News Update :
Home » , » விஜய் நம்பியாரை நீக்குமாறு ஐ.நா பொதுச்செயலருக்கு பிரித்தானியா அழுத்தம்

விஜய் நம்பியாரை நீக்குமாறு ஐ.நா பொதுச்செயலருக்கு பிரித்தானியா அழுத்தம்

Penulis : Antony on வெள்ளி, 17 டிசம்பர், 2010 | பிற்பகல் 12:03

பர்மாவுக்கான ஐ.நாவின் தற்காலிகத் தூதுவர் பதவியில் இருந்து விஜய் நம்பியாரை நீக்கி விட்டு நிரந்தரத் தூதுவர் ஒருவரை நியமிக்குமாறு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் பிரித்தானியா கேட்டுக் கொண்டுள்ளது.

நியுயோர்க்கில் கடந்தவாரம் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நாவுக்கான பிரித்தானியத் தூதுவர் மார்க் லயல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக சியாங் மாய் என்ற ஊடகவியலாளர் மிஸ்ஸிமா என்ற இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த டிசம்பர் மாதம் நைஜீரிய இராஜதந்திரி இப்ராகிம் கம்பாரி பர்மாவுக்கான தூதுவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஐ.நா பொதுச்செயலரின் பிரதம அதிகாரியாக உள்ள விஜய் நம்பியார் பர்மாவுக்கான தூதுவர் பதவியையும் பகுதி நேரமாகக் கவனித்து வருகிறார்.

இவரை இந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு பர்மாவுக்கு நிரந்தரத் தூதுவர் ஒருவரை நியமிக்குமாறு பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

இதே கருத்தையே ஐ.நாவுக்கான மெக்சிக்கோவின் தூதுவரும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மிஸ்ஸிமா இணையத்துக்கு தகவல் வெளியிட்டுள்ள ஐ.நாவின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக், தூதுவர்களின் இந்தக் கருத்துக் குறித்து ஆலோசனை செய்து வருவதாக ஐ.நா பொதுசெயலர் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக்க் கூறினார்.

பர்மா விவகாரத்தில் ஐ.நாவின் பங்கு முக்கியமானது என்று பிரித்தானியா கருதுகிறது.

ஆனால் பர்மாவுக்கான தூதுவராக உள்ள விஜய் நம்பியார் சிறுபான்மை இனங்களின் நலன்களைப் புறக்கணிக்கும் வகையில் செயற்படுகிறார்.

அவர் அண்மையில் பர்மா சென்றிருந்த போது ஆங் சாங் சூகியையும் பர்மிய ஜெனரல்களையும் சந்தித்திருந்தார்.

ஆனால் அவர் சிறுபான்மையின மக்களின பிரதிநிதிகள் யாரையும் சந்திக்கவில்லை.

எனவே அவர் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக செயற்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்ந்தும் இந்தப் பதவியில் இருப்பது பர்மாவின் சிறுபான்மையின மக்களின் நலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

எனவே, அவரை இந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

அதேவேளை, கடந்த ஆண்டு மே மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகளும், பெருமளவு பொதுமக்களும் கொல்லப்பட்டதற்கு நம்பியாரின் நடவடிக்கைகளே காரணம் என்ற குற்றசாட்டுகளும் உள்ளன.

கடந்து ஆண்டு மே மாதம் போரின் இறுதி நாட்களில் போரை நிறுத்தி இரத்தக் களரியை தடுத்து நிறுத்த ஐநா உதவ வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர்.

அப்போது ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், பல ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக பணியாற்றியவருமான ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி சதீஸ் நம்பியாரின் சகோதரருமான விஜய் நம்பியாரை அனுப்பினார்.

மே 18ம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் கொழும்பில் தங்கியிருந்த நம்பியாரை, தொலைபேசி மூலம் அழைத்த லண்டனை தளமாகக் கொண்ட “த ரைம்ஸ்“ நாளேட்டின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவர் விடுதலைப் புலிகள் சரணடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட குழந்தைகளும், பெண்களுமாக 300 பேர் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக மேரி கொல்வினுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

சரணடைபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்பியார் அங்கு செல்ல வேண்டும் என்று கொல்வின் கேட்டுக் கொண்டார்.

ஆனால் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று சிறிலங்கா அதிபர் தனக்கு உறுதிமொழி தந்துள்ளதாக நம்பியார் தெரிவித்திருந்தார்.

ஆனால் சில மணிநேரத்தின் பின்னர் சிறிலங்கா தொலைக்காட்சிகளில் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் காட்சிகளைக் கண்டதாக கொல்வின் தெரிவித்துள்ளார்.

சரணடையும் விடுதலைப் புலிகள் அனைவரையும் சுட்டுக் கொல்லும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தனிப்பட்ட உத்தரவுகளை வழங்கியிருந்ததாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பின்னர் ஊடகம் ஒன்றுக்குக் கூறியிருந்தார்.

இதனைக் கூறியதற்காக அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சரணடைந்த விடுதலைப் புலிகளையும், பொதுமக்களையும் படுகொலை செய்வதற்கான உத்தரவுகளை வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மீதும், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அவர்கள் இருவரும் போர்க்குற்றவாளிகளாக இனம்காணப்பட்டுள்ளனர் என்றும் அந்தக் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger