News Update :
Home » » இனப்பிரச்சினையும் சம்பூரும் - அரசியல் அநாதைகளாக நிற்கும் சம்பூர் பிரதேச மக்கள்

இனப்பிரச்சினையும் சம்பூரும் - அரசியல் அநாதைகளாக நிற்கும் சம்பூர் பிரதேச மக்கள்

Penulis : Antony on வியாழன், 24 மார்ச், 2011 | AM 8:24


[கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் Thinakkuarl on 20.03.2011 ஞாயிறு இதழில் எல். சிவலிங்கம் என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை அம்மக்களின் குரலை வெளிப்படுத்துவதனால் புதினப்பலகை மீளவும் அதனை இங்கே வெளியிட்டு வாசகர்களின் கவனத்திற்கு கொணர்கின்றது].

இனப்பிரச்சினை ஆரம்பமான காலப்பகுதியில் சம்பூர் தனித்தமிழ் பிரதேசமாகக் காணப்படமையினால் போராட்ட இயக்கங்களின் நடமாட்டம் காணப்பட்டமை ஒன்றும் இரகசியமானதல்ல. இதனால் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், வீடெரிப்புக்கள் என பல்வேறு விதமான தாக்கங்களுக்கு சம்பூர் பிரதேசம் உட்பட்டு வந்தது.

பெயருக்கேற்ற சம்பூரணமான வளங்களைக் கொண்ட இப்பிரதேசம் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து பொருளாதார ரீதியாகவும் கல்வியிலும்; மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போதிலும் அனைத்திலும் தன்னிறைவான பிரதேசமாகவே இயங்கிக் கொண்டிருந்தது.

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் முதன் முதலில் சம்பூரில் முகாம் அமைக்க முனைந்த போதிலும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் காரணமாக அவர்கள் சம்பூரை விட்டு இடைநடுவில் வெளியேற வேண்டியேற்பட்டது. 1990 களில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் சம்பூர் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் மாறி மாறி இருந்து வந்தது.

மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டிருந்தமையினால் இராணுவம் ஊருக்குள் வரும் போது புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கும் மரபினைக் கொண்டிருந்தனர்.

சம்பூரில் அமைந்திருந்த இலங்கை இராணுவ முகாம்கள் மீது புலிகள் ஒரு போதும் பெருமெடுப்பிலான தாக்குதலைத் தொடுத்திருக்கவில்லை என்பதிருந்தும் இராணுவம் சம்பூரை நோக்கி முன்னேறிய போதெல்லாம் ஒரு தரமேனும் புலிகள் இராணுவத்தினரை எதிர்த்து மரபு வழிச் சமரில் ஈடுபடவில்லை என்பதிலிருந்தும் சம்பூர் பிரதேசம் ஒருபோதும் புலிகளின் கோட்டையாக இருக்கவில்லை என்பது புலனாகின்றது.

கடைசியாக சம்பூரில் இருந்த இலங்கை இராணுவ முகாம் ஜயசிக்குறு நடவடிக்கைக் காலத்திலேயே அகற்றப்பட்டது. கடைசியாக நடந்த சண்டையிலும் புலிகள் சாதாரண எதிர்ப்பைக் காட்டிவிட்டு சம்பூரிலிருந்து பின்வாங்கியிருந்தனர் என்பதே உண்மையானதாகும்.

உண்மையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட சம்பூர் பிரதேச நில அமைவானது புலிகளுக்கு மரபு வழிச்சமருக்கான ஒரு இயற்கையான பாதுகாப்பு நிலைமையை; வழங்கியிருக்கவில்லை. பல கால கட்டங்களில் இராணுவம் சம்பூரை விட்டு வெளியேறியவுடன் புலிகளின் நடமாட்டம் சம்பூரில் அதிகரித்தது என்பதே உண்மையானதாகும். எனவே சம்பூர் புலிகளின் கோட்டை எனும் ரீதியில் சம்பூர் மக்களைப் பழிவாங்குவது எவ்விதத்திலும் நியாமாகாது.

யுத்த நிறுத்தமும் சம்பூரும்

2002ம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நிலைமை முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தினை எடுத்தது.

யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் சம்பூர் பிரதேசத்தில் அவர்களின் திருமலை மாவட்ட தலைமை பொலிஸ் நிலையம், திருமலை மாவட்ட அரசியல் தலைமைச் செயலகம் என்பவற்றை அமைத்துக் கொண்டனர். இலங்கை அரசியல் வாதிகளும், வெளிநாட்டுத் தூதுவர்களும் அடிக்கடி வந்து சென்றமையினால்; உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அறியப்பட்ட ஒரு பிரதேசமாக சம்பூர் மாறத்தொடங்கியது.

தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துபற்றி சம்பூர் மக்களில் பெரும்பாலானோர் அப்போது அறிந்திருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டிலிருந்து யுத்தத்திற்கு மத்தியிலும் நெருக்கடிகளுடன் ஓரளவு சந்தோசமாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர். யுத்த காலத்திலும் மூதூர் பிரதேசத்திற்கு அவர்கள் நெல், மீன், விறகு, பால் போன்றவற்றைத் தாராளமாக வழங்கி வந்தனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களின் மீது தற்கொலைத் தாக்குதல் 2006 ஏப்ரல் 25ம் திகதி மாதத்தில் கொழும்பில் நிகழ்த்தப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. ஏனெனில் திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமிக்க பகுதியில் அமைந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகக் காணப்பட்டமையினால் சம்பூர் மீதே முதன்முதலாக வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்பு வெற்றிலைக்கேணியில் இலங்கைக் கடற்படையினர் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் கெப்பிட்டிக்கொலாவையில் சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் சம்பூர் பிரதேசம் மீதே இலங்கை விமானப்படை தாக்குதலைத் தொடுத்தது. இதன்பிறகு மாவிலாறு பிரச்சினையினைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்து முதன் முதலாக சம்பூர் பிரதேசத்தினையையே கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சம்பூர் மக்களின் இடம்பெயர்வு வாழ்க்கை ஆரம்பமாகியது.

இராணுவம் சம்பூரைக் கைப்பற்றியபோது சம்பூர் எப்படி இருந்தது

சம்பூர் மீது விமானத்தாக்குதல் ஆரம்பமான போது மக்கள் உடுத்த உடையுடன் அயற்கிராமங்களில் தஞ்சமடைந்தனர். யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தமையினால் தாக்குதல் தற்காலிகமானது எனவும் தாம் விரைவில் வீடு திரும்பிவிடலாம் என மக்கள் நம்பினர். ஆனால் அவர்களின் நினைப்பு பொய்த்துப்போனது.

தாம் ஆண்டாண்டு காலமாக சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் வீடுகளுடன் விட்டுவிட்டு கையில் எடுக்கக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு இடம் பெயர்ந்த மக்கள் இன்று எல்லாவற்றையும் இழந்து விட்டு ஏதிலிகாக நிற்கின்றனர்.

சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர் குழுவொன்றினை சம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தனர். நேசன் வாரப் பத்திரிகையின் பத்திரிகையாளரான தரிஸ பஸ்தியன் 10.09.2006 அன்று வெளியான நேசன் பத்திரிகையில் “சம்பூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புக்களுக்கு அப்பால் பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சிவிலியன் உடமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிகக் குறைவானதாகும்” தான் அன்று கண்ட சம்பூர் பற்றி எழுதியுள்ளார்.

ஆனால் அன்று அவர் கண்ட சம்பூரில் இருந்த எதுவுமே இன்று இல்லை. சம்பூரில் இருந்த மக்களின் வீடுகள் மட்டுமல்ல அரசாங்க வைத்தியசாலை கூட இருந்த அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அப்போது சம்பூரில் நிலை கொண்டிருந்த 222 அல்லை – கந்தளாய் பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாகிய லெப்டினன்ட கேர்ணல் சரத் விஜேசிங்க சம்பூர்ப்பிரதேசத்தில் பல பொலிஸ் காவல் நிலைகள்; அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இவை யாவும் காலப்போக்கில் முழு அளவில் தொழிற்படும் பொலிஸ் நிலையமாகத் தரமுயர்த்தப்படும் என்றும் இவை விரைவில் ஆரம்பமாகவிருக்கும் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான முன்னோடி நடவடிக்கைகள் எனத் தன்னிடம் கூறியதாகவும் தரிஸ பஸ்தியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் மக்களின் மீள்குடியேற்றம் மட்டும் இன்னும் இடம்பெறவில்லை.

அனல் மின் நிலையம், பாதுகாப்பு வலயம், மற்றும் பாரக்கைத்தொழில் வலயம்

சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இச்செய்தி வெளியாகி சிறிது காலத்தில் சம்பூர் பிரதேசம் முழுவதும் மக்கள் உட்செல்லமுடியாத உயர் பாதுகாப்பு வலயம் என வர்த்மானி அறிவித்தலை அரசு வெளியிட்டது.

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயம் என்பது நாட்டில் எங்கும் இல்லை என அரசு அறிவித்த சிலநாட்களில் சம்பூர் பாரக் கைத்தொழில் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பூரை மக்களுக்கு ஒருபோதும் கையளிப்பதில்லை என்னும் முடிவில் அரசாங்கம் உறுதியாக இருப்பதுபோல் தோன்றுகின்றது.

உண்மையில் சம்பூர் விடயத்தில் நடப்பது என்ன? 2009 ஆகஸ்ட் 30 ஆந்திகதி ராவய சிங்கள பத்திரிகையில் தனுஜ பத்திரன அவர்கள் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக சம்பூரில் 500 ஏக்கர் பரப்பளவான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்ட்டிருந்த சுமார் 500 வீடுகளை அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வித அறிவித்தல்களுமின்றி அவர்களுடைய எழுத்து மூலமான எவ்வித அனுமதியும் பெறாமல் இலங்கை அரசாங்கம் தரைமட்டமாக்கியுள்ளது எனவும் அந்த அனல் மின்நிலையம் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட சம்பூர் பிரதேசமானது மக்கள் வாழ்வற்ற சூன்யப் பிரதேசமென இந்தியப் பிரதிநிதிகளுக்கு காரணம் காட்டவே அரசாங்கம் இவ்வாறு தமிழ் மக்களின் வாழ்விடத்தை நாசப்படுத்தியுள்ளது எனவும் இது தொடர்பாக மின்சக்தி அமைச்சு அதிகாரிகளை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த வீடுகள் தமது அமைச்சினால் தரைமட்டமாக்கப்படவில்லை என்றும் அது அரசாங்கத்தின் பிறிதொரு தரப்பினரால் செயப்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அபிவிருத்தித் திட்டமொன்னிற்கு நிலக்கையகப்படுத்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் சட்டவிதிமுறைகளை இலங்கை அரசாங்கமே அப்பட்டமாக மீறி சம்பூர் மக்கள் மீது அட்டூழியம் புரிந்துள்ளமை தெளிவாகின்றது.

ஒரு அபிவிருத்தித்திட்டம் செயற்படுத்தப்படும்; போது கடைப்பிடிக்கப்படவேண்டிய எந்த நடைமுறைகளும் சம்பூர் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. அபிவிருத்தித்திட்டத்தினால் ஏற்படக்கூடிய செலவு நலனைக் கண்டறியும் ஆய்வு, சூழல் பாதிப்பு ஆய்வு, சமூகப் பாதிப்பு ஆய்வு, என எதுவும் சம்பூர் விடயத்தில் பின்பற்றப்படவில்லை.

அத்துடன் இலங்கை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலக்கையகப்படுத்தல் நடைமுறைகள் எதுவும் இன்றுவரை பின்பற்றப்படவில்லை. ஏன் அரசாங்கம் இன்றுவரை அம்மக்களுடன் இது தொடர்பில் பேசவேயில்லை.

கிழக்கு மாகாண ஆளுனரும் திருமலை மாவட்ட அரசாங்க அதிபரும் இனி மக்கள் அங்கு குடியேற முடியாது எனக்கூறுகின்றனரே தவிர அரசாங்கம் அரசியல் ரீதியாக முறைப்படி அம்மக்களுடன் பேசவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட இப்பிரச்சினையில் ஒரு நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கின்றார்.

சுமார் பத்தாயிரம் ஏக்கர் சதுர பரப்பளவான முறையான உறுதிகளைக் கொண்டுள்ள தனியார் நிலத்தினை அரசாங்கம் சட்டநடைமுறைகளை மீறி கையகப்படுத்த முடியாது என்பதனை சாதாரண அறிவுடையோர் கூட அறிவர்.

மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு மூதூர்ப் பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கர் நெற்காணிகள் கூட இல்லாத நிலையில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவிலான நெற்காணிகளுக்கு எவ்வாறு மாற்றுக்காணிகளை வழங்குவது?. சுமார் 2500 ஏக்கர் பரப்பளவிலான நெற்காணிகள் சம்பூர் பிரதேசத்தில் இன்றுவரை செய்கை பண்ணப்படாமல் தரிசு நிலங்களாகக் ஆகிக் கொண்டிருக்கின்றன. வளமாக வாழ்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம்; மக்கள் இன்று ஏதிலிகளாக முகாம்களில் அல்லலுறுகின்றனர்.

இப்பிரதேசத்தில் சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம், முதலிய பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்கமுடியாத நிலையில் செயலிழந்துள்ளன. சம்பூர் மகாவித்தியாலயத்தில் இலங்கை இராணுவத்தின் முகாமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் பிரசித்தி பெற்ற சம்பூர் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் விநாயகர் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம் (இவ்வாலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது), கூனித்தீவு விநாயகர் ஆலயம், கூனித்தீவு வடபத்திர காளி அம்பாள் ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம் முதலிய கோயில்களும் வருடக்கணக்காக பூசைகள் எதுவுமின்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன.

பிரசித்தி பெற்ற சம்பூர் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம் குண்டுத் தாக்குதல்களால் முற்றாகச் சேதமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். சுதந்திர இலங்கையில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுக் காணி, சுமார் எட்டாயிரம் மக்களின் வாழ்வு, ஐந்து பாடசாலைகள், ஏழு கோயில்கள் யாவற்றையும் அழித்து எங்காவது ஒரு அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உரியவர்கள் நாட்டுமக்களுக்கும் உலகிற்கும் வெளிப்படுத்தவேண்டும்.

மௌனம் காத்து இவ்வநியாயத்திற்குத் துணைபுரியும் தமிழ் அரசியல் வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்பதனையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். வளமான இடத்தில் பிறந்து வாழ்ந்தது சம்பூர் மக்கள் செய்த குற்றமா? புலிகளின் கட்டுப்பாடுப்பகுதியில் அவர்கள் வாழ்ந்தது யார் செய்த குற்றம்?

சம்பூர் மக்களின் துயரம், அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தமிழ் அரசியல் வாதிகள்

சம்பூர் பிரதேச மக்கள் 1983 தொடக்கம் 2006 வரைக்கும் யுத்த சூழ்நிலைக்குள் வாழ்ந்த போதும் அவர்கள் ஒருபோதும் இடம்பெயர்ந்திருக்கவில்லை. ஆனால் 2006ல் இடம் பெற்ற வான்தாக்குதலைத் தொடர்ந்து முதன்முதலாக இடம்பெயர்ந்த சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பிரதேச மக்கள் இன்றுவரைக்கும் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைபறிச்சான் ஆகிய பிரதேங்களில் அமைந்துள்ள அகதிமுகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அரச அதிகாரிகள் சிலர் அம்மக்களை அணுகி இறால்குழி அல்லது இத்திக்குளம் ஆகிய இடங்களில் குடியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். சம்பூர் பிரதேசம் விவசாயம், கால்நடை, தோட்டப்பயிர்ச்செய்கை மற்றும் கடற்றொழில் போன்றவற்றுக்கு மிகவும் பொருத்தமான பிரதேசமாகும். ஆறு அடி ஆழத்தில் நிலக்கீழ் நீரைக் கொண்டுள்ள மிகவும் வளமான பிரதேசமாகும்.

அரச அதிகாரிகள் முன்மொழிந்த இறால்குழி அல்லது இத்திக்குளம் ஆகிய பிரதேசங்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். இறால்குழிப் பிரதேசம் மாரி காலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் சேற்று நிலப்பகுதியாகும். இங்கு விவசாயம் செய்வதற்குரிய ஒரு சில நூறு ஏக்கர் நெற்காணிகள் கூட இல்லாத போது ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளைக் கொண்ட மக்கள் எவ்வாறு அங்கு குடியேறுவது?

இத்திக்குளம் பிரதேசத்தில் நிலத்தடி நீர் 40-50 அடிகளுக்குள் கிடைப்பதே கடினமானதாகும். குடிநீருக்கே அல்லற்படும் அப்பிரதேசத்தில் விவசாயமும் செய்யமுடியாது. கடற்றொழிலும் செய்ய முடியாது. பத்தாயிரம் ஏக்கர் சம்பூர் காணிகளை வேலிபோட்டு அடைந்து வைத்து விட்டு வேலிக்கப்பால் கருங்கற் பாறை நிலங்களிலும் சேற்று நிலங்களிலும் மக்கள் குடியேறலாம் என அரசு எந்த நியாயாதிக்கத்தினடிப்படையில் கூறுகின்றது?

பத்தாயிரம் ஏக்கர் காணிகளை கொண்டிருந்த மக்களுக்கு ஒரு சில நூறு ஏக்கர் காணிகளை மூதுரிரின் எந்தப்பகுதியிலும் பெற முடியாத நிலையில் எந்த நியாயாதிக்கத்தின் படி அரசு மாற்றுக்காணிகள் வழங்கப்படும் எனக் கூறுகின்றது? இலங்கை அரசாங்கத்திற்கு இலங்கையில் எங்காவது சொந்தமாக ஒரு சில நூறு ஏக்கர் நெற்காணிகளாவது உண்டா? அவ்வாறிருக்கையில் 2500 ஏக்கர் நெற்காணிகளை எங்கிருந்து பெற்று சம்பூர் மக்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகின்றது?.

தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச டெயிலி மிரர் பத்திரிகைக்கு 01.11.2007அன்று வழங்கியுள்ள பேட்டியில் சம்பூர் பிரதேசத்திலிருந்து ஒரு தனிநபரேனும் வெளியேற்றப்படவில்லை என்றும் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயினர் தங்கள் பாதுகாப்புக்காக சில குடும்பங்களை சம்பூர் பகுதியில் வைத்திருந்தாகக் கூறியுள்ளதுடன் இக்குடும்பங்கள் அப்பிரதேசத்தில் தமது சொத்துரிமைய நிரூபிக்க முடியாது எனவும் அவர்களால் அங்கு ஒரு வீட்டையேனும் காட்ட முடியாது என்றும் கூறியுள்ளார். இது முற்றுமுழுக்க ஆதாரமற்ற கதையாகும்.

சம்பூரில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சம்பூர் மகாவித்தியாலயம் இலங்கை சுதந்திமடைவதற்கு முன்னரேயே ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக இயங்கியது என்பதையும் 1965ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் மர்கூம் அப்துல் மஜீத் அவர்களின் முன்முயற்சியினால் மூதூர் கிழக்கிலேயே முதன் முதலாக மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது என்பதனையும் அரசாங்கத்திலுள்ளோர் கல்வியமைச்சின் ஆவணங்களைப் புரட்டிப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் தொடங்கிய பின் இலங்கை இராணுவத்தினர் பல தடவைகள் சம்பூரில் முகாமிட்டிருந்தனர். 1987-1989 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். 1990 களின் முதற்பகுதியில் சம்பூரில் முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு கப்டனாக இருந்து தற்போது மேஜர் ஜெனரலாக இருக்கும் பேர்ட்டி பெரேரா அவர்கள் சம்பூர் பிரதேசத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். அவர் சம்பூரைப்பற்றி அதிகம் கூறக்கூடியவர். ஆகவே சம்பூரில் மக்கள் வாழவில்லை என அரச தரப்பின் உயர்மட்டம் கூறுவது அடிப்படையற்றதாகும்.

இது இவ்விதமிருக்க தமிழ் அரசியல் வாதிகளின் சம்பூர் தொடர்பான அரசியல் நிலைப்பாடு துரோகத்தனமானதாகும். இந்தியா சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் கதை வெளியானதுடன் தமிழ் அரசியல் வாதிகளின் மௌன விரதம் ஆரம்பமாகியது.

சம்பூர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திருவாளர் சம்பந்தன் அவர்களின் சம்பூர் தொடர்பான நிலைப்பாடு சம்பூர் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. சம்மந்தன் அவர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்குக் கேட்டு ஜனாதிபதி தோர்தல் காலத்திலும், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் தனக்கு வாக்குக்கேட்டும் சம்பூர் பிரதேச மக்களை அகதிமுகாம்களில் சென்று சந்தித்தார்.

இந்தியாவுடன் பேசி எப்படியும் மக்களைக் குடியேற்றுவதாக வாக்குறுதியளித்தார். அதன்பின் அம்மக்களை எட்டிக்கூடப்பார்க்காமல் இந்தியாவே கதியென தஞ்சமடைந்து விட்டார். தனக்கு வாக்களித்த மக்களை மிகமுக்கியமான காலத்தில் கைவிட்டு அரசியலில் இருந்து ஒய்வு பெறுவாரேயானால் வரலாற்றுப் பழியில் இருந்து அவர் தப்பமுடியாது.

அவர் தற்போது முதுமையடைந்து விட்டதாகவும் நோய்வாய்ப்பட்டு இந்தியாவில் ஓய்வெடுப்பதாகவும் கதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறெனில் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்ட போது தனக்கு 80 வயது நெருங்குவதனையும் தான் செயற்படு அரசியலில் ஈடுபட முடியாது என்பதனையும் அவர் அறியாமல் இருந்தாரா?

அவர் மூப்படைவதும் அவர் ஓய்வெடுப்பதும் அவரது சொந்தப் பிரச்சினைகள். அதற்காக அவர் தன்னைத் தெரிவு செய்த மக்களின் தலைவிதியோடு விளையாடலாமா?

தற்போது கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை அவர் தக்கவைத்துக் கொண்டு திருமலை மாவட்டத்தில் செயற்படு அரசியலில் ஈடுபடக்கூடிய ஒருவரை தெரிவு செய்து மக்களின் தேவைகளை அறிந்து பணிசெய்யுமாறு அவரால் பணிக்க முடியாதா? ஏனெனில் அவர் தலைமை தாங்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்; இன்று வரை நாடாளுமன்றத்தில் சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினை பற்றி தனியாக விவாதித்து ஒரு நியாமான தீர்வினைப் பெற்றுத்தர முன்வரவில்லை. இன்று வரையும் அவர்கள் சம்பூர் மக்களின் பிரச்சினையினை சட்ட ரீதியாகவும் அணுகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவே தமிழர்களுக்கு இனி எல்லாம் எனக்கருதும் இவர்கள் இந்தியாவை முழுமூச்சாக எதிர்த்து அரசியல் நடத்துவதும் இந்தியாவிடம் சரணாகதி அரசியல் நடத்துவதும் தமிழ் மக்களுக்கு ஒரேவிதமான முடிவினையே பெற்றுத்தரும் என்பதை ஏன் உணர மறுக்கின்றார்கள்?http://www.puthinappalakai.com/view.php?20110324103454
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger