
கட்டுநாயக்க பகுதியிலிருந்த 4 மாதக் குழந்தையுடன் தலைமறைவாகிய பெண் 4 வருடங்களின் பின் கொழும்பில் கைது செய்யப்பட்டதுடன் குழந்தை அநுராதபுரத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க பகுதியில் கராஜ் ஒன்றை நடத்திவருபவர் தனது 4 மாதக் குழந்தையை பராமரிக்க ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அப் பெண் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் குழந்தையுடன் தலைமறைவானார்.
வீடு திரும்பிய பெற்றோர் குழந்தையை எங்கெல்லாம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையைக் கண்டுபிடிக்க பல்வேறு இடங்களில் நேர்த்திக் கடன்களும் நிறை வேற்றியுள்ளனர்.
அண்மையில் குழந்தையின் தாய் கொழும்புக்கு வந்தபோது பழைய வேலைக்காரி பாதையோரத்தில் நிற்பதைக் கண்டு பொலிஸாருக்குப் புகார் கொடுத்துள்ளார். உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார் அப் பெண்ணைக் கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் குழந்தையைக் கொண்டு சென்ற அப் பெண் அந்தக் குழந்தையை வைத்துக் கொண்டு பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளார். ஒருநாள் அநுராதபுரம் சென்று புகையிரத நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொணடிருக்கும் போது பிள்ளையை அவ்விடத்தில் விட்டு விட்டு அவர் வெளியே சென்றுள்ளார்.
அநாதரவாக பிள்ளையொன்று நிற்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்த போது பொலிஸார் அப்பிள்ளையின் பொறுப்பாளர்களைத் தேடியுள்ளனர். இதனை அவதானித்த அந்தப் பெண் தலைமறைவாகியுள்ளார். உறவினரைக் கண்டுபிடிக்க முடியாத பொலிஸார் பிள்ளையை நீதிமன்ற உத்தரவின் பேரில் அநுராதபுரம் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை கட்டுநாயக்க பொலிஸார் மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர் செய்த போது பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் இல்லத்தில் இருக்கும் பிள்ளையை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைக்கு தற்போது 4 வயது என கண்டறியப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பொ்னாண்டோ தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக