
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ள இந்தியா அவசரகாலச்சட்டத்தையும் உடனடியாக நீக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளது.
மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் இந்தியாவின் நிலைப்பாடு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நேற்றுக்காலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அதற்கு முன்னர் அவர், இந்தியாவின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போது, ஐ.நா நிபுணர்குழுவின் போர்க்குற்ற அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்கு இந்தியா நேரடியாகப் பதிலளிக்காத போதும், சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய சில விடயங்களை அழுத்திக் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்புகளின் முடிவில் இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நேற்றுமாலை வெளியிட்டன.
அதில் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை பற்றியோ அதுதொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றியோ ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை இந்தியா வலியுறுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வைத்து இந்தியா பல்வேறு விடயங்களை சிறிலங்காவிடம் அழுத்தமாக கூறியுள்ளது.
அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு, மீனவர்களின் பிரச்சினை, இந்தியாவின் திட்டங்களுக்கு இருந்து வந்த தடைகளை அகற்றல், அவசரகாலச் சட்டநீக்கம், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய விசாரணை என்று இந்தியா பல்வேறு விடயங்களை உடனடியாக நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு அழுத்திக் கூறியுள்ளது.
அந்தக் கூட்டறிக்கையின் முழு விபரம் வருமாறு-
1. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த 15 திகதி முதல் 17ம் திகதி வரை புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
2. அவர் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமாராவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
3. இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் 16ம் நாள் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்திய போது, இரு தரப்பினரும் பரஸ்பர நல்லுறவு பற்றிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
2010ம் ஜூனில் சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. 2010ம் நவம்பரில் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட கூட்டு ஆணைக்குழு கூட்டம் பற்றிய விபரங்களும் ஆராயப்பட்டது.
4. சிறிலங்காவில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமானது, பல விடயங்களை புரிந்துணர்வுடனும், பரஸ்பர விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும், உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் தூரநோக்கையும் கையாள்வதற்கான அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்க்கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்களில் விரைவில் உறுதியான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமது அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறினார்.
சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியுமென்றும் சிறிலங்கா தரப்பு வலியுறுத்துகின்றது.
5. மீள்குடியேற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளான- தடுத்து வைத்திருத்தல், சட்டம், ஒழுங்கு, நிர்வாகம், மொழிப் பிரச்சினை, சமூக, பொருளாதார, வாழ்வாதாரப் பிரச்சினை போன்ற நடைமுறைப் பிரச்சினைகள் இருப்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு, சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தி, மீள்குடியேற்றத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதன் மூலம், இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கு வகை செய்ய வேண்டும், அவசரகாலச்சட்டவிதிகளை கூடிய விரைவில் விலக்கிக் கொள்ள வேண்டும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்த வேண்டும், இயல்புநிலையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
6. இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணத்தையும், மீள்குடியேற்றத்திற்கான வசதியையும் செய்து கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்கும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை மேற்கொள்வதிலும், காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், பலாலி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், மருத்துவமனை மற்றும் பாடசாலைகளைத் திருத்துவதற்கும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும், தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும், யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பதற்கும், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனர்நிர்மாணம் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நல்ல நிலையில் இருப்பதற்கும் இருதரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.
7. இந்தியாவின் உதவியுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொடருந்துப் பாதை அமைப்புத் திட்டங்கள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தத் திட்டங்களை நேரகாலத்தில் பூர்த்தி செய்வதற்கும் தாங்கள் வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
2010ம் ஜூன் 9 கூட்டறிக்கையின் படி, கூட்டு அனல் மின்சார திட்டத்தை திருகோணமலையின் சம்பூரில் பூர்த்தி செய்வதற்கும், அதனையடுத்து உடன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள பளை- காங்கேசன்துறை தொடரூந்துப் பாதையை மீள் நிர்மாணம் செய்தல், புதிய சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கும், கூட்டுப் பொருளாதார உடன்பாட்டை விரைவில் தயாரித்து முடிப்பதற்கும் இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.
இந்திய, சிறிலங்கா மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்துவது பற்றிய பகுப்பாய்வு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்தனர்.
பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதிலும் சிறிலங்கா, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.
8. 2011 மார்ச் 28,29ம் நாட்களில் புதுடெல்லியில் நடைபெற்ற கடற்றொழில் பற்றிய கூட்டு செயற்குழு கூட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்துவதை விட கடற்றொழிலாளர்களை மனிதாபிமான முறையில் நடத்துவது அவசியம் என்ற கருத்தை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
சிறிலங்கா கடல் எல்லைப் பிரதேசத்தில் இந்திய கடற்றொழிலாளர் களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், இது குறித்து இந்திய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2008 ஒக்டோபர் 26ம் நாள் கடற்றொழில் ஒழுங்கு முறைகள் பற்றிய கூட்டு அறிக்கையைடுத்து, இப்போது இந்த வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதை இருதரப்பினரும் ஏற்றுள்ளனர். சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான உத்தேச உடன்பாட்டை விரைவில் பூர்த்தி செய்வதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
9. இரு தரப்பினரும் மக்களிடையே கலாசார நட்புறவையும் ஒருவர் ஒருவருடனான தொடர்புகளை வளர்த்து, நட்புறவை பேணிப் பாதுகாப்பதற்கு உதவக் கூடிய வகையில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும், இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
சிறிலங்காவில் உள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறிலங்காவின் துறைமுக சேவைகளை விருத்தி செய்தல் தொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் முதலீடு செய்வதற்கும் இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.
10. ஐ.நா பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளன.
11. ஐ.நா. பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியாவுக்கு உரித்தான ஒரு அங்கத்துவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு சிறிலங்கா வலுவான ஆதரவை அளிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக