
நாம் தமிழர் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவரது கட்சியைக் கலைத்துவிடுமாறும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கியஸ்தரான சாகுல் ஹமீது என்பவருக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே சீமானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவரது கட்சியைக் கலைத்துவிடுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர் முத்துக்குமாரையும் தாமே கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மர்ம நபர்கள், சீமான் மற்றும் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் அவ்வாறான கதி ஏற்பட முன் கட்சியைக் கலைத்துவிட்டு, அரசியலை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராவும் செயற்படுதல், மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எதிராகச் செயற்படுதல் ஆகிய செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறும் கடிதம் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த கடிதம் மற்றும் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சீமானுக்கு கொலை மிரட்டல்: கமிஷனரிடம் புகார்
நாம் தமிழர் கட்சித் சீமானுக்கும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கமிஷனரிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், 'தமிழ் முழக்கம் வெல்லும்' இதழின் ஆசிரியருமான சாகுல் ஹமீது அளித்த புகார் மனுவில், " புதுச்சேரியிலிருந்து ராம்கோபால் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் செவ்வாய்க்கிழமை சூளைமேடு கில் நகரில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வந்தது.
அதில், சீமானை மிரட்டி பின்வரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் உங்கள் கட்சியின் புதுக்கோட்டை உறுப்பினராக இருந்த முத்துக்குமாரைக் கொன்றவன். என் கட்டளைகளை ஏற்று நீங்கள் நடக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது. ராஜபட்சேவை எதிர்க்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டும். புதுக்கோட்டையில் புரட்சி செய்யக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மேலும் பலருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும் என்பன உள்ளிட்ட மிரட்டல் வாசகங்கள் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் இந்த மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. எனவேஇ இந்தக் கடிதம் குறித்து விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக