News Update :
Home » » யாழில் விசுவரூபம் எடுத்திருக்கும் ஆயுதக்குழுக்களின் கடத்தல்களும், படுகொலைகளும்

யாழில் விசுவரூபம் எடுத்திருக்கும் ஆயுதக்குழுக்களின் கடத்தல்களும், படுகொலைகளும்

Penulis : Antony on ஞாயிறு, 2 ஜனவரி, 2011 | AM 10:43


அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற கடத்தல் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் சிறிலங்கா படைத்தரப்பினருடன் சேர்ந்து இயங்கும் மாத்தையா குழுவினரும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான துணைக்குழுவும் இருப்பதாக கொழும்பு ஊடகமான சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மாத்தையா என அழைக்கப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா, இந்திய புலனாய்வுத் துறையான றோவுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில், மாத்தையாவிற்கு ஆதரவான உறுப்பினர்கள் பலரும் விசாரணைக்கென தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், சில உறுப்பினர்கள் பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்ததுடன், இதுகால வரையில் அவர்களின் பாதுகாப்பிலேயே இருந்து வந்துள்ளதாகவும் சிறிலங்கா கார்டியன் தெரிவித்துள்ளது.

இது குறித்து இவ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த மாத்தையாவுக்கு ஆதரவான சுமார் 40 பேர், பலாலி படைமுகாமில் வைத்து பராமரிக்கப்பட்டதுடன், இவர்கள் சிங்களப் பெண்களை திருமணம் செய்து முகாம் வளாகத்துக்கு உள்ளேயே வாழ்ந்தும் வந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் இடப்படுகின்ற எத்தகைய கொடூரமான கட்டளைகளையும் தயவு தாட்சண்யமின்றி செய்யத் துணிந்தவர்களாக இவர்கள் இருந்தார்கள்.

2009ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், துணை இராணுவக் குழுக்களிடம் இருந்த ஆயுதங்களைக் களைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எத்தகைய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களையும், விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் இவ்விரு தரப்பினரையும் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்து வந்துள்ளது.

இவ்விரு குழுக்களில், மாத்தையா குழுவினர் இராணுவ சீருடை தரித்தவர்களாகவும் மிகவும் கொடுரமான படுகொலைகளைச் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தனர்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் மாத்தையா மற்றம் டக்ளஸ் குழுக்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் மற்றும் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் என பலரைக் கடத்துவதிலும் படுகொலை செய்வதிலும் முன்னின்றது.

முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்களில் வரும் இந்தக் குழுக்கள், அரசின் புலனாய்வுத்துறை இடுகின்ற கட்டளையை கச்சிதமாக நிறைவேற்றி வருவதாக லங்கா கார்டியன் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் படுகொலையைப் பார்க்கின்றபோது, யாழ் மக்கள் மீது முழுமையான அடக்குமுறையைப் பிரயோகிக்க விரும்பும் அரசாங்கம், இப்படுகொலையின் பின்னணியில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப் பின்னணியிலேயே தேசிய கீதத்தை சிங்களத்தில் பாட வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவை எதிர்த்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இப்படுகொலைகள் தொடர்பாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளபோதும் அரசாங்கம் வன்முறைகள் மூலமே இத்தகைய எதிர்ப்புகளை கையாள விரும்புவது புலப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி கொல்லப்பட்ட இந்துக் குருக்களான 56 வயதான நித்தியானந்த சர்மா படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா படைத்தரப்பு ஒத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இக் குழுக்கள் பாரிய பங்காற்றி இருந்ததால் இவர்களிடம் இருக்கின்ற ஆயுதங்களைக் களைய முடியாது என அரசின் அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர்.

இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்குமானால், இக்குழுக்களின் சமூக விரோதச் செயற்பாடுகளுக்கும் கொலைகளுக்குமான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னான போர்க் குற்றங்களாகவே இவை கணிக்கப்படவேண்டும் என லங்கா கார்டியன் மேலும் தெரிவித்துள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger