
இதுதொடர்பாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின பேச்சாளர் மெலிசா அன்டர்சன் தகவல் வெளிடுகையில்,
“ ‘சன் சீ‘ கப்பலில் வந்த 15 ஆண்களின் அடைக்கலக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 14 பேர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவர் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களிலும் தொடர்புபட்டுள்ளார்.
மற்றொருவர் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டுள்ளார்.“ என்று தெரிவித்தார்.
‘சன் சீ‘கப்பலில் கனடாவுக்குச் சென்ற 492 அகதிகளில் 307 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
136 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் பெண்களாவர்.
அதேவேளை இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எல்லை சேவைகள் முகவரகத்தின் பெண் பேச்சாளரான சகிலா மன்சூர் கனேடியர்களின் பாதுகாப்பு குறித்து தமது அமைப்பு மிகவும் கவனமாக இருக்கும், அதற்கே முன்னுரிமை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளையில், ‘சன் சீ‘ கப்பல் மூலம் அகதிகளை கனடாவுக்கு அனுப்பி வைத்த சந்தேக நபர்களில் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நடேசன் ஜெயானந்தன் என்ற 48 வயதான ஈழத்தமிழரே தாய்லாந்து குடிவரவுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் மேலும் ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பான் கென் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் கைது செய்யபட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 200 அகதிகளுடன் கப்பல் ஒன்றை கனடாவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் கைது செய்யப்பட்ட எட்டுப் பேர் மீதும் சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்த குற்றசாட்டு அல்லது தாய்லாந்தில் மேலதிக காலம் தங்கியிருந்த குற்றச்சாட்டே சுமத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட நடேசன் ஜெயானந்தன் ‘சன் சீ‘ கப்பலை அனுப்பிய சந்தேக நபர்களில் ஒருவர் என்ற போதும் பிரதான ஒருங்கிணைப்பாளர் அவர் அல்ல என்று கனேடிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்துரையிடுக