுத்தகாலங்களில் மக்களுடன் நின்று ஏழைகளுக்காகப் பணிபுரிந்த ஒரு நிர்வாகசேவை அதிகாரியை அவருடைய உடல்நிலை கூட கருத்திற் கொள்ளப்படாத நிலையில் இன்று இடமாற்றம் செய்துள்ளனர். அநாதைப்பிள்ளைகளுக்காகவும், வயோதிபர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் இரவு பகல் பாராது பணியாற்றிய இவர் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்காகவும், ஒரு சிலரின் அதிகார அடாவடித்தனங்களுக்காகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கச் சென்ற பொழுது அங்குள்ள இராணுவத்தினர் தடுத்துள்ளனர். ஆனால் நிவாரண உதவி வழங்குவதாகக் கூறி மக்கள் ஏமாற்றப்பட்டு ஊர்வலம் நடாத்துமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். சிறைகளிலே வாடும் இளைஞர்கள், யுவதிகள் தொடர்பாக இந்த அரசால் ஏன் ஒரு நல்ல முடிவை அறிவிக்க முடியவில்லை? வன்னியில் புகழ் பூத்த கல்லூரிகளான முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயம், கிளிநொச்சி பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயம் ஓமந்தை மத்திய கல்லூரி என்பன இப்பொழுதும் பாரிய இராணுவத் தளமாக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் பள்ளிகளைத் திறப்பதைவிட சிறைச்சாலைகள் திறப்பதையே ஆசியாவின் ஆச்சரியமாகக் கொண்டிருக்கிறீர்களா? சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் தமிழ் இளைஞர்கள், யுவதிகள், தமிழ் பிள்ளைகளின் அப்பாக்கள், அம்மாக்கள். இதன்மூலம் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். அதேபோல் தமிழ்ப்பாடசாலைகளை இராணுவமுகாம்களாக வைத்திருப்பதன் மூலம் எங்கள் பிள்ளைகளின் கல்வி எவ்வளவு சீரழிக்கப்படுகின்றது. திட்டமிட்டவகையில் தமிழ் இனத்தின் கல்வி எவ்வாறு அழிக்கப்படுகின்றது என்பதை ஒவ்வொரு பொதுமகனும் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று 12000 க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் வாழ்வு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனது பிறந்த நாளுக்கு அப்பா வருவாரா? என்று அழுத கண்ணீரோடு தன் தாயைக் கேட்கும் குழந்தைகளை எண்ணிப் பாருங்கள்!

எம்வயோதிபக் காலத்தில் எமக்கு உதவுவதற்கு எம்பிள்ளைகள் எப்போது வருவார்கள் என்று ஏங்கித் தவிக்கும் வயோதிபர்களைப் பாருங்கள்! இராணுவத்தினரிடம் வெள்ளைக்கொடியோடு வந்து சரணடைந்தவர்கள், மனைவிமாரால் ஒப்படைக்கப்பட்டவர்கள், தாய் - தந்தையரால் ஒப்படைக்கப்பட்டவா்கள் எங்கே என்று தெரியாமல் உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான பாலகுமார் மற்றும் அவரது மகன் ஆகியோர் உள்ளேவந்து சரணடைந்ததை பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. யோகரத்தினம் யோகி, சோ. தங்கன், எழிலன், புதுவை இரத்தினதுரை, இளம்பரிதி போன்றோரை அவர்களின் மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தினர் ஒப்படைத்ததை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்று இணையத்தளங்கள், ஊடகங்கள் என்பவற்றில் தமிழ் இளைஞர் யுவதிகள் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுவதை செய்திகளாகவும் வீடியோக்களாகவும் பார்க்கமுடிகிறது. இதேநிலை சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்டால், உங்களால் அதனைச் சகிக்க முடியுமா? இந்த நாட்டில், 'கதிர்காம அழகி' மனம்பேரி நிர்வாணமாக்கப்பட்டு அலங்கோலமாக கொல்லப்பட்டதை நீங்கள் எண்ணிப்பாருங்கள்!

இன்று காலை கெளரவ பிரதமர் அவர்கள் அவசரகாலச் சட்டம் தொடர்பாக குறிப்பிடுகின்றபொழுது, புலிகளின் மீது மட்டும் தனது பிரச்சினைகளை முன்வைத்தார். 1983இல் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்ச் சிறைக் கைதிகள் எவ்வாறு வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்கள்? குட்டிமணி தங்கத்துரையின் கண்கள் சிங்களப் பயங்கரவாதிகளால் தோண்டப்பட்டது.

இதே ஆண்டு கொழும்பு, மலையகப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பலர் வெட்டிச் சாய்க்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் 'லங்கா ராணி' கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டார்களே! இந்த நாட்டில் பயங்கரவாதத்தை தூண்டியது யார்? உருவாக்கியது யார்? நாகர்கோவில் பாடசாலை மற்றும் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள், பொது மக்களை எண்ணிப்பாருங்கள்!

இறுதியாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்? செம்மணிப் படுகொலை வழக்கு, கிருஷாந்தியின் கொலை வழக்கு, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் கொலை வழக்கு, மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் தராகி சிவராம், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் போன்றோரின் கொலை வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

எனவே, இங்கு தமிழர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்கள் அநாதைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் அதுதொடர்பாக கேட்பாரில்லாத பிறவிகளாகவும் தான் அன்றும் இன்றும் உள்ளதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன. இதுதான் தமிழர்களுக்கு இந்த நாட்டில் வழங்கப்படும் நீதி என்பதை உணருங்கள்!

கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, இவர்கள் இந்தச் சபையிலே சபை ஒழுங்கைப் பின்பற்றவேண்டும். எதிரணியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்றபோது, அதனை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கேட்டு, அதற்கான பதிலை அளிப்பதற்குத் தயாராகவேண்டும்.

நீங்கள் இச்சபையில் அவ்வாறான ஒழுங்கைப் பின்பற்றுவதே இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நாகரிகமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! நீங்கள் எடுத்ததற்கெல்லாம் 'புலி-புலி' என்று 'புலிப் பயங்கரவாதம்' பற்றியே சொல்வதன்மூலம் எமது மக்களது உரிமைகளை மறுக்காதீர்கள் என்று கேட்டு, எனக்குப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் தந்தமைக்காக நன்றி கூறி, விடைபெறுகின்றேன்.

shritharan.com
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger