News Update :
Home » » கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க

கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க

Penulis : Antony on சனி, 14 மே, 2011 | பிற்பகல் 2:24


கொலைக்குற்றவாளியாகி கம்பி எண்ணவிருந்த மஹிந்த ராஜபக்ஷவை தப்பவிட்டு, ஜனாதிபதியாக வரவிட்டது ரணில் விக்கிரமசிங்கவின் குற்றமென பொலிஸ் மா அதிபர் குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வெளியாட்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபரை கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்திருந்தார். அதன் காரணமாக மனம் நொந்துபோன அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் மனக்குறையை வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது பொலிஸ் மா அதிபர் பாலசூரிய இதுவரை வெளிவராமல் பொலிஸ் புத்தகங்களுக்குள் மட்டும் மறைந்து போயிருந்த பல உண்மைகளைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் விபரம் கீழ்வருமாறு,

1991ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருக்கமான பிரதேச அரசியல் சகாவான பெலியத்தை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.கே. குணரத்தின என்பவர், பிரதேச சபையின் பதவிப் பிரச்சினையொன்றின் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

அதன் பின் பெலியத்தை பிரதேச சபைத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.அதன் மூலம் அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பெரும் தடைகள் ஏற்பட்டது.

ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபின் 1997ம் ஆண்டு பிரஸ்தாப குணரத்தின மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 1997ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் காமினி அத்துக்கோரளையும் இணைந்து பெலியத்தையில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. பொதுச் செயலாளருமான காமினி அத்துக்கோரளை, ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் கொலையாளிகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் படுகொலை மாத்திரமன்றி, தங்காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜினதாச வீரசிங்கவின் புதல்வர் லலித் வீரசிங்க படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் விசாரிக்கவென குற்றப்புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அன்றைய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க பிரஸ்தாப படுகொலைச் சம்பவங்களின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்கவிடம் ஒப்படைத்திருந்ததுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ். ஞானரத்தின அவரின் கீழ் பணியாற்றியிருந்தார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவின் விசாரணைகளின் போது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் அன்றைய (1994-2002) அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான சகாவான சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருந்தன.

அவரைக் கைது செய்து விசாரித்தபோது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவே தன்னைப் பணித்திருந்ததாகவும், கொலைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் ரகத்தைச்சோ்ந்தது என்றும், அதனை மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையில் அமைந்திருக்கும் கால்டன் வீட்டின் மேற்கூரையில் ஒளித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

விசாரணையில் வெளிவந்த தகவல்கள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் பணிக்கப்பட்டுள்ளார்.

அதற்கேற்ப உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராபஜக்ஷவைக் கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், அது பற்றிய தகவல் அறிந்த அவர் உடனடியாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் கெஞ்சியிருக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவைத் தொடர்பு கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.ஆயினும் ஜோன் அமரதுங்க அதற்கு பெரிதாக இசைந்து கொடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்போது அவருக்கு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கமளித்த ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவைக் கைதுசெய்வதென்பது அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அரசியல் ரீதியில் பெரும் அனுகூலமாக அமைந்து விடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியிலான பிளவுகள் தொடர இடமளிப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை பயக்கும் என்பதன் காரணமாக இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் களநிலவரம் அறிந்து பணியாற்றுமாறு அவர் ஜோன் அமரதுங்கவைப் பணித்துள்ளார்.

அதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவைத் தனது மொபைல் போன் ஊடாகத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசாரணை நடவடிக்கைககளைக் கைவிட்டு உடனடியாகக் கொழும்புக்குத் திரும்பி வரும்படி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி அதன்பின் படுகொலை செய்யப்பட்ட குணரத்தின மற்றும் லலித் வீரசிங்க ஆகியோரின் கொலைச்சம்பவங்களின் விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதன் பின் வந்த காலத்தில் பிரஸ்தாப விசாரணை தொடர்பாக தங்காலை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகம் என்பவற்றில் பாதுகாக்கப்பட்டிருந்த அறிக்கைகளும் காணாமற்போயிருந்தன.

அதன்பின் வந்த காலப்பகுதியில் விசாரணைகளின் போது தன்னைக் காட்டிக்கொடுத்த கடுப்பில் தென் மாகாண அமைச்சராக இருந்த சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித்தை வம்பொட்டா என்றொரு பாதாள கும்பல் தலைவன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ தீர்த்துக் கட்டியிருந்தார்.அதனையடுத்து வந்த சில வருடங்களுக்குள் வம்பொட்டாவும் இனந்தெரியாத நபர்களால் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட படுகொலைகளிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இன்றைக்கு நாட்டின் ஜனாதிபதியாக வீற்றிருக்கும் அதிர்ஷ்டமும் அவருக்குக் கிட்டியுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger