அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல், அரசியல் நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட இரா. சம்பந்தன், அளவெட்டியில் கடந்த 16ம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது சிறிலங்காப் படையினரே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக முறைப்படியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல் இது என்று வர்ணித்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் ஏற்படுவதை சிறிலங்காப் படையினர் தடுக்க முனைவதை இது வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக