
தேவாலய வளாகத்தின் குறிப்பிட்ட இந்த இடம் வாடகைக்குப் பெறப்பட்டபோது அது அரசியல் ரீதியிலான கலந்துரையாடலுக்குப் பயன்படுத்த இருப்பது தமக்குத் தெரியாது என தேவாலய நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.
இவ்வாறு 'The MetroWest Daily News' என்ற அமெரிக்க மாநில ஊடகத்தின் உத்தியோகபூர்வ செய்தியாளர் Brad Petrishen/Daily News staff தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்கா மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.
அந்த செய்திக்குறிப்பின் விபரமாவது,
போர்குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றம்சுமத்தப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியும் அந்த நாட்டினது இராசதந்திரியுமான ஒருவர் நேற்றையதினம் பேர்மிங்கம்மிலுள்ள எட்வேட் தேவாலயத்தில் உரையாற்றியபோது தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட போர்க் குற்றங்களை மறுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா கடந்த ஓகஸ்ட்டில் நியமிக்கப்பட்டிருந்தார்.
2009ம் ஆண்டு போர் அதன் இறுதிக்கட்டத்தினை அடைந்திருந்த வேளையில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்படுவதில் மிகவும் முதன்மையான பங்கினை வகித்தவர் இவர் எனக்கூறி மனித உரிமை அமைப்புக்கள் இந்தத் தீர்மானத்தினை எதிர்த்தன.
சிறிலங்கா இரண்டு பிரதான இனங்களைக் கொண்டது. சிங்கள இனத்தவர்கள் பெரும்பான்மையினராகவும் தமிழர்கள் சிறுபான்மையினராகவும் இருக்கிறார்கள். சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் சுதந்திரத் தனிநாட்டினை அமைக்கும் எண்ணத்தில் 1983ம் ஆண்டுமதல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடி வந்தார்கள்.
அரசாங்கத்தின் தகவலின்படி பலநூறு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் அந்த அமைப்பினது முதன்மைத் தலைவர்களும் கொல்லப்பட்டுவிட மே 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தனிநாடு நோக்கிய போராட்டம் இடைநின்று போனது.
வின்சிஸ்ரர் பகுதியில் வசித்துவரும் தமிழரான சுபா சுந்தரலிங்கமும் ஏனைய பலரும் இணைந்து சவேந்திர டீ சில்வாவின் வருகைக்கு எதிராக தேவாலயத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பில் தேவாலய அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசியல் தேவையொன்றுக்காகவே தங்களது வளாகம் பயன்படுத்தவிருந்தது என்பது தமக்குத் தெரியாது என்கிறார்கள்.
தாங்கள் 'மனிதாபிமானப்' படைநடவடிக்கையினை மேற்கொண்டு புலிகளின் பிடியில் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்தோம் என சவேந்திர சில்வா கூறியபோது 'அனைத்துமே சுத்தப் பொய்' என்றார் சுந்தரலிங்கம்.
விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரச படையினர் தமிழ்ப் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்தனர் என்ற குற்றச்சாட்டினை இங்கு உரைநிகழ்த்திய சவேந்திர சில்வா முற்றாக மறுத்தார்.
"பயங்கரவாதிகளின் கொடுங் கரங்களிலிருந்து அப்பாவித் தமிழ் பொது மக்களை மீட்பதற்கான படை நடவடிக்கையிலேயே நாங்கள் ஈடுபட்டிருந்தோம்" என மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ உரைநிகழ்த்திய சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் நூற்றுக்கணக்கான பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்ததாகவும் தங்களைப் பாதுகாப்பதற்கான மனிதக் கேடயங்களா ப் புலிகள் மக்களைப் பயன்படுத்தியதாகவும் சில்வா கூறுகிறார்.
இறுதியில் தங்களது கடுமையான முயற்சியின் பயனாக புலிகளின் பிடியில் இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் இந்த முயற்சியின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால் அது அவர்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பிவர முற்பட்டபோது புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றும் சில்வா கூறுகிறார்.
எவ்வாறிருப்பினும் போரின் இறுதி நாட்களில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும் அதனது இராணுவமும்தான் முழுப்பொறுப்பு என வாதிடுகிறார் சுந்தரலிங்கம். சரணடையவந்த விடுதலைப் புலிகளையும் சிறிலங்கா அரச படையினர் தயவுதாட்சண்யமின்றி சுட்டுக்கொலை செய்ததாக சுந்தரலிங்கம் தொடர்ந்தார்.
"வெள்ளைக்கொடியுடன் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைய முற்பட்டார்கள். அவர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லுமாறு கட்டளையிட்டவர் வேறு யாருமல்ல இந்தச் சவேந்திர சில்வாதான்" எனச் சுந்தரலிங்கம் கூறினார்.
சவேந்திர சில்வா தனது உரையினை நிறைவுசெய்த பின்னர் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது மேற்குறித்த இந்தக் கேள்வியினைச் சுந்தரலிங்கம் சவேந்திர சில்வாவிடம் நேரடியாகவே கேட்டார்.
"இதுபோன்ற கேள்விகளைத் துணிந்து கேட்பதை நான் வரவேற்கிறேன். உங்களைப் போலவே எதனையும் துணிந்து பேசும் இலங்கையர்களாக இருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன்" என்றார் அவர்.
பொதுமக்கள் மீது துப்பாக்கியப் பிரயோகம் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சில படையினர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், புலிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்கவேண்டும் என்ற உறுதியுடனேயே சிறிலங்கா இராணுவத்தினர் செயற்பட்டனர் என்றார்.
"இதன்போது இராணுவ வீரர்கள் உண்மையில் தவறிழைத்திருந்தால்...... அது நிச்சயம் ஒருநாள் வெளியே வரும். அப்போது இதற்குப் பொறுப்பானவர்கள் யாரோ அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" எனத் தொடர்ந்து தெரிவித்தார் சவேந்திர சில்வா.
"அவ்வாறே நீங்கள் கூறுவதைப்போல நான் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் பின்னொரு நாளில் நானும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவேன்... எனக்கும் தண்டனை வழங்கப்படும்" என கூறுகிறார் சவேந்திர சில்வா.
தான் ஒரு அப்பாவி என்பதாலேயே 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சியிலிருந்து தான் தப்பிப் பிழைத்ததாகக் கூறுகிறார் இவர்.
"நீங்கள் கூறுவதைப்போல நான் ஒரு கொலையாளி இல்லை என்பது எனது உள் மனத்திற்கு நன்கு தெரியும். இந்தத் தாக்குதலில் இருந்து நான் தப்பக் காரணம் இதுதான்". என்றார் அவர்.
அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக தற்போது முன்னெடுக்கும் செயன்முறை முடிவுக்கு வரும் வரைக்கும் அமைதியுடன்
இருங்கள் என சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிக கரிசனை செலுத்துபவர்கள் யாரோ அவர்களிடம் சவேந்திர சில்வா கோரினார்.
ஆனால் இந்த ஆணைக்குழுவானது பக்கச்சார்பின்றியும் சுதந்திரமாகவும் செயற்படவில்லை எனக்கூறி அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் சிறிலங்கா அமைத்திருக்கும் ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளிப்பதற்கு மறுத்திருக்கின்றன.
சிறிலங்காவினது போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா சுதந்திர விசாரணையினை மேற்கொள்ளுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனக் கூறுpயிருந்தது.
குறிப்பிட்ட இந்த நிகழ்வு இடம்பெறுவதற்கு தேவாலய வளாகத்தினை வழங்கியமைக்காக சுந்தரலிங்கம் எட்வேட் தேவாலய நிர்வாகத்தினைக் குறைகூறினார்.
தேவாலய வளாகத்தின் குறிப்பிட்ட இந்த இடம் வாடகைக்குப் பெறப்பட்டபோது அது அரசியல் ரீதியிலான கலந்துரையாடலுக்குப் பயன்படுத்த இருப்பது தமக்குத் தெரியாது என தேவாலய நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.
அரசியல் அல்லாத தியானச் செயற்பாடுகளுக்காக முன்னர் இந்த இடத்தினைப் பலமுறை பெற்றிருக்கும் ஒரு பௌத்த துறவிக்காகவே இந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தாக தேவாலய நிர்வாகம் கூறுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தேவாலயத்தின் முன்னாள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வரைக்கும் அங்கு சவேந்திர சில்வா வந்திருப்பது தொடர்பாகத் தமக்குத் தெரியாது என்கிறார்கள் இவர்கள்.
"தேவாலய வளாகத்திற்குச் சவேந்திர சில்வா வருகிறாரா எனக்கோரி நேற்றையதினம் கலிபோர்ணியா, பென்சில்வேனியா, மேரிலாண்ட், மசசூசெற்ஸ் மற்றும் ஒக்கியோ ஆகிய
பகுதிகளிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் எமக்கு வந்தன.
சவேந்திர சில்வாதான் இந்த நிகழ்வுக்கு வருகிறார் என எமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தினை நாங்கள் வழங்கியிருக்கமாட்டோம். அரசியல் கூட்டங்கள் தேவாலய வளாகத்தில் இடம்பெறுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை" என தேவாலயத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்.
நேற்றைய சம்பவத்திற்குப் பின்னர்தான் இதுபோல சவேந்திர சில்வா அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் மத்தியில் உரைநிகழ்த்துவது தமக்குத் தெரியும் என்றும் அவர் தொடர்ந்தார்.
கருத்துரையிடுக