
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிறீலங்காப் இராணுவத்தினரால் வீதிச்சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அண்மைக் காலமாக யாழில் இடம்பெற்று வரும் மர்மக் கொள்ளைகள், கொலைகள் மற்றும் ஆள்கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துருசிங்க அறிவித்திருந்ததோடு, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இது வரை காலமும் தமது கெடுபிடிகளைக் குறைத்திருந்த படைச் சிப்பாய்களுக்கு இதுவொரு சந்தர்ப்பம் கிடைத்தது போல சோதனை என்ற பெயரில் பொது மக்களைப் பல கெடுபிடிகளுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் நல்லூர் ஆலயச் சூழலில் படையினர் தேவையற்ற முறையில் வீதியால் போவோர் வருவோரை மறித்து உடற்பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர்.
வாகனங்களில் இருந்து பொது மக்கள் இறக்கப்பட்டு பெயர், அடையாள அட்டை இலக்கம், வாகன இலக்கம் போன்ற விவரங்கள் பதியப்பட்ட பின்னரே தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் கூட இராணுவத்தினரின் சோதனைகளில் இருந்து தப்பவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் வழமையை விட அதிகமான மக்கள் ஆலயத்துக்குச்சென்று வந்ததையும், அவர்கள் இராணுவத்தினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு ஆளானதையும் காணக்கூடியதாகவிருந்தது.
கருத்துரையிடுக