
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் வளம்மிக்க மேற்கு நாடுகளுடன் இணைந்து சிறிலங்காவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகளிலும், அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகளை சுமத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் வெளிநாடுகளில் உள்ள உறுப்பினர்கள் சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முனைகின்றனர்.
அத்துடன் வளம்மிக்க மேற்கு நாடுகளுடன் இணைந்து சிறிலங்கா அரசு மீது போர்க் குற்றச்சாட்டுகளை சுமத்த முனைகின்றனர்.
அவர்களின் பிரதான இலக்கு சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுப்பதாகும்.
விடுதலைப் புலிகளின் இந்த முயற்சிகளைத் தோற்கடிக்கின்ற பொறுப்பு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிறிலங்காவின் துறைசார் வல்லுனர்களிடம் இருக்கிறது.
போர் முடிவடைந்து விட்டது. விடுதலைப் புலிகள் அனைத்து வழிகளிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்.
அதுபோன்ற நெருக்கடியான நிலைக்கு நாம் இனிமேல் முகம் கொடுக்க வேண்டியதில்லை.
ஆனால், அதற்காக அச்சுறுத்தல் முற்றாக நீங்கி விட்டதாக கருதக் கூடாது.
விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக ரீதியாக பாரிய போர் ஒன்றைத் தொடுத்துள்ளனர்.
இது பொருளாதாரப் போர்.
இதற்கு ஆட்டிலறிகளையோ குண்டுகளையோ, ஜெட் போர் விமானங்களையோ நாம் பயன்படுத்த முடியாது.
பொருளாதார ரீதியாக சிறிலங்காவைத் தனிமைப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் மேற்குலக நாடுகள், கனடா, அமெரிக்கா போன்றன முற்படுகின்றன.
சிறிலங்காவில் வெளிநாடுகள் முதலீடு செய்வதைக் கெடுக்கும் வகையிலும், சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுக்கும் வகையிலும், வெளிநாடுகளில் சிறிலங்கா சந்தை வாய்ப்புகள் பெறுவதைத் தடுக்கும் வகையிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் சிறிலங்கா மீதான போர்க்குற்ச்சாட்டுகளைச் சுமத்தும் செய்திகளை வெளியாகின்றன.
எமது நாட்டின் தலைவர்களையும் முப்படைகளின் தளபதிகளையும் அனைத்துலக போர்க்குற்றத் தீர்ப்பாயம் முன்பாக கொண்டு செல்வதற்கு சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
கனடாவின் ரொரன்ரோவில் புலிகள் ஆதரவு சக்திகள் பாரிய நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிதி எமது நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
நாம் இதற்கு எதிராகப் போராடத் தயாராக இருக்க வேண்டும்.
அதற்கு அனைத்து துறைசார் வல்லுனர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக