
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இப்பணம் கொடி கொண்டா பொலிசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது. இதையடுத்து கார் ஓட்டுனர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சென்னை தொழில் அதிபரின் கார் ஓட்டுனர் சந்திரசேகர், பெங்களூரை சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சொகுசு பேருந்தில் கடத்தப்பட்ட பல கோடி பணத்தையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து புட்டபர்த்தி பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர் ரத்னாகர், சென்னை தொழில் அதிபர் ஆகியோருக்கு பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
இந்நிலையில் சாய்பாபாவுக்கு மிகவும் நெருக்கமான அமெரிக்க பக்தர் ஐசக் டிரிகேட் புட்டபர்த்தியில் நிருபர்களிடம் கூறியதாவது, நான் அமெரிக்காவில் பீர் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. நிம்மதி கிடைக்கவில்லை. போதைக்கு அடிமையாகி மிகவும் கஷ்டப்பட்டேன். எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா பற்றி கேள்விப்பட்டு இந்தியா வந்தேன். அவரது ஆசியால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு மன நிம்மதி கிடைத்தது. இதனால் அடிக்கடி இந்தியா வந்து சாய்பாபாவை சந்தித்தேன். இதனால் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக புட்டபர்த்தி ஆசிரமத்தில் தங்கி உள்ளேன். சாய்பாபா என்னிடம் மனம் திறந்து பேசுவார். அப்போது அவர் தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது? தான் உயிலில் எழுதப் போவது என்ன? போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது, சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள், கோடிக் கணக்கான பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆந்திர அரசு இனியும் மவுனமாக இருப்பது நல்லதல்ல. சாய்பாபா ஆசிரம சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும். ஆசிரமத்தில் நடந்த கொள்ளை பற்றி விரிவான விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துரையிடுக