News Update :
Home » , , » மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் எச்சரிப்போம்

மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் எச்சரிப்போம்

Penulis : Antony on செவ்வாய், 1 பிப்ரவரி, 2011 | PM 1:05


மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய, இலங்கை நல்லுறவு கெடும் என்பதை இலங்கைக்கு இந்தியா, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை இன்று கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு விஷயத்தை நான் இலங்கைக்குத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் படை பலத்தை அப்பாவி மீனவர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த காலமாக இனி இருக்க வேண்டும். இது தொடரக் கூடாது. இனி எப்போதும் இது நடக்கவே கூடாது.

இந்திய மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.

இதை மீறி இலங்கை கடற்படையினர் தாக்குதலைத் தொடர்ந்தால், இரு நாடுகளின் நல்லுறவை அது பாதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உறவு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இலங்கையின் கடமையாகும்.

பாகிஸ்தான் நமது மீனவர்களைத் தாக்குவதில்லை, கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இப்படி நடப்பதில்லை. ஆனால் இலங்கை மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று அந்த நாட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. இனிமேல் இது தொடரக் கூடாது என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுன் இந்தியாவுக்கு இதயப்பூர்வமான, தோழமையான, பாரம்பரியமான உறவு உள்ளது. இதை இலங்கை அரசு மனதில் கொள்ள வேண்டும். எனவே இது கெடாத வகையில், தனது படையினருக்கு அது அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.

தமிழக மீனவர்கள் தாக்குதல் விவகாரத்தில் இதுவரை இப்படி ஒரு எச்சரிக்கையை இந்திய அரசு வெளியிட்டதே இல்லை. இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு முறை கூட மத்திய அரசு வருத்தப்பட்டதில்லை, வேதனைப்பட்டதில்லை, துடித்ததில்லை, பொங்கியதில்லை, ஏன் ஒரு கேள்வி கூட இலங்கையை நோக்கி கேட்டதில்லை. குறைந்தபட்சம், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி கூட செய்ததில்லை.

இப்போதும் கூட சமீபத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்திலும் கூட இதுவரை மத்திய அரசிடமிருந்து ஒரு ஆறுதலோ, இழப்பீடோ வரவில்லை. ஆனால் தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதாலும், ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் கடும் கோபத்தில் இருப்பதாலும், எங்கே வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்தான் இப்படி பதறித் துடித்துள்ளது மத்திய அரசு என்று கூறப்படுகிறது.

இன்று விடுக்கும் எச்சரிக்கையை முதல் மீனவர் கொல்லப்பட்டபோதே இந்திய அரசு கடுமையாக விடுத்திருந்தால், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காதே. இதை ஏன் இத்தனை காலமும் செய்யவில்லை மத்திய அரசு என்பது மீனவர்களின் வருத்தம் கலந்த கேள்வி.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger