News Update :
Home » » உண்மைகள் சுடும் - யதார்த்தமும் கனவுலகும்

உண்மைகள் சுடும் - யதார்த்தமும் கனவுலகும்

Penulis : Antony on சனி, 1 ஜனவரி, 2011 | AM 8:13

'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்.

"போர் அழிவுகளைக் கொண்டுவரும் - போராட்டம் அழிவிலிருந்து மீட்சியைக் கொண்டுவரும்" இவ்வாறு தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்களில் ஒருவர் மேடையில் பேசும் போது, அதனை பார்வையாளர் வரிசையில் அமர்ந்தவாறு மயிர்கூச்செறிய கேட்ட அனுபத்தை இப்போது நினைத்துப் பார்க்கும் போது எங்குமே வெறுமை மட்டும்தான்..

சமீபத்தில் கிளிநொச்சிப் பக்கம் சென்றபோது நான் அவதானித்த சில விடயங்களால் மேற்படி வாசகத்தையே மீண்டும் ஒரு முறை அசை போட்டுக்கொள்ள நேர்ந்தது.

போராட்டம் மீட்சியைக் கொண்டுவரும் உண்மைதான் ஆனால் அது வெற்றி பெற்றால் மட்டும்தான் என்பதை நாம் ஏனோ மறந்துவிட்டோம் போலும்.

இறுக்கமான மரபார்ந்த சமூகத்தில் இருந்து மேலெழும்பும் ஆயுதப் போராட்டமொன்றின் தோல்வி என்ன வகையான சமூக நெருக்கடிகளைக் கொண்டுவரும் என்பதை முன்னர் எப்போதுமே நாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். அப்படி நினைக்க வேண்டிய தேவைகளும் நம்மளவில் இருக்கவில்லை.

இன்று தமிழ்ச் சமூகம் என்பது ஒரு 'பின் போர் சமூகம்' [Post war society] என்பதை நாம் தெளிவாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.

பின் போர் சமூகத்தின் பிரச்சனைகளைத்தான் இன்று, போரில் நேரடியாக அகப்பட்ட மக்களும் முன்னாள் போராளிகளும் அனுபவித்து வருகின்றனர்.

தோல்வியடைந்த தமிழர் போராட்டம் ஒரு கையறு [Vulnerable Society] நிலைச் சமூகம் ஒன்றின் உருவாக்கத்திற்கு வழிவகுத்திருக்கின்றது என்பதே உண்மை.

இதில் எந்தவிதமான பின்பலமுமற்ற ஏழை மக்கள் தொடங்கி முன்னாள் போராளிகள் மற்றும் அவர்கள்தம் குடும்பங்கள் வரை அடக்கம்.

ஆனால் இங்கு மக்களது வாழ் நிலைமையும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் வாழ்க்கை நிலைமையும் ஒன்றல்ல என்பதுதான் அடுத்து இங்கு நான் கண்டுகொண்ட விடயம்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எதிர் கொள்ளும் சமூக ரீதியான சிக்கல்கள் மிகவும் துயரமானவை.

இதில் குறிப்பாக பெண் போராளிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை.

விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக வலுவாக இருந்த காலத்தில் ஓர் அரசுக்குரிய கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் அவர்கள் ஓர் அரசாகவே செயலாற்றினர்.

புலிகள் வலுவாக இருந்த காலத்தில் பெண் போராளிகள் சமூக ரீதீயில் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டனர்.

இந்தக் காலத்தில் பெண் விடுதலை பற்றி எழுதிய ஆய்வாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார், "வரலாறு பின் நோக்கிச் செல்வதில்லை – புலிகளின் போராட்ட காலத்தில் நமது சமூகத்தின் மரபார்ந்த இறுக்க நிலையில், சிந்தனைப் போக்கில் ஏற்பட்ட உடைவுகள், எப்போதுமே உடைவுண்ட பகுதிகள்தான் ஏனென்றால் வரலாறு பின் நோக்கிச் செல்வதில்லை". ஆனால் இன்றைய யதார்த்தத்தில் இருந்து நோக்கினால் இதில் எந்த உண்மையும் இல்லை.

புலிகளின் காலத்தில் பல பெண் பேராளிகள் அமைப்பிற்குள்ளேயே திருமணம் செய்து கொண்டனர். இவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் சாதி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்தவர்களாக இருந்தனர்.

அவ்வாறானதொரு சிந்தனை வலுவை புலிகள் அமைப்பு அவர்களுக்கு வழங்கியது. ஆனால் இன்றைய யுத்தத்திற்கு பிந்தைய சமூகத்தில் அவ்வாறான பெண் பேராளிகள் சிலர் சமூக ரீதியாக மிகவும் சிக்கலான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

சிலரது கதை இப்படியுமுள்ளது அதாவது, பெண் போராளி மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் போரில் கணவணை இழந்து விட்டார். கணவன் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது கணவனின் பெற்றோர் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

இவ்வாறு சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை கடந்து புலிகளின் மேற்பார்வையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டவர்கள் பலர். அவ்வாறான பெண்களும் இப்படியான சிக்கல்களையே சந்திக்கின்றனர்.

போரில் கணவன் [போராளி] இறந்துவிட்டான், அவனது வீட்டார் சாதியில் குறைந்த பிள்ளையை [மருமகளை] ஏற்க மறுக்கின்றனர். சமீபத்தில் அவ்வாறானதொரு பெண் போராளியின் பிள்ளையை கனவனின் சகோதரன் பறித்துக் கொண்டு இந்தியாவிற்கு போன சம்பவம் ஒன்று கூட யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

இவ்வாறான இடர்களை எதிர் கொள்ளும் பெண் போராளிகள் சிலரது நிலைமை மேலும் மோசமானது. கணவன் இல்லாத சூழலில் கணவனின் வீட்டாராலும் அதே நேரம் தங்களது பெற்றோராலும் ஒருமித்து நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. அவ்வாறானவர்கள் வாழ வழியற்று தனித்து அலைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அனைத்து உறுப்பினர்களது வாழ்வியல் தேவைகளையும் பாரபட்சமின்றி கவனித்து வந்தனர் என்பது உண்மை.

இந்தக் காலத்தில் எல்லோருக்குமே காணிகள் இருந்தன. இவ்வாறு புலிகள் வழங்கிய காணிகள் அனைத்தும் ஓர் அரசு என்ற வகையில் அவர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று ஒரு அழிவுக்கு பின்னர் அவ்வாறான அரச காணிகளை, சிறிலங்கா அரசு போராளிகளின் குடும்பங்களுக்கு வழங்க முன் வருமா?

ஓர் உறுப்பினர் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார் "எனக்கு வளவு என்றால் கிளிநொச்சியில் மட்டும்தான் உண்டு. இன்று யாழ்ப்பாணத்தில் வாடைகை வீடொன்றில்தான் வாழ்கிறேன். ஆனால் எனது காணி எனக்கே கிடைக்குமா என்று தெரியவில்லை.

காணிக்கு சென்றால் ஊர் மக்களில் ஒருவரே எனக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்கிறார். இது முன்னர் நான் ஆயுதத்தை காட்டி விரட்டி வாங்கியதாக கூறுகின்றார். காவல்துறை அவரது கதையைத்தான் கேட்கிறது".

இது ஒருவரது கதை மட்டுமல்ல புலிகளின் காலத்தில் தங்களுக்கென்று காணித் துண்டொன்றை கொண்டிருந்த அனைத்து போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிலைமையும் இப்படியான ஒன்றுதான்.

நான் சாதாரணமாக கடையில் இருந்த ஒருவருடன் போச்சுக் கொடுத்த போது அவர் சொன்னார் பொட்டு அம்மானின் திருநகர் வளவுக்கே நான்கு பேர் உரிமை கொண்டாடுகின்றனர் - இறுதியில் யாருக்கு கொடுப்பது என்று தெரியாமல் இராணுவம் அதனை சுவீகரித்துக் கொண்டது.

இங்கு பிரச்சனை என்னவென்றால் இவ்வாறான விடயங்களில் இராணுவம், காவல்துறை முடிவுகளை எடுக்க முடியாதளவிற்கு பொதுமக்கள் மத்தியில் இருந்தே குழப்பமான தகவல்கள் வழங்கப்படுகின்றன.

பொதுவாக புலிகள் போரின் இறுதி நாட்களில் நடந்து கொண்ட மோசமான அணுகுமுறைகளால் அதிருப்தி அடைந்த மக்கள் விடுவிக்கப்பட்ட போராளிகள் மற்றும் போராளிக் குடும்பங்கள் தொடர்ப்பில் அனுதாப உணர்வுடன் அவர்களை நோக்கும் நிலையில் இல்லை.

குறிப்பாக போரில் கணவனை இழந்து குடும்பத்தை தாங்கும் பொறுப்பில் தவிக்கும் பல முன்னாள் விடுதலைப்புலிகளின் மனைவிமார் வாழ்வை கொண்டு நடாத்துவதில் சமூகத்தின் ஆதரவும் உறவினர்களின் ஆதரவும் அற்று பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

புலிகளின் பிரபலமான மூத்த உறுப்பினர் ஒருவரின் மனைவி பிறிதொரு விடுவிக்கப்பட்ட உறுப்பினரிடம் தனது இயலாமையை சொல்லி அழுதிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவருக்கு புலம்பெயர் தேசங்கள் எங்கும் நண்பர்கள் நிரம்பி வழிந்தனர் ஆனால் அவரது குடும்பத்திற்கு உதவுவதற்கு இன்று யாருமற்ற நிலை இருப்பதாகவும் அந்த நண்பர் கவலையுடன் தெரிவித்தார்.

சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனைவிமார் சிலர் குடும்பத்தை கொண்டு நடாத்த முடியாமல் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாயிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் அது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல என்பதுதான் உண்மை.

அந்தளவிற்கு வறுமையும் சமூகத்தின் அரவணைப்பும் இல்லாமல் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் அல்லல்படுகின்றனர்.

“Apart from the dead “heroes” what about the living boys and girls who are in govt custody or being released gradually?
What about those boys and girls who have lost eyesight or limbs in the fighting?
What about the poor families of these ex-LTTE members trying to eke out a miserable existence?
Who looks after them? Who is concerned about them?
The overseas LTTE has so much of money. Why is not even a cent not being given to these poor boys and girls who joined the LTTE and fought or were conscripted and who
are now abandoned and forlorn?
Do you know that the wives of some prominent LTTE leaders are virtually beggars?
Do you know that some ex-LTTE girls or widows of LTTE leaders are engaged in the oldest profession in the world now in order to feed their little children?
Do you know that some of the rehabilitated and released LTTE cadres came back saying there is no food at home whereas they had three square meals when under detention “
(JBSJ responses on one of the readers comments – November 27,2010)

இந்த நிலைமையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டியது, ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்திருந்தவர்கள், அதனை ஆதரித்து நின்றவர்கள் என அனைவரது கடமையுமாகும்.

ஓவ்வொருவரும் தமது துறை சார்ந்து இந்த விடயத்தில் தம்மால் முடிந்தவைகள் அனைத்தையும் செய்தாக வேண்டும்.

குறிப்பாக நமது புலம்பெயர் சமூகம், அந்த சமூகத்தை வழிநடத்துவதாக காட்டிக் கொள்ளும் சகல அமைப்புக்களும் இது குறித்து தமது உடனடிக் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும்.

இங்கு நான் அவதானித்த ஒரு முக்கியமான விடயம், முன்னாள் போராளிகள், போராளிகள் குடும்பங்கள் ஆகியோரைப் பொருத்தவரையில் புலம்பெயர் தமிழ் சமூகம் உதவினால் மட்டுமே அவர்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலம் உண்டு இல்லாவிட்டால் அவர்கள் வறுமையால் சீரழிந்து போவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது.

அரசைப் பொறுத்தவரையில் தமிழர்கள் தமிழர்களுக்கு உதவுவதை அது தடுக்கப் போவதில்லை. ஆனால் அரசு பாதிக்கப்பட்ட நமது மக்களுக்காக பெரியளவில் எதனையும் செய்யப் போவதில்லை.

அரசைப் பொறுத்தவரையில் அதன் வாதம் மிகவும் தெளிவானது, இலங்கையின் சகல பகுதிகளிலும் பல லட்சக் கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அதில் ஒரு பகுதிதான் இவர்கள்.

முன்னர் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் மகிந்த, தம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை கட்டித் தர முடியாது என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டதையும் இங்கு நாம் குறித்துக் கொள்ளலாம்.

எனவே சிறிலங்கா அரசுதான் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று புலம்பெயர் சமூகம் ஒதுங்கிக் கொள்வது நாம் நம்பிய ஒன்றுக்காக வாழ்ந்த, அதற்காக எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்பவர்களை நாமே ஏறி மிதிப்பதற்கு ஒப்பானதாகும்.

யுத்த காலத்தில் புலிகளை வலுப்படுத்துவதற்காக ஆண்டு தோறும் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை புலம்பெயர் சமூகம் வழங்கியதாக [ICG - International Crisis Groups] எனப்படும் முரண்பாடுகளுக்கான சர்வதேச குழாம் குறிப்பிடுகிறது.

புலிகளின் வளர்சிக்காக உதவிய புலம்பெயர் மக்கள், இன்று அந்த எழுச்சியின் பக்கபலமாக இருந்தவர்களையும், அனைத்து தமிழர்களின் கனவுகளை ஈடேற்றுவதற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களையும் நட்டாற்றில் விட்டுவிட்டு நமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையே! என்று ஒதுங்கிக் கொள்வது எந்த வகையில் நீதியானது?

அது சரியான ஒன்றுதானா?

* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஓர் அரசியல் ஆய்வாளரும் இலக்கியவாதியுமாவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: arinanthan@gmail.com

Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger