News Update :
Home » » புலித்தேவனுக்கு பாலித கோஹன்ன தகவல் வழங்கினாரா?

புலித்தேவனுக்கு பாலித கோஹன்ன தகவல் வழங்கினாரா?

Penulis : Antony on சனி, 14 மே, 2011 | பிற்பகல் 12:45

மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அ!வுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் Sydney Morning Herald ஊடகத்தின் செய்தியாளர் Ben Doherty எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

சிறிலங்காவில் முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தம் இடம்பெற்ற இடம். அவ்வேளையில், தொலைபேசி ஊடாகவும் வேறுவழிமுறைகளிலும் நிபந்தனையற்ற சரணடைதலுக்குப் ஒப்புக்கொண்ட புலிகள் போர் வலயத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான வழிகளை கோரியிருந்தனர்.

தற்போது இச்சம்பவம் நிகழ்ந்து இரு ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியப் குடியுரிமை பெற்றவரும், மூத்த சிறிலங்கா இராஜதந்திரியுயான பாலித ஹோகன்ன, சரணடைய வந்த தமிழர்களைக் கொலை செய்தமைக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இரத்தம் தோய்ந்த முல்லைத்தீவுக் கடற்கரையில் முடிவுற்ற சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு Herald [Sydney Morning Herald] ஊடகத்தின் விசாரணையானது ஒரு இறுதி முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் தனிநாடு கோரி சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கால் நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட போரானது மே 2009ல் முடிவுக்கு வந்தது.

சிறிலங்காத் தீவின் மூன்றில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த பயங்கரவாத புலிகளின் இராணுவம் கடலால் சூழப்பட்ட, கடல்நீரேரியான, குறுகிய கரையோரப்பகுதிக்குள் தள்ளப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டது.

பெரும்பாலான புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதைவிட சாகும் வரை போராடவே விரும்பினார்கள். ஆனால் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறுவழியின்றி சரணடைய முன்வந்தனர்.

மூர்க்கமான எறிகணைத்தாக்குதல்களின் மத்தியில் போதியளவு சார்ஜ் அற்ற பற்றறிகளைக் கொண்ட செல்லிடத்தொலைபேசிகளின் உதவியுடன் புலிகள் தம்மைக் காப்பாற்றக்கூடிய எல்லோருக்கும் தமது நிலைப்பாடுகள் தொடர்பான தகவல்களை அனுப்பினர்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் தமக்குத் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரின் உதவியையும் புலிகள் இறுதி நேரத்தில் நாடினர்.

அவர்கள் பல அழைப்புக்களை தொலைபேசிகளின் வழியே மேற்கொண்டனர். சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலரும், புலிகளிற்கெதிரான சிறிலங்காப் படைகளின் யுத்தத்தின் போது தமது தரப்புத் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பாலித ஹோகன்ன விற்குப் புலிகள் ஐரோப்பிய இடைத்தரகர் ஒருவரின் ஊடாக தகவல் ஒன்றை வழங்கியிருந்தனர்.

சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித ஹோகன்ன வெளிநாட்டு வர்த்தக மற்றும் விவகாரங்கள் என்ற திணைக்களத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இராஜதந்திரியாகவும் வர்த்தகத் துறைக்கான சமரசவாளராகவும் செயற்பட்டிருந்தார்.

இவர் தற்போது சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் அவுஸ்திரேலியத் தூதராகவும் உள்ளார்.

புலிகளின் சமாதானச் செயலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த புலித்தேவனால் அனுப்பப்பட்ட தகவலைப் இவர் பெற்றிருந்தார். புலித்தேவன் ஒரு இராணுவ வீரர் அல்லர். ஆனால் இவர் புலிகளின் கொள்கை தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமான நபராவார். அவர் நிபந்தனையற்ற சரணடைதலுக்கான தகவலை வழங்கியிருந்தார்.

இவருடன் இணைந்து இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் புலிகளின் அரசியற் பொறுப்பாளராகச் செயற்பட்ட நடேசன், புலிகளின் கேணல்களில் ஒருவரான ரமேஸ், மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் முல்லைத்தீவுக்கரையிலிருந்து செல்ல விரும்பினர்.

சில மணித்தியாலங்களின் பின்னர் வெள்ளைக்கொடியுடன் இவர்கள் பாதுகாப்பாக சரணடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 58வது இராணுவ நிலைக்கூடாக பாதுகாப்பான வழியில் இவர்கள் சரணடைவதற்குரிய ஒருவழியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. படைவீரர்களிடமும் இவர்களை எதிர்பார்க்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மே 17 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.46 மணிக்கு மூன்றாந்தரப்பின் உதவியுடன் புலித்தேவனுக்கு ஹோகன்னவிடமிருந்து எழுத்து மூலத்தகவல் ஒன்று தொலைபேசி ஊடாக வழங்கப்பட்டது.

"படையினர் நிலைகொண்டிருக்கும் இடத்திற்கூடாக மிக மெதுவாக நடந்து வரவும். அத்துடன் வெள்ளைக்கொடியைக் கையில் ஏந்தியவாறு தரப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். இராணுவ வீரர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் தொடர்பாக அச்சமடைகிறார்கள்" என அந்ததகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு புலித்தேவன், நடேசன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உள்ளடங்கலாக வெள்ளைக் கொடிகளைத் தமது தலைக்கு மேலால் உயர்த்தியவாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக 58வது இராணுவ நிலைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

யுத்த வலயத்தில் இவர்கள் இராணுவத்திடம் சரணடையச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழர் ஒருவர் பின்வருமாறு தனது கருத்தை Herald இடம் கூறுகிறார். இவர் இச்சம்பவத்தின் பின்னர் சிறிலங்காவை விட்டு வெளியேறிவிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவரது பெயர் தெரியப்படுத்தப்படவில்லை.

"எனது இரு கண்களாலும் அவர்களை நான் கண்டேன். புலித்தேவன், நடேசன் முன்செல்ல ஏனையோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களின் கைகளில் ஆயதங்கள் இருக்கவில்லை. அவர்கள் நிராயுதபாணிகளாகவே இருந்தார்கள். இராணுவ வீரர்களை நோக்கி அவர்கள் நடந்து சென்றார்கள். அந்த வீரர்கள் truck வாகனங்களை வைத்திருந்தனர். அந்த வாகனங்களின் பின்னால் சரணடையச் சென்றவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்னர் எங்களால் அவர்களைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் எமக்குத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முனகும் ஒலியும் கேட்டது. துப்பாக்கிப் பிரயோகம் இயந்திரத் துப்பாக்கிகள் போன்று மிகவேகமானதாக இருந்தது".

"அவர் சரணடைய முன்வருகிறார். ஆனால் நீங்கள் அவரை சுடுகிறீர்கள்" ஒரு சிங்களப் பெண்ணான புலித்தேவனின் மனைவி படைவீரர்களிடம் இவ்வாறு கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இடம்பெற்று அரை மணித்தியாலத்தில் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களின்; வாயிலாக வெளிவந்தது. புலித்தேவனது மனையிவின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய நாள் யுத்தமும் ஓய்வுக்கு வந்தது.

அதன் பின்னர் வந்த சில நாட்களில் சரணடையச் சென்றவர்கள் சிலரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் நிறையப் பேரின் உடலங்கள் கிடைக்கவில்லை. இராணுவத்திடம் சரணடையச் சென்றவர்கள் உயிருடனில்லை என நம்பப்படுகிறது.

புலிகளுடன் எவ்வித சமரச முயற்சிகளையும் மேற்கொள்ளும் நோக்குடன் தான் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என Herald இடம் ஹோகன்ன தெரித்தார். "நான் சிறிலங்காவின் வெளியுறவுச் செயலர். படையினருக்குக் கட்டளையிடும் அதிகாரமோ அல்லது பயங்கரவாதிகள் சரணடைதல் தொடர்பாகக் கலந்தாலோசிப்பதற்கான அதிகாரமோ எனக்கில்லை. இதனை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யமுடியாது" சரணடையச் சென்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தன்னால் நம்பமுடியாமல் உள்ளதாக ஹோகன்ன தெரிவித்தார்.

"தொலைபேசி வழிவந்த எழுத்த மூலத்தகவல் ஒரு விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் புலிகளுடன் தொடர்புடைய எவரும் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை. சரணடைவதற்குரிய முயற்சிகளைச் செய்யவேண்டும் என்ற ரீதியில் அந்தத்தகவல் அனுப்பப்படவில்லை. அதனைச் செய்வதற்குரிய அதிகாரமும் எனக்கிருக்கவில்லை" என்கிறார் ஹோகன்ன.

மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரனான பாதுகாப்புச் செயலர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரதும் ஒப்புதலுடனும் புலிகளின் தலைவர்களால் அனுப்பப்பட்ட சரணடைவதற்கான வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட சிறிலங்கா விவகாரம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பசில் ராஜபக்சாவின் ஆலோசனைக்கமைவாக வெள்ளைக்கொடிகளை உயர்த்தியவாறு இராணுவ முன்னரங்கை நோக்கி மெதுவாக நடந்துவரும்படி புலிகளின் தலைவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது"

புலிகள் சரணடைவதை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுத்த பசில் ராஜபக்ச மற்றும் அவரது மற்றுமொரு சகோதரனான கோத்தாபய ஆகிய இருவரிடமும், புலிகளின் தலைவர்களிடமும் நோர்வேத் தூதர் தொடர்பைக் கொண்டிருந்தார் என்பது அமெரிக்கத்தூதரக வட்டாரத் தகவல்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன.

சரணடையும் சகல புலிகளையும் வழமையான நியமங்களுக்கு உட்படுத்தாமல் உடனடியாக கொலைசெய்யுமாறு சண்டைக்களத்திலிருந்த இராணுவத்தளபதி ஒருவரால் படைவீரர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவரிடம் Herald மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நிராயுதபாணிகளாகச் சரணடைந்த புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்று ஏனைய தமிழ்மக்கள் சரணடைவதை உறுதிப்படுத்திக்கொண்டது.

மனிதாபிமான மீடபு நடவடிக்கையைத் தான் மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

"பொதுமக்கள் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி அரசாங்கம் தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது" என இவ்வாரம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

புலித்தேவன் மற்றம் நடேசனின் மரணம் தொடர்பாக தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை என Herald இடம் ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஏறறுக்கொள்ளமுடியாதது போல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தென்படுகிறது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger