
வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி நுவரெலியா, கந்தப்பளை பகுதிக்கு அழைத்து சென்ற நபர் ஒருவர் காட்டுப் பகுதியில் வைத்து பெண்ணை மிரட்டி அவரது நகைகளை பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
குறிப்பிட்ட நபர் நுவரெலியாவை சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கும் கந்தப்பளை பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
வவுனியாவைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயான மேற்படி பெண், மகனின் எதிர்காலத்தை பற்றிய கனவுகளுடன் தனக்கும் தனது மகனுக்கும் ஒரு நல்ல துணை வேண்டும் என்பதற்காக இலங்கையில் வெளிவரும் பிரபல பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் மணமகள் தேவை என்ற பகுதியை பார்வையிட்டு வந்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் குறிப்பிட்ட நபரின் மணமகள் தேவை என்ற விளம்பரம் இவ்வாறு பிரசுரமாகி இருந்தது.
34 வயதுடைய மணமகனுக்கு மணமகள் தேவை. தாய், தந்தை இழந்த பொறுப்புகள் அற்ற மணமகள் தேவை. விவாகரத்து பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு (கையடக்கத் தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டிருந்தது)
குறிப்பிட்ட விளம்பரத்தை பார்த்த பெண்ணுக்கு முதலில் வேண்டாம் என தோன்றினாலும் சரி தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து பேசி பார்ப்போம் எனத் தோன்றவே அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
தொடர்பில் வந்த நபர் மிகவும் கண்ணியமாக பேசியுள்ளார். தனக்கு ஒரு தங்கை இருப்பதாகவும் தான் தங்கைக்காகவே வாழ்வதாகவும் தனது தங்கையின் கட்டாயத்தின் பெயரிலேயே திருமணம் செய்துகொள்ள முன்வந்துள்ளதாகக் கூறியதுடன் திருமணத்திற்கு பின்னர் நுவரெலியா வந்துவிடும்படியும் தனக்கு சீதனம் எதுவும் வேண்டாம் எனவும் அனைத்து செலவுகளையும் தாமே செய்வதாகவும் கூறியுள்ளார்.
இது தவிர ஒரு புதன்கிழமை பெண்ணை பார்ப்பதற்காக வவுனியா வருவதாகவும் தை மாதத்தின் முதல் வாரம் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் அதற்கு முன்னர் ஒரு முறை இந்தியா சென்று வந்துவிடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் குறிப்பிட்ட நபரின் தங்கையென அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு பெண் அழைப்பினை ஏற்படுத்தி வவுனியா பெண்ணுடன் உரையாடியுள்ளார். அண்ணா திருமணம் என்றாலே தள்ளித் தள்ளிப் போகிறார் நீங்கள் தான் அவரை சம்மதிக்க வைக்க வேண்டும். எதிர்வரும் புதன்கிழமை அங்கு வருகிறனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதன்கிழமை கம்பீரமான ஒரு நபர் சாதாரண உயரம் கறுத்த நிறம் கண்ணாடி அணிந்து தாடி (பொன்டிங் கட்) கையில் ஒரு பெட்டியுடன் வவுனியாவில் குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். சென்றவர் அனைவருடன் அன்புடன் உரையாடியதுடன் பெண்ணின் தாயின் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதுடன் பெண்ணின் மகனை தூக்கி மழலை பேசியுள்ளார்.
இறுதியாக பெண்ணின் கையைப் பிடித்து ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வாருங்கள். நான் டவுனில் வந்து நிற்கிறேன். திருமண வேலைகள் நிறைய உள்ளன. அனைத்து வேலைகளையும் நாம் இருவருமே கவனிக்க வேண்டும் என கூறி விடைபெற்றுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமான கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட பெண் அவரது மகன், தாய் மற்றும் அவர்கள் வவுனியாவில் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் தங்கை நால்வரும் நுவரெலியா நகருக்குச் சென்று குறிப்பிட்ட நபருக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
வாகனத்துடன் நகருக்கு வந்து நபர் இவர்கள் நால்வரையும் ஏற்றிக்கொண்டதுடன். நீங்கள் நெடுந்தூரம் பயணம் செய்தமையால் களைப்பாக இருப்பீர்கள். எனவே ஹோட்டல் ஒன்றிற்கு சென்று குளித்து சாப்பிட்டு ஓய்வெடுங்கள். நான் மாலை வந்து அழைத்துச் செல்கிறேன் எனக் கூறியவர் அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுடன் உணவருந்தி விட்டு சென்று மாலை வருவதாக கூறி கிளம்பியுள்ளார்.
மாலையில் வாகனத்துடன் வந்த நபர் நால்வரையும் அழைத்துக் கொண்டு கந்தப்பளை நோக்கி பயணித்துள்ளனர். நீண்ட தூரம் பயணித்த வாகனம் இறுதியில் ஒரு காட்டுப் பகுதியில் போய் நின்றுள்ளது. இதற்கு மேல் வாகனம் செல்லாது. நாம் நடந்துதான் செல்ல வேண்டும் என அவர்களின் பைகளை தானே சுமந்து கொண்டு குறிப்பிட்ட நபர் முன்னால் நடக்க அவர்கள் நால்வரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
அப்போது இரவு 8.30 மணியை கடந்துவிட்டிருந்தது. அது ஒரு மலைப்பகுதி எங்கு பார்த்தாலும் இருளும் மரம் செடி கொடிகளும் அவர்கள் நின்ற இடத்திற்கு சிறிது தள்ளி ஏரி ஒன்று காணப்பட்டது. மழையும் மெல்ல தூறல் போட ஆரம்பித்திருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் முன்னேறிச் சென்ற நபர் கை வலிப்பதாக கூறி பைகளை பெண்ணிடம் கொடுத்துவிட்டு பையை வாங்கிக்கொண்டு முன்னால் நடக்க ஆரம்பித்த பெண்ணின் கையை பிடித்து நிறுத்தினார்.
அச்சந்தர்ப்பத்தில் வவுனியாவிலிருந்து வந்த நால்வரில் ஒருவரான வீட்டு உரிமையாளரின் தங்கை குறிப்பிட்ட பெண்ணின் இடுப்பை பிடித்து கிள்ளியதுடன் தாயின் சேலையை பிடித்து பின்னால் இழுத்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் திடீரென அவர்களின் பக்கம் திரும்பி யாரும் அசையக் கூடாது. வரிசையாக நில்லுங்கள். இந்தக் காட்டைச் சுற்றிலும் எங்கள் ஆட்கள் நிற்கிறார்கள். ஓடித் தப்ப முடியாது என கூறியுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் பின் வாங்கிய வீட்டு உரிமையாளரின் தங்கை அவ்விடத்தை விட்டு ஓட. அவளைப் பிடி பிடி என கத்தியும் அவள் சென்ற திக்கு தெரியாமல் போனது.
அதன் பின்னர் அந்த நபர் பெண்ணின் மகனையும் தாயையும் ஒரு மலைப்பகுதியில் நிற்குமாறு கூறிவிட்டு ஓடி ஒளிந்த பெண்ணை தேடு இல்லை என்றால் மகனையும் தாயையும் கொன்றுவிடுவேன் என கூறி மகனை தூக்கி வீச எத்தனித்துள்ளார். குறிப்பிட்ட பெண் என்னை என்ன வேண்டுமானாலும் செய் என் தாயையும் மகனையும் விட்டு விடு என அவனது காலை பிடித்துக் கெஞ்சியுள்ளார்.
அப்போது மழை பலமாக பெய்ததால் மகன் நடுங்குவதைக் கண்ட பெண் ஒரு முறை மகனை தூக்கிவிட்டுட்டு வாரன் என கேட்ட போது இல்லை முடியாது நீங்கள் போட்டிருக்கும் நகைகளை கழட்டித் தா எனக் கூறியுள்ளான்.
பெண்ணின் தோடு, சங்கிலி, தாயின் தோடு, சங்கிலி எல்லாம் 6 அரை பவுண் நகைகளை மிரட்டி வாங்கியவன் மீண்டும் ஓடிச் சென்ற பெண்ணை தேடுமாறு குறிப்பிட்ட பெண்ணை சிறிது தூரம் இழுத்து சென்றுள்ளான். குறிப்பிட்ட பெண் தாயையும் மகனையும் ஓடி தப்புமாறு கூறியதுடன் அவளை எங்கே தேடுவது என தெரியாது நிற்க இங்கேயே நில் நான் போய் வாகனத்தை எடுத்துக் கொண்டு வருகிறேன் என சென்றுள்ளான். அப்போது வாகனம் வரும் சத்தம் கேட்டுள்ளது.
அந்தச் சந்தர்ப்பத்தில் தாயையும் மகனையும் கூட்டிக் கொண்டு ஓடிய பெண் ஒரு வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். அவர்கள் பொலிஸுக்கு அறிவித்துள்ளனர். அதன் பின்னர் அங்கு வந்த பொலிஸார் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மாற்றுடைகளை வழங்கி வவுனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தப்பிச் சென்ற பெண் பொலிஸுக்கு அறிவித்ததுடன் பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்துள்ளார்.
சம்பவம் குறித்து கந்தப்பளை பொலிஸாரின் நடவடிக்கை.
பொலிஸார் இவர்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளதுடன், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று விசாரித்ததில் குறிப்பிட்ட நபரும் வான் சாரதியும் அடிக்கடி காணும் முகமே. அவர்களைக் கண்டால் அறிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார். குறிப்பிட்ட நபர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இது அப்பகுதியில் இடம்பெற்றுள்ள 6 ஆவது சம்பவம் என மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் 5 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் 6 வது வவுனியா பெண் தப்பிவிட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக