
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள ‘வெள்ளிக்கிழமை அமைப்பு‘ [Friday Forum] அங்குள்ள மக்களின் பாதுகாப்பையும் மனிதஉரிமைகளையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் சார்பில் சிறிலங்கா அரசின் சமாதான செயலக முன்னாள் பணிப்பாளரும், மூத்த இராஜதந்திரியுமான ஜெயந்த தனபால பகிரங்க கடிதம் ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு எழுதியுள்ளார்.
அந்தப் பகிரங்கக் கடிதத்தில்-
“ வெள்ளிக்கிழமை அமைப்பின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதை அடுத்து இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.
‘வெள்ளிகிழமை அமைப்பு‘, சமூக பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்த அரசுக்கு எப்படி உதவலாம் என்பது பற்றியும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும், தேசியப் பிரச்சினையை தீர்ப்பது பற்றியும் தொடர்ச்சியாக சந்தித்து கலந்துரையாடி வருவதாகும்.
யாழ்ப்பாணத்தில் கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பாக கிடைக்கும் தகவல்களையிட்டு நாம் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளோம்.
இந்தப் பகுதிகளில் ஆயுதப்படையினர் வலுவாக நிலை கொண்டுள்ள சூழலில் தான் இந்தச் சம்பவங்கள் நடந்தேறுகின்றன என்பது முக்கியமானது.
இவை அனைத்தும் தனிப்பட்ட ரீதியானவை அல்ல.
இன்று நாடு எதிர்கொள்ளுகின்ற முக்கிய சவால் சமாதானத்தை வெற்றி கொள்வதாகும்.
இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் நீண்டகாலமாக ஆயுதப்போரினால் பாதிக்கப்பட்டவர்கள்.
அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பையும் மனிதஉரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதைச் செய்யத் தவறினால், போருக்குப் பிந்திய சமூக மாற்றங்கள், அபிவிருத்தி, அமைதி ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் அமைந்து விடும்.
இந்த விடயத்தில் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறோம்“ என்று அந்தப் பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அமைப்பில், வண.பேராயர் டுலிப் சிக்கேரா, பேராசிரியர்கள் அர்ஜுன அலுவிகார, சாவித்திரி குணசேகர, ஞானநாத் அபேசேகர, ரஞ்சினி அபேசேகர, கலாநிதி தேவநேசன் நேசையா, ரஞ்சித் பெர்னான்டோ, சித்தி திருச்செல்வம், வெலியமுன,ஜெசிமா இஸ்மாயில், விஸ்வலிங்கம், மனோரி முத்தெட்டுவேகம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கருத்துரையிடுக