
கொழும்பு
14.12.2010
மாண்புமிகு திருமதி.இமெல்டா சுகுமார் அவர்கள்,
யாழ் அரசாங்க அதிபர்,
யாழ்ப்பாணம்.
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய யாழ் அரசாங்க அதிபர் மாண்புமிகு திருமதி. இமெல்டா சுகுமார் அவர்களுக்கு,
வணக்கம்.
தமிழினத்தின் ஒரு பரம்பரையை முள்ளிவாய்க்காலில் வைத்து கொலை செய்த இலங்கை ஜனாதிபதி அவர்கள் அண்மையில் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார். அங்குள்ள புலம்பெயர் தமிழர்களின் சீற்றத்திற்கு உட்பட்டு போர்க்குற்றவாளியான இலங்கை ஜனாதிபதிக்கெதிரான ஜனநாயக மரபிற்குட்பட்டு அவரின் நிகழ்ச்சிகளை முடக்கிய புலம்பெயர் தமிழர்களுக்கு தாங்கள் அறிவுரை சொல்ல புறப்பட்டு இன்று தாங்களும் ஈழத்தமிழர்-புலம்பெயர் தமிழரென அனைத்து தமிழர்களின் வெறுப்பிற்கு ஆளாகியிருப்பதை அறிவீர்களா.
தாங்கள்“புலம்பெயர் தமிழர்கள் வீண் வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமென“தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ற நினைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தீர்கள்.தங்களது இந்த அறிக்கையை இணையத்தளம் ஒன்று, திங்கட்கிழமை (13.12.2010) வெளியிட்டு தமிழருக்கெதிரான, இலங்கை இனவாத அரசிற்கு விசுவாசமான தங்கள் முகத்திரையை கிழித்து உலகத் தமிழர்களுக்கு இனங் காட்டியுள்ளது.
மாண்புமிகு யாழ் அரச அதிபர் அவர்களே!.
புலம்பெயர் தமிழர்கள் இனமானத்துடனும் வலி நிறைந்த இதயத்துடனும் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை உணர மறுத்து,அவர்களை சீண்டும் விதத்தில் உங்கள் கல்வித்தகைமைக்கு ஏற்ப பொதறிவு அற்றவராக இப்படியான சின்னப்பிள்ளைத்தனமான அறிக்கையை வெளியிட்டு தமிழச்சியாகிய தாங்கள் வெட்கக்கேடான நிலைக்குள் உங்களைக் கொண்டு சென்றுள்ளீர்கள்.
தங்களை தமிழச்சி என்று விளித்தமைக்கு காரணம் தாங்கள் தமிழச்சி என்ற நிலை உணராது கீழ்நிலைக்கு போய்க் கொண்டிருப்பதை உணர்த்தவே, தாங்கள் தமிழினத்தைச் சார்ந்தவர் என்பதை எப்பொழுது உணர்வீர்கள்?
தங்கள் நிர்வாகத்திற்குட்டபட்ட மக்களுக்கு என்னென்ன நன்மைகளை அபிவிருத்திகளைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்யாது அரசாங்கத்தின் ஏவலாளாக வெறும் கொண்டாட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு புலம்பெயர் தமிழர் பற்றி அறிவுரை சொல்லவோ, அபிப்பிராயங்கள் சொல்லவோ எவ்வித தகுதியோ, உரிமையோ கிடையாது. தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை புலம்பெயர் தமிழர்களைக் கொண்டு சொல்ல வைக்காதீர்கள்.
புலம்பெயர் தமிழர்கள் ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் சுதந்திரமற்று வாழும் தமது உறவுகளை ஒவ்வொரு விநாடியும் நினைத்துக் கொண்டேதான் வாழ்கிறார்கள். பனியிலும் குளிரிலும் உணவு விடுதிகளிலும் இரவு பகலாக தமது உறவுகளுக்காக உழைத்து உடல் நலிந்த போதும் மனம் தளராது ஈழத்தில் வாழும் உறவுகளின் விடுதலைக்காக எரிமலையாக குமுறியே நிற்கின்றனர்.
ஐரோப்பிய சொகுசு வாழ்க்கைக்குள் அவர்கள் அமிழ்ந்து போகாமல் தமது உறவுகளுக்காக எந்நேரமும் ஈழத்து உறவுகளின் அரசியல் உரிமைக்காக களத்தில் குதிக்கிறார்கள், குதிக்கத் தயாராகவிருக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் தமிழர்களின் அவலமான சூழ்நிலையில் வாழ்ந்தும் அதை உணர மறந்து தமிழர்களின் இயலா நிலையைப் பயன்படுத்தி அவர்களை பகடைக்காய்களாக்க முயற்சிக்கின்றீர்கள். இலங்கை அரசின் நிர்வாக சேவைப் பிரிவைச் சேர்ந்த தங்களுக்கு இலங்கையின் பரப்பளவு தொடங்கி மக்கள் தொகை, இலங்கையின் பொருளாதார வளங்களான தொழில்துறைகள், விவசாயம், கடல், ஆறு, குளம், ஏரிகள், மூலவளங்கள், களனிவளங்கள் என்பனவற்றை தெரிந்து வைத்திருப்பது போல் ஈழத்தமிழரின் சரித்திரமும் தெரிந்திருக்கும் எனக் கருதுகிறேன்.
கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனிதப் பேரழிவை தாங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது அதுபற்றித் தெரியாதா?
அந்த மனிதப் பேரழிவின் எதிரொலிதான் இலங்கை ஜனாதிபதிக்கெதிரான பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களின் ஜனநாயக எழுச்சி என்பதை உணருங்கள். தமிழினத்தை காட்டிக் கொடுப்பதற்கென்றே நிறையப் பேர் உருவாகிறீர்களே!.
பயங்கரவாதிகளை ஒழித்துவிட்டோம் என்பவர்களிடமிருந்து தமிழர்களுக்கான உரிமையாக எதைக் கண்டிருக்கின்றீர்கள். வெள்ளைப் புறாக்களை பறக்கவிடுவதாலோ நட்சத்திர விடுதிகளில் தமிழர்களைக் கொன்றவர்களுக்கு விருந்து வைப்பதாலோ தமிழர்கள் உரிமை பெற்று மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ள முடியுமா?.
ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழர் வரலாறு பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிய முயலுங்கள். புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து வீண் வேலைகளைச் செய்ய வேண்டாம் என்ற வீண் வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் என உங்களுக்கு அறிவுரை கூறுகின்றோம்.
-அங்கயற்பிரியன்
கருத்துரையிடுக