News Update :
Home » , » போர்க் குற்றங்களை விசாரிக்க இடமளிக்காதுவிட்டால் ஐ.நா. நிபுணர்கள் குழு விஜயம் மேற்கொள்ளக்கூடாது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க் குற்றங்களை விசாரிக்க இடமளிக்காதுவிட்டால் ஐ.நா. நிபுணர்கள் குழு விஜயம் மேற்கொள்ளக்கூடாது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Penulis : Antony on வெள்ளி, 24 டிசம்பர், 2010 | AM 1:01

இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இடமளிக்காதுவிட்டால் இலங்கைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழு விஜயம் மேற்கொள்ளக்கூடாதென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர்கள் குழுவானது இலங்கைக்கு வருகைதந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், கடும்போக்குடைய கட்சிகள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் நிலையில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் அதற்கெதிராக குரல் கொடுத்துள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய போன்ற இனவாத கட்சிகளும் எதிர்க்கட்சியான ஜே.வி.பி.யும் ஐ.நா. நிபுணர்குழு வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இதற்கு எதிரான கருத்தை தெரிவித்திருக்கிறது. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவை ஐ.நா. நிபுணர்கள் குழுவானது சந்திப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு ஐ.நா.வை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டிருக்கின்றது.

போர்க் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இடமளிக்காதுவிட்டால் இலங்கைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள்குழு விஜயம் மேற்கொள்ளக்கூடாதென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசியவுக்கு கருத்துத் தெரிவித்த பிராட் அடம்ஸ்,

என்ன நடந்ததென்பதை நாம் அறிந்துகொள்ளவிரும்புகிறோம். பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க நாம் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும். தீவிரமான விசாரணையில் ஈடுபடுவதற்கு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அது இடம்பெறுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லையென்று பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறுகையில், நிபுணர்குழு நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திக்குமென்று தெரிவித்திருந்தார். ஆனால், அது எப்போது இடம்பெறுமெனவும் எங்கே இடம்பெறுமெனவும் அவரால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

சர்வதேச நெருக்கடிக்குழு, சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது என்ன நடந்தது என்பது தொடர்பாக சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றன.

அதேசமயம், இந்த அமைப்புகள் நல்லிணக்க ஆணைக்குழு முன் தோன்றுவதை நிராகரித்திருந்தன. எவ்வாறாயினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரம் மாற்றியமைக்கப்படமாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் குழுவானது இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கும். வழமையான நடைமுறைக்கமைய நல்லிணக்க ஆணைக்குழு ஐ.நா. குழுவின் கருத்துகளை பெற்றுக்கொள்ளும் என்று அரசாங்கம் புதன்கிழமை விடுத்திருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐ.நா. குழுவானது இலங்கைக்கு வருகைதருவதன் பெறுபேறாக இலங்கை அரசாங்கத்தை போர்க் குற்றங்களுக்குட்படுத்துவதாக அமைந்துவிடுமென்று ஹெலஉறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் கூறியுள்ளன.

இந்த ஐ.நா. குழுவானது ஜனாதிபதியையும் பாதுகாப்புச் செயலாளரையும் போர்க் குற்றவாளிகளாக முத்திரை குத்துமென தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பியசிறி விஜேநாயக்க நிருபர்களிடம் கூறியிருந்தார். நிபுணர் குழுவுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் பாதுகாப்புச் சபையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகம் பாதிப்பான தீர்மானத்தை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவதாக அமைந்து விடும் என்று ஹெலஉறுமயவின் பேச்சாளர் உதய கம்மன்பில பி.பி.சி.க்குத் தெரிவித்திருந்தார்.முன்னர் ஐ.நா. நிபுணர்குழுவை நிராகரித்திருந்த அரசாங்கம் இப்போது அழைப்பு விடுப்பதன் மூலம் தனது இரட்டைத்தன்மையை வெளிப்படுத்தியிருப்பதாக ஜே.வி.பி. கூறியுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger