
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற இரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தொப்பி சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஊர்வலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரசார ஊர்வலத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் கலந்துகொண்டிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியால் ஊர்வலம் மீரா பாலிகா மகா வித்தியாலயத்தின் முன்பாக சென்ற போது அங்கு இரு தரப்பு ஊர்வலங்களும் சந்தித்த போதே இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரும் பொதுமகள் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் விசாரணை தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக