
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயுததாரிகள் அவரை இழுத்து வெளியில் எறிந்து விட்டு மீளவும் உள்ளே போய் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் பருத்தித்துறை தபாலக ஊழியரான தேவராசா கேதீஸ்வரன் (வயது 27) என்பவரேயாவார். தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்குடாவில் மீண்டும் தமிழினப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஓரிரு வாரங்களுக்குள் ஆயுததாரிகளால் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மகிந்தவின் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்ற தொடர் படுகொலைகளும், வெள்ளைவான் கடத்தல்களும் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனால் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழும் யாழ்குடா மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.


கருத்துரையிடுக