
கடும் யுத்த காலமாக இருந்த கடந்த 30 ஆண்டுகளில் கூட யாழ்ப்பாணம் குடிதண்ணீருக்காகக் கொழும்பை நம்பி இருந்ததில்லை.
ஆனால் தற்போது டசின், டசினாகத் தண்ணீர்ப் போத்தல்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நாதியற்ற நிலையினை யாழ்ப்பாணம் அடைந்து வருகின்றது என்று தெரிவித்தார் யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன்.
யாழ். நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யினை முன்னிட்டு யாழ்.பொது நூலகக் கேட்போர் கூடத்தில் "வடக்கு மாகாணத்தில் பொருளாதார வர்த்தகச் சூழல்" எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இதனை யாழ்.வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன் ஆரம்பித்து வைத்தார்."ஆனையிறவில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பினை இலங்கையின் எல்லா மாவட்டங்களுக்கும் விநியோகித்து வந்த யாழ்ப்பாணம், தற்போது இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்து நுகருகின்ற நிலைக்கு வந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தின் நாதியற்ற நிலையினை வெளிப்படுத்துகின்றது'' என்றும் தெரிவித்தார் பூரணச்சந்திரன்.
இலங்கையில் முதலீடு செய்யத் திட்டமிடுவோர் யாழ்ப்பாணத்தை விரும்புவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த அவர், "எடுத்துக்காட்டாக பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கூட சுமார் 150 காட்சிக்கூடங்கள் வரையிலேயே அமைக்கப்படும். ஆனால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 300 வரையான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை முதலீட்டாளர் கவனம் யாழ்ப்பாணத்தை நோக்கித் திரும்பியிருப்பதைக் காட்டுகின்றது'' என்றார்.தனது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் யாழ்ப்பாண உற்பத்திகளை அதிகமாக விரும்புகின்றனர். அரிசிமா, பழவகைகள் போன்றவற்றை சிறப்பான உணவுப் பதனிடல் தொழில் நுட்பத்தை கையாண்டு இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.ஆனால் அதற்கான சிறந்த வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உட்கட்டுமானங்களில் அரசின் அவதானம் போதாமலே உள்ளது. பிரதானமாக யாழ்ப்பாணத்துக்குள் நுழைவதற்காகக் காணப்படும் வீதியின் தரம் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் தன்மையுடையதாக இருப்பதும் முதலீட்டாளரின் ஆர்வத்தை பாதிக்கின்றது என்றார்.
கருத்துரையிடுக