News Update :
Home » » யாழ். மீசாலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாயும், மகனும் வெள்ளைவானில் கடத்தல்! தாய் சடலமாக மீட்பு?

யாழ். மீசாலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாயும், மகனும் வெள்ளைவானில் கடத்தல்! தாய் சடலமாக மீட்பு?

Penulis : Antony on திங்கள், 7 மார்ச், 2011 | AM 2:09


யாழ். தென்மராட்சி பிரதேசத்தின், மீசாலை கிழக்கு பகுதியில் நேற்று தாயொருவரும், மகனும் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவத்தையடுத்து செயலில் இறங்கிய பொலிஸார் சம்பந்தப்பட்ட வெள்ளை வானை மடக்கிப் பிடித்தனர்.இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

சம்பவத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 38 வயதுடைய பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து, மீசாலை கிழக்கிலுள்ள உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார். நேற்று அவர்களது வீட்டுக்கு வேறு ஆட்களுடன் வானொன்றில் வந்த அப் பெண்ணின் கணவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அவ் வேளையில் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிடவே வாகனத்தில் வந்தவர்கள் மகனையும் தாயையும் இழுத்துச்சென்று வானில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்கள் தம்மை யாரும் அடையாளம் காணாத வகையில் முகத்தை மறைத்திருந்தனர். மேலும் கடத்தலின் போது சம்பவ இடத்தில் நின்ற சிலர் கடத்தல்காரர்களால் சைக்கிள் செயின் மூலம் கடுமையாகத் தாக்கப்பட்டும் உள்ளனர்.

அயலவர்களின் தகவலையடுத்து பொலிஸாரும், படையினருமாக தேடுதல் நடிவடிக்கையில் இறங்கினர். சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வான் மடக்கிப் பிடிக்கப்பட்டு, வானினுள் இருந்த தந்தையும், வாகனச் சாரதியும் வேறொரு பெண்ணும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், வாகனத்துக்குள் இருந்து சம்பந்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டுள்ள போதும், கடத்தப்பட்ட பெண் காணாமற் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சுயாதீன செய்தி வட்டாரங்கள் எதுவும் இதனை உறுதிசெய்யவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தகவல் தருகையில், பரபரப்புக்குரிய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை. இது வெள்ளைவான் கடத்தல் இல்லை. ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்று தெரிவித்துள்ளனர்.

மீசாலை கிழக்கில் தாயும், மகனும் கடத்தப்பட்ட சம்பவம் கடத்தல் அல்ல என மறுத்துள்ள பொலிஸார் குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்கள் சிலவற்றிற்குச் சென்ற பொலிஸார் செய்திகளை திரிவுபடுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

பிந்திய இணைப்பு

மீசாலை கிழக்கில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட குடும்பப்பெண் சடலமாக மீட்பு?

யாழ்ப்பாணம் மீசாலை கிழக்குப் பகுதியில் நேற்று வெள்ளை வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட பெண் சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீசாலை கிழக்கில் கணவரைவிட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த குகதாஸ் சாந்தினி என்பவரே இவ்வாறு கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.

இவரது கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவரான குகதாஸ் நேற்று சாவகச்சேரியில் வைத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

கனடாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு வந்த கொலை செய்யப்பட்டவரின் கணவர் கொழும்பில் வெள்ளை நிற வான் ஒன்றை சாரதியுடன் வாடகைக்கு அமர்த்தியுள்ளார், பின்னர் வவுனியாவில் வேறு இருவரையும் அழைத்துக் கொண்டு மீசாலையிலுள்ள வீட்டுக்கு நேற்று வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்தவர்களை தடிகள் பொல்லுகள்ளால் தாக்கியுமுள்ளனர்.

அங்கிருந்தவர்கள் கூக்குரலிடவே வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுபவர்கள் பிஸ்டலை பெண்ணின் மகனுடைய தலையில் வைத்து மிரட்டியதோடு அந்தப் பெண்ணையும், 8 வயதுடைய அவருடைய மகனையும் ஆயுத முனையில் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தையறிந்து உடனடியாக படையினரின் உதவியுடன் செயலில் இறங்கிய பொலிஸார் சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். பிடிக்கப்பட்ட வேளை வானினுள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மீட்கப்பட்ட போதிலும், கடத்தப்பட்ட பெண் வானினுள் இருக்கவில்லை. அவ் வேளையில் வானில் இருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், வாகனச் சாரதியும், வேறொரு பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸார் வாகனத்தை மடக்கிப் பிடித்த வேளை, வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஆயுததாரிகளும் தலைமறைவாகி இருந்தனர். இவர்கள் இருவரையும் தேடி நேற்று மாலை முழுவதும் பொலிஸார் வலை விரித்திருந்தனர். அதே நேரம் காணாமற்போன சாந்தினியைத் தேடும் பணியையும் முடுக்கி விட்டிருந்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சாந்தினியை ஒரு அடர்ந்த மரம் நிறைந்த பகுதியில் வானில் இருந்து கணவர் தள்ளி விட்டதாக மகன் கூறியதாகத் தெரியவந்திருந்தது.

இன்று காலை பெருங்குளம் பகுதியில் பெண் ஒருவருடைய சடலம் காணப்படுவதாகக் தகவல்கள் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger