News Update :
Home » » தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

Penulis : Antony on ஞாயிறு, 6 மார்ச், 2011 | PM 3:59


முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஏராளமான சோதனைகளையும் தடைகளையும் கடந்துதான் தனது போராட்டத்தை நடாத்தி வந்தது. ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டத்திலே தனித் தலைமைச் சக்தியாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டு – உறுதி தளராத நோக்கத்துடன் - முழு வீச்சுடன் போராட்டத்தை முன்னெடுத்தது.

இவ்வமைப்பானது போரியல் ரீதியில் பல இக்கட்டான காலங்களைக் கடந்து வந்துள்ளது. முக்கிய தளபதிகளின் இழப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிலவிய ஆயுத தளபாடப் பற்றாக்குறை, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக் காலம் என்று பல்வேறு காலங்களில் ஏற்பட்ட போரியல் நெருக்கடிகளைக் கடந்து இயக்கம் தன்னைக் காத்துக் கொண்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது தன்னைப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதும், அதனூடாக ஈழப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் என்றளவில் பலவித சவால்களைச் சந்தித்துள்ளது. பல்வேறு காலகட்டத்தில் இயக்கத்துள் பிளவுகள், துரோகங்கள் என்பன நடந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் தனக்கேயுரிய பாணியில் அந்தச் சவால்களைக் கடந்து இயக்கம் மீண்டு வந்தது.

இவையெல்லாவற்றையும் விட முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஈழத் தமிழினத்துக்கும் பேரிடியாகவே அமைந்தது. இயக்கம் நெருக்கடிகளிலிருந்து மீண்ட பழைய சம்பவங்களை எடுத்துக்காட்டி, அவற்றைப்போல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்தும் இயக்கமும் தமிழினமும் மீண்டுவரும் என்று பத்தோடு பதினொன்றாகச் சொல்லிவிட முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரழிவென்பது மனித குலத்திலேயே ஒரு பெருந்துயரம். பல நாடுகளின் ஒன்றிணைந்த ஆதரவிலும் வழிநடத்தலிலும் சிறிலங்கா அரசு நடத்தி முடித்த மனித வேட்டையே அது. அப்பெரிய இராணுவ இயந்திரத்தை எதிர்த்து அவ்வளவு காலம் தீரமுடன் சமராடிய விடுதலைப் புலிகளினதும் அவர்களுக்குப் பக்கபலமாக நின்ற மக்களினதும் வீரமும் தியாகமும் அளவிட முடியாது. இருந்தபோதும் அளப்பெரிய இராணுவப் பலத்தால் எல்லாம் நாசமாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் எமது தாயகத்தில் வாழும் மக்களும் பேரிடருக்குள் சிக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான போராளிகள் இன்னமும் காடுகளுள் உறைந்துள்ளார்கள், பல படையணிகள் இன்னமும் செயற்பாட்டிலுள்ளன, கடும் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவாறு பல கதைகளைச் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் அப்பட்டமான கட்டுக்கதைகள் என்பதில் ஐயமில்லை.

ஆனால், முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிட்டதாகச் சொல்லப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்குண்டு. அவ்வாறு கட்டியெழுப்பி எமது விடுதலைப் போரை வீச்சோடு முன்னெடுக்க வேண்டுமென்ற அவாவுமுண்டு.

இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதென்பது தெளிவாகத் தெரிகின்றது. தாம் தான் இயக்கம் என்று சொல்லிக்கொண்டு தவறான பேர்வழிகள் சிலர், புலம்பெயர் தமிழரிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றமையை நாம் கண்கூடாகவே பார்க்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முன்னர் இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டுச் செயற்பட்ட சிலர் குழப்பங்களுக்கு அடிகோலாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தலைவர் வரும்போது கணக்கு காட்டுகின்றோம் அதுவரை எம்மிடம் தமிழ் மக்களோ, போராளிகளோ அல்லது பொறுப்பாளர்களோ கணக்கு கேட்கமுடியாது என்ற வகையில் இவர்கள் செயற்படுவது கவலையானதாகும்.

தாயகத்தில் தொடர்பில்லாத நிலையில் கூட்டுமுயற்சியற்ற – தனிநபர் வழிகாட்டல்களும் எழுந்தமான முடிவுகளும் எமது போராட்டத்தைச் சீரிய வழியில் முன்னெடுக்கா என்பதே உண்மை.

இந்நிலையில் ஏற்கனவே பல்வேறு பணி நிமித்தமாக தாயகப்பகுதியை விட்டு வெளியே அனுப்பப்பட்ட போராளிகளோடு, இறுதிவரை களத்தில் நின்று தப்பி வந்த போராளிகளும் இணைந்து தம்மாலான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதை ஊகிக்க முடிகின்றது.

பல்வேறு படையணிகளைச் சேர்ந்த போராளிகளும் துறைசார் பொறுப்பானவர்களும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தலைமைச்செயலகம் என்ற கட்டமைப்மைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவ்வாறானவர்களில் துறைப்பொறுப்பாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவருவதை நாம் காண்கின்றோம்.

இவர்களின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் தற்கால உலக ஒழுங்குக்கு ஏற்றாற்போல் எமது போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் முதிர்ச்சித் தன்மையோடு அமைந்திருப்பதை ஓர் அவதானிப்பாக நாம் கண்டுகொள்ளலாம். இவர்களின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் புலிகளின் இருப்புப் பற்றிய நம்பிக்கையையும் அவர்களின் வழிநடத்தல் பற்றிய நம்பகத்தன்மையையும் தருகின்றன.

இயக்கத்தைத் தக்கவைத்தல், கட்டியெழுப்பல் என்பதோடு எமது போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தற்காலத்தில் சாத்தியமான வழிமுறைகளில் முயன்றுவரும் இவர்களின் முயற்சியில் வெற்றிபெற்று எமது போராட்டம் வீச்சோடு பயணிக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழ்மக்களினதும் விருப்பாகும்.

ஆயிரமாயிரம் வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தாலும், மக்களின் உறுதியான ஆதரவாலும் கட்டி வளர்க்கப்பட்ட இயக்கம் அழிந்துபோகாது என்பதோடு தலைவரினால் வளர்க்கப்பட்டுப் புடம்போடப்பட்ட போராளிகளும் தளபதிகளும் நெறிதவறவோ சோர்ந்து ஒதுங்கிவிடவோ மாட்டார்களென்ற நம்பிக்கையுண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மட்டுமே எமது மக்களை ஒருகுடையின் கீழ் செயற்பட வைக்க முடியும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டு, சமாந்தரமான தளங்களில் முன்னெடுக்கப்படுகின்ற தமிழீழ மக்களின் விடுதலைக்கான பல்வேறான செயற்றிட்டங்களுக்கும் இயன்ற பங்களிப்பை செய்வதும் உதவிகளைச் செய்வதும் தமிழரின் கடமையுமாகும்.

ஈழநேசன் ஆசிரியர்பீடம்
ஈழநேசன்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger